Tuesday, June 5, 2012

மூன்றாம் புறம் - பகுதி 3



3. நவீன சுயம்வரம்
மறு நாள் வரப் போகும் தன்னுடைய பிறந்த நாளைப் பற்றியே சியாமளாவின் சிந்தனை சுழன்று கொண்டிருந்தது.  நாளை அவள் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தம்!
சியாமளா யாரையும் காதலிக்கவில்லை.  தன் பெற்றோர் சுட்டிக் காட்டும் பையனைக் கணவனாக ஏற்றுக் கொளள அவள் தயார்!  ஆனால், அவர்களோ ஆளுக்கொரு பையனைச் சுட்டிக் காட்டுகிறார்களே?
பிறந்ததிலிருந்து இன்று வரை சியாமளாவுக்கு எல்லாமே ஏறுமுகம் தான்.  சிவில் எஞ்ஜினீரிங்க் பட்டத்துடன் பெங்களூர் கம்பெனியொன்றில் வேலை பார்த்த அவளது தந்தை மகாலிஙகம், சியாமளா பிறந்தபின் தான் தன்னுடைய நண்பர் மந்திரமூர்த்தியுடன் சேர்ந்து சாமந்தி கன்ஸ்ரக்‌ஷன் கம்பெனியைத் தொடஙகினார்.  சியாமளா அழகோடும் திறமையோடும் வளர வளர, சாமந்தி கம்பெனியும் பெங்களூரில் பேரோடும் புகழோடும் வளர்ந்தது.

காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப, கட்டுமானத் துறையில் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, தங்களுடைய வாரிசுகள் சிறப்பு கல்வி பெற மகாலிங்கமும் சுந்தரமூர்த்தியும் அவர்களைத் தயார் செய்திருந்தனர்.

மந்திரமூர்த்தியின் இடத்தில் இப்போதைய பார்ட்னர் அவரது மகன் பாஸ்கர்.  அதைத் தொடர்ந்து, மகாலிங்கத்துக்குப் பதிலாக அவரது மகள் சியாமளா புதிய பார்ட்னர்.  மேலும், நிர்வாகத்தில் மேற்படிப்பு முடித்த மகாலிங்கத்தின் அக்கா மகன் வாசு, கம்பெனியின் புதிய ஜெனரல் மேனேஜர்.

இந்த மூவர் கூட்டணியால், பெங்களூரில் மட்டுமே இயங்கி வந்த சாமந்தி கம்பெனி, வெகு குறுகிய காலத்தில் கர்நாடகாவின் பல இடங்களில் கிளை விட ஆரம்பித்தது.

கம்பெனியின் விரிவாக்க வேலைகளின் நிமித்தம் பாஸ்கர், வாசு சகிதம் சியாமளா கர்நாடகாவின் பல இடங்களுக்குச் செல்ல நேரிடுவதால், சியாமளாவின் அம்மா நித்யா, பெண்ணின் திருமணத்தைப் பற்றித் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

அதற்கு வேறு காரணமும் உண்டு.  சமீப காலமாக, தன்னுடைய கணவன் மகாலிங்கம், பாஸ்கரை ஓஹோ என்று புகழ ஆரம்பித்தது நித்யாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.  அதன் பின்னணியில் ஏதோ உந்துதல் இருப்பதாக அவள் சந்தேகித்தாள்.

கம்பெனியின் நலனுக்கு எதிராக சில முறை நடக்க முயன்ற தன் கூட்டாளி மந்திரமூர்த்தியை தன்னுடைய கணவர் கண்குத்திப் பாம்பாக இருந்து அவ்வப்போது கண்டித்து அடக்கி வைத்தது நித்யாவுக்குத் தெரியும்.

வியாபாரத்தையும் தன்னுடைய குடும்பத்தையும் ஆரம்பத்திலிருந்தே வெவ்வேறாகப் பார்த்தவர் மகாலிங்கம்.  உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அவர் உதாரண புருஷர்.  தனது அன்னை இறந்த பின், கணவனை இழ்ந்து மகன் வாசுவுடன் தனியாக வசித்துக் கொண்டிருந்த அக்கா அன்னபூர்ணியைத் தன் குடும்பத்தை வழி நடத்தத் தன்னுடனே இருக்க வைத்தவர் அவர்.  அப்படிப் பட்ட கணவர், இப்போது எப்படி மந்திரமூர்த்தியையும் அவரது மகன் பாஸ்கரையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்! அது எதற்காகவாயினும் இருக்கட்டும்...எனது மகள் சியாமளாவின் கழுத்தில் தாலி கட்டும் உரிமை என் நாத்தனார் மகன் வாசுவுக்குத் தான் உண்டு.  அன்னபூரணி நாத்தனாரும் தன் தம்பி மகள் மருமகளாக வருவதையே விரும்புகிறாள்.

போன வாரம் சியாமளாவுக்கும் அவளது பெற்றோருக்கும் அன்னபூரணி இரவு உணவு பறிமாறிய போது, சியாமளாவுக்கும் வாசுவுக்கும் கல்யாணம் உடனடியாக நடக்கவேண்டுமென்று நித்யா ஆரம்பிக்க, பாஸ்கர்தான் மாப்பிள்ளையென்று மகாலிங்கம் அடம் பிடிக்க, தனக்கு யார் துணையாக வரவேண்டுமென்கிற தன் விருப்பத்தை பிறந்த நாளன்று சொல்வதாக சியாமளா அந்தப் பிரச்சினையைத் தள்ளிப் போட்டு ச்மாளித்தாள்.
 
இதோ, விடிந்ததும் தன் பிறந்த நாள்.  மந்திரமூர்த்தியும், பாஸ்கரும் விருந்துக்கு வருவார்கள். வாசுவை சிறு வயதிலிருந்தே அவள் அறிவாள்.  மிக நல்லவன்.  பாஸ்கரைப் பார்ட்னர் என்ற முறையில் தான் பழக்கம்.  வாசுவை கல்யாணத்துக்கு ஓகே செய்தால் அப்பாவுக்குக் கோபம் வரும்.  பாஸ்கரை டிக் செய்தால் அம்மா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்!  என்ன செய்யலாம்?

என்னம்மா சியாமளா...யோசனை பலமா இருக்கே!” - நரசிம்மாச்சாரியின் குரல் சியாமளாவைச் சிந்தனையிலிருந்து மீட்டது.

வாங்க மாமா....உக்காருங்க

என்னமோ பெரிய விஷயம் உன் மனசில இருக்கு...நான் கரடி மாதிரி வந்துட்டேனா?”

அதெல்லாமில்லே...ஒரு சின்ன பிரச்சினைதான்...நீங்க என்ன சாப்பிடறீங்க மாமா?”

ஒன்னும் வேண்டாம்மா...மொதல்ல, வாசல்ல யாரு வந்திருக்கா பாரு!

வந்தவனைப் பார்த்ததும் சியாமளாவுக்கு வியப்பு கலந்த ஆனந்தம்..மறக்க முடியுமா இவனை!

சாதனைக் கனவுகளுடன் வியாபாரப் பொறுப்பை ஏற்ற சியாமளாவின் முதல் முயற்சி, கடைசி சில நிமிடங்களில் கை விடப்படும் நிலைக்கு வந்து அவள் மனமொடிந்தபோது, ஆபத்பாந்தவனாக எங்கிருந்தோ வந்த இவன்தான் உதவிக் கரம் நீட்டி, அவளது வெற்றிக்கு வழி வகுத்தான்.

நாற்பது கோடி ரூபாய் அரசாங்க டெண்டர்.  ஐந்து நிமிடங்களே உள்ள நிலையில், பத்திரங்கள் அடங்கிய பெட்டியை சியாமளாவிடமிருந்து எவனோ அபேஸ் செய்து கொண்டு ஓட, சாலையோரம் நின்றிருந்த கோகுலகிருஷ்ணன் அதிரடியாகத் திருடனை ஓடிப் பிடித்து, சியாமளாவிடம் பெட்டியை ஒப்படைத்தான்.  பிரதிபலன் ஏதும் பாராமல் உடன் வெளியேறி மறைந்தான்.

காலத்தே செய்த உதவி ஞாலத்திலும் பெரிதல்லவா?  ஊர் பேர் தெரியாத அந்த உபகாரியைக் கண்டுபிடித்து, பதிலுக்கு ஏதாவது அவனுக்குச் செய்யத் துடித்தாள் சியாமளா.  அவன்தான் இப்போது எதிரே நிற்கிறான்.

தான் உயர்வதற்கு ஒரு கருவியாய் இருந்தவனை இப்போது தன் கண்ணெதிரே கொண்டு நிறுத்திய குடும்ப நண்பர் நரசிம்மாச்சாரிக்கு சியாமளாவின் பார்வை மரியாதை கலந்த நன்றி சொன்னது.

இந்த கோகுலகிருஷ்ணனை தேடிப் பிடிச்சு உன் கிட்டே அழச்சுண்டு வ்ற்றதுக்கு பெரும் பாடு பட்டுட்டேம்மா.  ஆளு என்னமோ அன்னாடம் காய்ச்சிதான்.  ஆனா, காசு தறேன்னா கிட்ட வராதேங்கறான்!  வேலை வாங்கித் தறேன்னா பொழச்சுக்க எனக்குத் தெரியும்கிறான்.  தமிழ்நாட்டிலேந்து கர்நாடகாவில செட்டிலானவர் இவனோட தாத்தா.  அம்மா செத்துட்டா..அப்பன் வேற ஒருத்தியொட ஓடிட்டான்..தாத்தாவும் சமீபத்தில மேல போயிட்டார்

சியாமளா, கோகுலைப் பச்சாபத்துடன் பார்த்தாள் -

கோகுல்...நீ அநாதையில்ல...இனிமே, எஙக குடும்பத்தில நீயும் ஒருத்தன்...இங்கியே இருந்துடு

சந்தோஷப் படுவானென்று பார்த்தால், கோகுல் சிடுசிடுத்தான்!

கேட்டீங்களா சாமி..இதுக்குத் தான் நான் வரமாட்டேன்னு சொன்னேன்

சாரி அவனைத் தாஜா பண்ணினார் -

கோவிச்சுக்காத கோகுல் கண்ணா

கோகுலகிருஷ்ணன்...கிருஷ்ணாம்பட்டி கோகுலகிருஷ்ணன்

சரி...சரி...சொந்த ஊரை நீ மறக்கலே....உன் தாத்தாவோட கடைசி ஆசைப் படி கிருஷ்ணாம்பட்டிக்கு நீ போகணும்...பாட்டன் நிலத்தை உழணும்...பரம்பரை வழக்கப்படி, ஊர்ல கூத்து போடணும்...இதானப்பா?”
ஆமாங்க...அதோட இன்னொரு கடமையும் எனக்கு இருக்கு...ஆனா, அது என்னன்னு சொல்லமாட்டேன் சாமி

பயங்கரமான ஆளுப்பா நீ!  மொறைக்கிறே...மறைக்கிறே! உன் பாட்டன் நெலத்தில நீ என்ன வேணா பண்ணிக்க..எதுக்கு உன்னைத் தேடிப் பிடிச்சு இங்க அழ்ச்சுண்டு வந்தேன்னு சொல்லிடறேன்...நீ அன்னைக்கு சியாமளாவுக்கு சரியான சமயத்தில உதவி பண்ணே...பதிலுக்கு சியாமளா உனக்கு ஏதாவது செய்யணும்னு ஆசைப் படறா..சியாமளா...நீ என்ன பண்றே...கோகுல் தன்னோட சொந்த ஊருக்குப் போக நீ ஏற்பாடு பண்றே...அதோட, ஊர் போக செலவுக்கு, அங்க தங்கறதுக்கெல்லாம் பணம் வேணுமே...அதுக்கு உன் வீட்டுத் தோட்டத்தில கோகுலை வேலை பாக்க வச்சு, இவன் சம்பளத்தை சேத்து வச்சு கிருஷ்ணாம்பட்டிக்கு கோகுலை அனுப்பறே...என்னப்பா..சரியா?”

கோகுல் முகத்தில் மகிழ்ச்சி துளிர் விட்டது -

ரொம்ப சந்தோசம் சாமி...சின்னம்மா, நான் தோட்டத்துக்குப் போயி வேலையை ஆரம்பிச்சிடறேங்க..ஆனா, இப்பவே சொல்லிப்புடறேன்...என்னோட ஊருக்கு சீக்கிரமா அனுப்பிடுங்க

கோகுல் அகன்றதும், சியாமளா நெகிழ்ச்சியுடன் தேங்க்ஸ் மாமாஎன்றாள்.

இப்படி ஒத்தை வார்த்தையில முடிஞ்சு போற விஷயமில்லேம்மா இது! கிருஷ்ணாம்பட்டியில கோகுலை சேக்கறது ரொம்ப முக்கியம்

கிருஷ்ணாம்பட்டின்னா, தமிழ்நாட்டிலதான் இருக்கணும்..எங்க மாமா இருக்கு?”

கேட்டியே...இது கேள்வி!  கோகுலுக்கே தன் பாட்டன் பூமி கிருஷ்ணாம்பட்டி எங்க இருக்குன்னு தெரியாதுங்கறான்! தமிழ்நாடு பூரா சுத்தற எனக்கும் தெரியலே...நக்மா அத்திப்பட்டு கிராமத்தைக் கண்டுபிடிச்சா மாதிரி, நீதாம்மா கிருஷ்ணாம்பட்டியைக் கண்டுபிடிச்சு, கோகுலோட ஆசையைப் பூர்த்தி செய்யணும்

சியாமளா உடனடியாக பாஸ்கரையும், வாசுவையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்.  மூவரும் இணையதளம் போன்ற சாதனங்களை அலசிப் பார்த்தனர்.   கிருஷ்ணாம்பட்டி பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை!

சியாமளாவுக்குச் சட்டென ஒரு யோசனை தோன்றியது.  கோகுலுக்கு உதவி செய்வது மிக மிக முக்கியம்.  அதற்கு பாஸ்கர், வாசு இருவரில் பெரிதும் உறுதுணையாக இருப்பவரே தன்னுடைய கணவனாக வர விருப்பம் என நாளை தன்னுடைய பிறந்த நாளில் அறிவித்தால் என்ன?

தன்னுடைய மணவாழ்க்கைப் பிரச்சினையை கோகுலின் லட்சியத்துடன் முடிச்சுப் போடும் தன் எண்ணத்தை சாரியிடம் சொன்னாள் சியாமளா.

எந்தப் பிரச்சினை காதில் விழுந்தாலும், அதில் தன் மூக்கை நுழைப்பதென்பது சாரிக்கு லட்டு சாப்பிடுவது மாதிரி! சினிமாத் துறையில் டைரக்டரிலிருந்து லைட் பாய் வரை, யார் பற்றிய கசமுசா கிளம்பினாலும், தவறு செய்வர்களை எல்லோர் முன்னிலையிலும் கண்டிக்கும் கில்லாடி மாமா அவர்!

மறு நாள் சியாமளாவின் பிறந்த நாள் விழாவில் நரசிம்மாச்சாரியும் ஆஜர். அனைவர் முன்னிலையில் அவர் சியாமளாவின் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார்.  கோகுலின் ஊர்க் கனவை விவரித்த சாரி, கிருஷ்ணாம்பட்டி பற்றிய விவரங்களைக் கண்டுபிடிப்பதில் சியாமளாவுக்கு பாஸ்கரும், வாசுவும் போட்டி போட்டுக் கொண்டு உதவ வேண்டும்.  அதில் முந்துபவரே சியாமளாவுக்குத் தாலி கட்டத் தகுதியானவர் ...இதுவே சியாமளாவின் விருப்பம் என்று பொட்டில் அடித்தாற் போல் சொன்னனார் சாரி!  

(குறிப்பு: வாசகர்களே...மகரிஷி நாரதர் உஙகள் commentsக்காகக் காத்திருக்கிறார்!)
...தொடரும்

Sunday, June 3, 2012

மூன்றாம் புறம் - பகுதி 2



2. மஹாபாரதத்தில் துப்பாக்கி
நடுநிசி...கும்மிருட்டு....வாகன நடமாட்டமேயில்லாத சாலை.....இரு பக்கமும் குடியிருப்பு ஏதுமில்லாத பரந்த நிலப்பரப்பு.
பழுதடைந்து நின்று போன வேனில் நரசிம்மாச்சாரி குறைத் தூக்கத்தில் இருந்தார். பக்கத்தில் சினிமா உதவி இயக்குநர்  ராமுவின் குறட்டை ஒலி. படப்பிடிப்பில் ஓடியாடி வேலை செய்த களைப்பு அவனுக்கு.

சினிமாக்காரர்கள் திருமணக் காட்சிக்கு முஹூர்த்ததுக்கு நேரமாச்சு..பொண்ண அழச்சிண்டு வாங்கோபுகழ் ஐயரை ஒப்பந்தம் செய்வது போல, வாய்க்கு ருசியான சமையலுக்குப் படப்பிடிப்பு நாட்களில் நரசிம்மாச்சாரியைத் தான் கூப்பிடுவார்கள்.

பாண்டிச்சேரி கிராமமொன்றில் ஒரு வாரம் படப்பிடிப்பு. கடைசி நாள் இரவு உணவு முடிந்து வேனில் சாரி, ராமுவுடன் கிளம்பும்போது மணி ஒன்பதரை.

குறுக்கு வழியில் சென்றால் சீக்கிரம் சென்னையை அடைந்து விடலாமென்று டிரைவர் முடிவெடுத்ததன் பலன், ஆள் அரவமில்லாத பகுதியில் வண்டி நின்று போய், இரவுப் பொழுதை வெட்ட வெளியில் கழிக்க வேண்டிய நிலமை.

திடீரென நிசப்தத்தைக் கிழித்தபடி காற்றில் மிதந்து வந்த உரையாடல்கள் நரசிம்மாச்சாரியின் காதுகளை எட்டின-

தர்மனே....நீயும் உனது நான்கு சகோதரர்களும், உஙகளது மனைவி திரொளபதியும், இனி எனக்குச் சொந்தம்...துச்சாதனா...நீ போய் திரொளபதியை இழுத்து வா

....................

வந்து விட்டாயா திரொளபதி.....எப்படியெல்லாம் என்னைக் கேலி செய்தாய்! அதற்கு இப்பொழுது பழி தீர்க்கிறேன் பார்! தம்பி துச்சாதனா...இவளது உடைகளை அவிழ்த்தெறி! இந்தச் சபையினர் எல்லோரும் கண்டு களிக்கட்டும்!

வேண்டாம் மகனே துச்சாதனா...திரொளபதியை ஒன்றும் செய்யாதே.... பாவச் செயலுக்கு இடம் கொடாதே
யாருடைய அறிவுரையும் எனக்கு வேண்டாம்...ம்...துச்சாதனா...நான் ஆணையிடுகிறேன்....சொன்னதைச் செய்

(பெண் குரல்)  அருகில் வராதே துச்சாதனா...தருமரே, பீமரே, அர்ச்சுனரே... ஏன் எல்லோரும் மவுனமாக நிற்கிறீர்கள்?  ஐயகோ...எனது உடையை எழுக்காதே நீசனே....ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா .... என் மானத்தைக் காப்பாற்று
.........
உமக்கு கோடானு கோடி நன்றி கண்ணா....எனக்கு நேர இருந்த பெரும் அவமானத்தைத் தடுத்தீர்

(கோஷ்டி குரல்கள் - குழலூதும் தெய்வமே...இந்த விவசாயக் குடும்பஙகளுக்கு நீரே குல தெய்வம்...உமது பெருமையை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு கிருஷ்ண ஜெயந்திக்கும் கூத்துப் பாடல்களுடன் விழா எடுத்துக் கொண்டாடுகிறோம்!  எஙகள் வயல்களின் விளைச்சலைத் தஙகளுக்குப் படைக்கிறோம்...ஏற்றுக் கொள்ளுங்கள் பரமாத்மா

நரசிம்மச்சாரி எழுந்து உட்கார்ந்து ராமுவை உலுக்கி எழுப்பினார் -
டேய் ராமு....கூத்து டயலாக் கேக்குதுடா.....மஹாபாரதம்!

தூங்க விடுஙக மாமா...காலையில மறுபடி டப்பிங்குக்கு ஓடணும்

சிணுங்கலுடன் வாசு சுருண்டு படுக்க, தன் வழுக்கைத் தலையைத் தடவியபடி யோசித்தார் சாரி. இந்தக் குறுக்கு வழியில் அவர் சில முறை வந்திருக்கிறார்.  கண்ணுக்கு எட்டிய வரை குடியிருப்புகள் இல்லை...இப்படியிருக்க, யாருக்காக கூத்து நடக்கிறது?

தூக்க தேவதை சாரியைத் திரும்பத் தழுவ வந்த முயற்சி பயன் தரவில்லை.  மறுபடி காற்றில் வந்த குரல்கள் சாரியின் கண் இமைகளை விலக்கி வைத்தன!

(பெண் குரல்)
வெள்ளக்கார தொரெ...நீங்க ஏன் கிருஷ்ணர் சாமி கோயிலுக்கு வந்தீஙக?”
கண்ணம்மா...நீ இந்த நேரத்தில இங்க வருவேன்னு தெரியும்....அதான் வந்தேன்!

தொரே....நீங்க குடிச்சிருக்கீங்க

கண்ணம்மா...நேத்தைக்கு நீ கூத்தில திரொளபதியா ஆக்ட் பண்ணே..நான் இப்ப துச்சாதன் வேலை பண்ணப் போறேன்!

மேட்லி தொரே...நீங்க தப்பு செய்யப் பாக்குறீங்க...கிட்ட வராதீங்க....

அப்ப நீயா வந்திடு...வர மாட்டியா? நான் உன்னை விடமாட்டேன் கண்ணம்மா

டேய் மேட்லி...புடவையை இழுக்காதே...ஸ்ரீகிருஷ்ணா...என்னைக் காப்பாத்து

கண்ணம்மா...கூத்திலதான் சாமி காப்பாத்தும்...இந்த வெள்ளக்கார துச்சாதன் கிட்ட கிருஷ்ணன் பாச்சா பலிக்காது!

டேய் முட்டாள் தொரெ...சாமி எனக்கு வழி காம்பிச்சிடிச்சுடா...இஙக பாரு...கதிர் அரிவாள்...என் கழுத்தை அறுத்து கிட்டு செத்துப் போயிடுவேன்.....ஓடிப் போயிடு!

சிறு இடைவெளியில் மறுபடி குரல்கள்....

பத்து எண்றதுக்குள்ள எல்லொரும் கலைஞ்சு போயிடுஙக....ஒன், டூ, த்ரீ...

போக மாட்டேன்....எல்லோரும் நில்லுங்க...போகாதீங்க

டுமீல் சப்தம்...ஐய்யோ என்று பெண்ணின் கதறல்...தொடர்ந்து நிசப்தம்.
மறுபடி ராமுவை உலுப்பி எழுப்பி உட்கார வைத்தார் சாரி-

ஏண்டா ராமு...மஹாபாரததில வெள்ளக்காரன், துப்பாக்கி சப்தமெல்லாம் வருதே...எப்படி டா?”

தூக்கம் கலைந்த எரிச்சலில் மனதுக்குள் சாரியைச் சபித்த ராமுவின் மண்டையில் மின்னலாக ஒரு யோசனை இறங்க, அவன் கூவினான் -
மாமா ...நல்ல ஐடியா...எங்க படத்தில பாடல் காட்சிக்கு லண்டன் போகணும்னு புரொட்யூசர் சொல்லிக் கிட்டிருந்தார்.  அங்க போயி வெள்ளைக்காரங்களை வைச்சு மஹாபாரதப் கூத்துப் பாட்டை ஷூட் பண்ணா என்ன?”

தனக்குப் பதிலளிக்காததால் எரிச்சல் பட்ட சாரி கடுகடுத்தார் -

பாத்து செய்....இல்லைன்னா தியேட்டர்ல கல்லைப் போடுவாங்க...புரொட்யூசர் தலையில துண்டைப் போட்டுப் பார்!

விடிந்ததும் சரி செய்யப் பட்டுக் கிளம்பிய வேன், சில நிமிடங்களில் ஜெயம் குடியிருப்புப் பகுதியைக் கடந்து சென்னை நோக்கிச் சென்றது.

(குறிப்பு: வாசகர்களே...மகரிஷி நாரதர் உஙகள் commentsக்காகக் காத்திருக்கிறார்!)

...தொடரும்

Saturday, June 2, 2012

மூன்றாம் புறம் - பகுதி 1

பகுதி 1
மூன்றாம் புறம்
(ஒரு புதுவித குறுந்தொடர்)

1. புதையல்

குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த கோகுலகிருஷ்ணனை ஏறெடுத்துப் பார்த்தார் நீதிபதி. அருகில் நவநீத்,கோபால், வெங்கட்,  ராதா ஆகியோர் தலை குனிந்தபடி நின்றிருந்தனர்.

ஏம்பா கோகுலகிருஷ்ணன்....உன் பாட்டன் பயிர் செஞ்ச நிலத்தில புதையல் எடுக்க நீ முயற்சி செஞ்சதா உன் பேரில வழக்கு பதிவாயிருக்கு....அதை ஒத்துக்கறியா...இல்லியா?

“ஒத்துக்கறேன் ஐயா....பொதயல் எடுக்கத்தாஙக நான் வந்திருக்கேன்

கோகுல் அளித்த பதில், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த சியாமளவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சே...நல்லவனாக, அப்பாவியாக நடித்து ஏமாற்றி விட்டானே கோகுல்? இவனுக்கு உதவத்தானே என்னுடைய மண வாழ்க்கைக்கு சுயம்வரத்தை அறிவித்தேன்...எல்லாமே கேலிக் கூத்தாகி விட்டதே?

நீதிபதி தொடர்ந்தார் –
“என்ன புதையல் எடுக்க வந்தே கோகுல்?

“மன்னிக்கணும் ஐயா..அதை மட்டும் கேக்காதீங்க

நீதிபதியின் முகத்தில் கோப ரேகை பரவியதைக் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத் அவசரமாக எழுந்தார்-

“யுவர் ஹானர்....கோகுல் மட்டுமில்ல...பக்கத்தில நிக்கிற நாலு பேரும் கூட அரசாங்க சொத்தை திருட முயற்சித்ததா எழுதிக் கொடுத்திருக்காங்க
ஐவரின் வாக்குமூலங்களையும் படித்துப் பார்த்த நீதிபதி, முழுமையான குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்யும் வரை அவர்களை மூன்று மாத விசாரணைக் காவலில் வைக்க உத்திரவிட்டார்.

இறுகிய முகத்துடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய சியாமளாவை பச்சாதாபத்துடன் பார்த்தபடி நரசிம்மாச்சாரியாரும் வாசுவும் உடன் தொடர்ந்தன்ர். அக் காட்சியை வெகுவாக மனதுக்குள் ரசித்தபடி நின்றான் பாஸ்கர்.

யார் இந்த கோகுல்? இவனுக்கும் சியாமளாவின் திருமண முடிவுக்கும் என்ன ச்மபந்தம்?   

ஒரு வருடம் பின்னோக்கிப் போவோமா..........

(குறிப்பு: வாசகர்களே...மகரிஷி நாரதர் உஙகள் commentsக்காகக் காத்திருக்கிறார்!)
...தொடரும்

Thursday, May 31, 2012

மூன்றாம் புறம்


அறிமுகம்
மூன்றாம் புறம்
(ஒரு புதுவித குறுந்தொடர்)
                          ஆசிரியர்: நித்யா
சமர்ப்பணம்
விவசாயிகளுக்கும்
நில விற்பனையாளர்களுக்கும்
சொந்த வீட்டுக் கனவில் மிதப்பவர்களுக்கும்

--------------------------------------------------------------------------------------------
இக்கதையில் வரும் பாத்திரங்க்ளும், சம்பவங்களும் கற்பனையே
---------------------------------------------------------------------------------------------

முகவுரை

நாரயண...நாரயண..

எல்லோருக்கும் இந்த நாரதரோட ஆசீர்வாதம்.  தம்புராவைக் கையில வச்சிண்டு சதா நாராயணன் நாமத்தை ஜபிச்சின்டு இருக்கிற அதே நாரதர் தான்.

நம்ப மாட்டேஙகன்னு தெரியும். இந்த நாவலுக்கு முகவுரை எழுத வேண்டிகிட்ட ஆசிரியர் நித்யாவே நான் நாரதர்னு நம்பலையே!

திரிலோக சஞ்சாரியான நான், இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு, இந்த  blogg கதைக்கு முகவுரைன்னு ஒன்னை ஏன் எழுதணும்?

வைகுண்டத்தில ஸ்ரீதேவிக்கும் பூதேவிக்கும்  பேச்சுவாக்கில ஒரு நீயா நானா போட்டி.  தேவர்களோட கால் தூசிக்கு பூமி வாசிகள் சமம் ஆகமாட்டார்கள் என்றும், தாங்க முடியாத அக்கிரமங்களையும் அநியாயஙகளையும் செய்யும் நர மனிதர்களை பூதேவி எப்படித்தான் தாங்குகிறாளோ என ஸ்ரீதேவி கிண்டலடிக்க, சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய் ஒரு இளம் விவசாயி வாழ்ந்து காட்டிய உண்மைக் கதை பற்றியும், அதனால் ஏற்படப்போகும் புதிய சமுதாயப் புரட்சி பற்றியும் அறிந்தால், ஸ்ரீதேவியும், முப்பது முக்கோடித் தேவர்களும் முக்காடிட்டுக் கொள்வார்களென்று பூதேவி பதிலுக்கு சவால் விட, இரண்டு பக்கமும் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்க இந்த நாரதருக்கு வேலை வந்தது!

பூதேவி சவால் விட்ட விவசாயியின் கதையை உடனே என் தம்புராவின் மூல்ம் தெரிந்து கொண்டேன் (எனது தம்புராவின் முன்பு உஙகள் ஐபாடெல்லாம் ஒரு ஜுஜுபி என்பதில் ஐயப்பாடு வேன்டாம்!). எப்போதோ ஒரு முறை blogல் எழுதிவிட்டு, அடுத்து என்ன எழுதலாம் என்று தவித்துக் கொண்டிருந்த ஆசிரியர் நித்யாவின் மூளையில், இக் கதையின் கருவை பூதேவி விதைக்க, உடனே மனுஷ்ன் சவசவவென்று எழுதித் தள்ளிவிட்டார்!

பூதேவியோட சவால் கதையாச்சே! ஸ்ரீதேவிக்கு ஆப்பு வைக்கப் போற கதையாச்சே! முழு வீச்சில் படிச்சேன். மனதைத் தொடற கதை தான்...சந்தேகமேயில்ல.

ஆனா, ஏதோ புதிய சமுதாயப் புரட்சின்னு பூதேவி பெருமையடிச்சுக் கிட்ட மாதிரி நாவல்ல ஒரு வரி கூட என் கண்ணில படலே!

இதில் ஏதோ தில்லுமுல்லு (தில்லாலங்கடி வேலை?) நடந்திருக்கு.  நேர ஆசிரியர் கிட்ட போனேன் (மாறு வேஷத்தில - மனுஷ வெஷத்தில).கதையப் பத்தி அவர் மூச்சு விடல.  விடுவேனா...பிள்ளயார் சுழியிலேந்து முடிவு வரை அவர் எழுதி வச்சிருந்ததை மனசுக்குள்ள scan பண்ணி ஒரு எழுத்து விடாம ஒப்பிச்சேன். மனுஷன் அசந்து போயி கதைக்கு நீங்கதான் முகவுரை எழுதண்ம்னு என் கால்ல விழுந்து வேண்டிக் கிட்டார்.  ஆனா, நான் நாரதர்னு சொன்னா அவர் நம்பவே இல்லை!

இந்தக் கதையில, சமுதாயப் புரட்சி பத்தி எங்க வருதுன்னு ஆசிரியரைக் கேட்டேன்.  பதில் சொல்லாம, பேந்த பேந்த முழிச்சார்!

நேர பூதேவி கிட்ட போய்க் கேட்டேன். நமட்டு சிரிப்போட, வர வேண்டிய நேரத்தில வரும்னு ரஜினி ஸ்டைல்ல பதில் கிடைச்சுது!

விடல நான்... ஒரு க்ளூ குடுங்க தேவின்னு கேட்டேன்.  மயில்சாமி மூலமா தெரியும்னு சொல்லிட்டு மறைஞ்சு போயிட்டாஙக.

வாசகர்களே.....ஸ்ரீதேவி-பூதேவி சவால் விஷயத்தில இந்த நாரதரோட கலகம் நன்மையில முடியனும்னா, நீங்க எனக்காக ஒரு காரியம் செய்யணும்...மனுஷங்களப் பத்தி மனுஷஙகளூக்குதான தெரியும்?  இந்த blogg கதையைப் படிச்சு, மூன்றாம் புறம்னு ஏன் தலைப்பு, கதையில மயில்சாமி எங்க வர்றாரு, என்ன சமுதாயப் புரட்சி நடக்கப் போகுதுன்னு உங்க commentsல சொன்னா, நான் என் தம்புராவில பாத்துப்பேன்.  ஏன்னா, நான் பூலோகத்தை விட்டுக் கிளம்பியாகணும்....வேறே வேறே லோகத்தில சிண்டு முடியற வேலை நெறய இருக்கு!

நாராயண....நாராயண.




இங்கனம்,

நாரதர்

(இனி வரும் மூன்றாம் புறம்....)