Tuesday, May 21, 2013

கடைசிப் பந்து - இறுதிப் பகுதி

கடைசிப் பந்து (இறுதிப் பகுதி ) - சுத்தியடிச்சதை slow motion பாருங்க!

(காட்சி 16 - கண்ணாடி அறையில்  நடந்த உரையாடல்கள்)

கோபால்:  எல்லாரும் கவனமா கேட்டுக்குங்க ... இந்த வாழ்க்கைப் போட்டியில, முக்கியமான கடைசி நிமிஷங்களுக்கு வந்திருக்கிறோம் ... இதுவரை திவாகர் முன்னணியில இருந்தாலும், பரத் வீசப் போற  கடைசிப் பந்து - அதாவது பரத்தோட கேள்விங்களுக்கு திவாகர் தரப் போற பதில்தான் இவரோட வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிக்கப் போறது!

திவாகர்  பலே... போட்டி களை கட்டிடிச்சே... ஹலோ பரத்... நான் கொஞ்சமாவது யோசிக்கிற அளவுக்கு உன் கேள்விங்க இருக்குமா?  நீ  புல் டாஸ் பால் போட்டா நான் சிக்ஸர் அடிப்பேன்!  லெக் ப்ரேக், பௌன்சர்னு போட்டா பந்து பவுண்டரிக்கு போயிடும்! எப்படி வசதி!

பரத்:  திவாகர்..... நான் வீசப் போற கேள்விங்க, GOOGLY பந்து கணக்கா இருக்கும்

திவாகர்:  (கேலியாக)  இங்க பார்றா மாசி.... பரத் பூச்சாண்டி காட்டரானே!

மாசி:  பரத் பிரதர்....  GGOGLY ன்னா பந்து கன்னா பின்னான்னு திரும்பி திரும்பி  போகணும்.... உன்னால முடியுமா?

கோபால்: (இடைமறித்து)  ஒகே..ஒகே... இப்ப போட்டி ஆரம்பம்.... பரத்... கேள்வியை ஆரம்பி..


பரத்:  திவாகர்..... உங்கப்பா ஜமீந்தார் ஜகந்நாதன் ஒரு கொலை கேசில மாட்டியிருக்கிறது உங்களுக்கு தெரியுமா?

திவாகர்: (அலட்சியமாக)  இன்னைக்கு   பேப்பரைத் தான் எல்லோரும் படிச்சீங்களே!  அந்தக் கேசில எங்கப்பாவுக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லேன்னு கோர்ட்டே சொல்லிடிச்சு!

பரத்:  உங்க வீட்டு வேலைக்காரியோட மகனை உங்கப்பா தீ வச்சு கொளுத்தினதா அந்த கேஸ் போடப்பட்டிருக்கு ... அந்தப் பையனோட நீங்க, குழந்தையிலேந்து பத்து வயசு வரை பழகியிருக்கீங்க

திவாகர்:  ஆமா....  நெஜம்  தான் .. (கிண்டலாகஅது ஒன்னும் கொலை குத்தம் இல்லியே!

பரத்:  நீங்க அமெரிக்காவில செட்டில் ஆனதூம் இந்த மோர்சியை பாத்தீங்க... செத்துப் போன வேலைக்காரி மகன் சாயல்ல மோசி இருக்கிறதால, இவர் பேர்ல உங்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு வந்திருக்கு!  அதனாலதான் நீங்க மோர்சியோட க்ளோஸ் ப்ரண்டாயிட்டீங்க ... இவர் பேரையும் மாசின்னு மாத்திட்டீங்க ..... இல்லியா?

திவாகர்:  நீ சொன்னது எல்லாமே சரி... 'அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்’னு நீ படிச்சதில்லையா பரத்!

பரத்:  உங்க அன்போட தரம் எப்படிப் பட்டதுன்னு இந்த ஆங்கில மாதப் பத்திரிகை சொல்லுது! (கையிலிருந்த புத்தகத்தை காண்பிக்கிறான்)... இது GAY மனிதர்கள், அதாவது, ஓரினச் சேர்க்கையார்களோட பத்திரிகை... இதில, நீங்களும் இந்த மாசியும் நெருக்கமா இருக்க போட்டோங்க வந்திருக்கு!  

திவாகர்: (சுரத்திழந்து )   ... பாத்திட்டியா....

பரத்:  நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்கப் போறதாகவும் இதில போட்டிருக்கு... இப்படி இருக்கச்சே, வீணாவுக்குத் தாலி கட்ட உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?

திவாகர்:(அவசரமாக)  நோ...நோ...நானும் மாசியும் உடனடியா கல்யாணம் செஞ்சிக்கிறதா இல்ல.... எங்கப்பாவுக்கு வாக்கு குடுத்தபடி, ஜமீனுக்கு ஒரு வாரிசு பொறந்த பிறகுதான் எங்க கல்யாணத்தைப் பத்தி யோசிப்போம்...

வீணா: (கோபத்தில் வெடிக்கிறாள்)  மிஸ்டர் திவாகர்... நான் என்ன பிள்ளை பெக்கற, உணர்ச்சி இல்லாத மிஷின்னு நெனைச்சு என்னை விலை குடுத்து வாங்கப் போறீங்களா?  தாலி கட்டியவளோட கடைசி வரைக்கும் வாழணு ங்கிற இந்தியக் கலாச்சாரத்தையே நீங்க கேலி செய்யறீங்க....  நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும்னு இனி கனவில கூட நினைக்காதீங்க!

கோபால்:  போதும்மா... (கையை மேலே தூக்கி) திவாகர் அவுட்டுன்னு இந்த அம்பயர் கை தூக்கிட்டேன்... போட்டி முடிஞ்சாச்சு!
சே

                                                                                    நிறைவு

Thursday, May 16, 2013

கடைசிப் பந்து - நாடகம் - ஐந்தாம் பகுதி

காட்சி 14:

(அதே இடம்.... மூர்த்தி, விசாலம், வீணா,மீனாட்சி, கோபால் ஆகியோர்)

வீணா: (மீனாட்சி கையிலிருந்த புடவையைப் பார்த்தபடி)  ஹை …..பட்டுப் புடவை!  டிசைனும் கலரும் சூப்பரா இருக்கே!

நான் இப்பவே கட்டிப் பாக்கணுமே.... ப்ளீஸ்!

மீனாட்சி:  அதுக்குள்ள அவசரத்தைப் பாரு!   இன்னும் பத்து நாள் பொறுக்கணும் வீணா!  நிச்சயதார்த்தத் தட்டில இதை வைச்சு ஐயர் மந்திரம் ஓதி கொடுத்த பின்னாடிதான் கட்டிக்கணும்!

விசாலம்: அம்மாடி... கல்யாணப் பேச்சை எடுத்தாலே வேணாம் வேணாமின்னு தட்டிக் கழிச்ச நம்ம பொண்ணுக்கு கல்யாண களை வெகு ஜோரா வந்திடிச்சே!

மூர்த்தி:  வீணா... இந்த புடவையை விட உசத்தியான விஷயம் இருக்கு... நிச்சயப் புடவை வாங்கிறது பெத்தவங்களோட கடமை... ஆனா, உன் பேர்ல எவ்வளவு பாசம் வச்சிருந்தா, கொஞ்சம் கொஞ்சமா சீட்டில போட்டு வச்சிருந்த பணத்தில, உனக்காக இந்த ரெண்டு வடம் செயினை வாங்கியிருப்பா மீனாட்சி!

வீணா:  (செயினை வாங்கிப் பார்த்து விட்டு, கண் கலங்கியபடி) அசத்திட்டீங்க மீனாட்சியம்மா ... இந்த செயினில, தங்கத்தோட ஒளியை விட, உங்க அன்புதான் ஜோரா ஜொலிக்குது!

விசாலம்: சரியா சொன்னெம்மா வீணா... இவ்வளவு சிரத்தையோட நிச்சய ஏற்பாடுகளை கவனிக்கறா மீனாட்சி... ஜமீன் சம்பந்தம் நல்லதுதான்கிற முடிவுக்கு வந்திட்டான்னு தெரியறது... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!

மீனாட்சி:  கொஞ்சம் பொறுங்க அண்ணி.... இன்னும் 10 நாளில நிச்சயமா நிச்சயதார்த்தம் நடக்கும்... அதே சமயம் போட்டியும் இருக்கு.... அதில ஜெயிக்கிறவந்தான் மாப்பிள்ளை!

கோபால்: இதை... இதை.... இதைதான் நான் எதிர்பார்த்தேன்!  ஏம்மா மீனாட்சி.... கிரிக்கெட் ஸ்டைல்ல  வீணா வாழ்க்கைப் போட்டி நடத்தறதா தீர்மானிச்சாச்சு.... அம்பயர்தான முடிவை சொல்லணும்? ரெண்டு பக்கமும் சேராத ஆளுதான் அம்பயரா இருக்கணும்...  அப்படிப் பாத்தா, நான் தான் அம்பயர்!

(அதைக் கேட்ட படி பரத் வருகிறான்)

பரத்:  கோபால் சார்... உங்களை நீங்களே அம்பயரா சலெக்ட் பண்ணிகிட்டீங்களா !  வாழ்த்துக்கள்

விசாலம்:  ஆலையில்லாத ஊருக்கு இலுப்பை பூ சக்கரை!

மூர்த்தி:  அட... கோபால் தான் பொழுது போகாம தவிக்கிறானே...  இப்படி உருப்படியா ஏதாவது செய்யட்டுமே!

பரத்:  நான் போடப் போறது கடைசிப் பந்து கோபால் சார்.... வாழ்க்கைப் போட்டியோட ரூல்ஸை நல்லா தெரிஞ்சிகிட்டு சரியான முடிவை எடுங்க!

கோபால்:  அதுக்கென்ன.... போட்டியோட விதிமுறையை இப்பவே தீர்மானிச்சிடலாம்!  ஒன்னு...கிரிக்கெட்டில மூணு ஸ்டம்பு ... வாழ்க்கையில பணம், பதவி, அந்தஸ்துன்னு மூணு ஸ்டம்பு... இதில எது சரியில்லேன்னாலும் உன்னோட கடைசிப் பந்தால திவாகரை கிளீன் போல்ட் பண்ணிடலாம்!

விசாலம்:  அஸ்கு புஸ்கு.... இந்த மூணும்தான் ஜமீன் மாப்பிள்ளைக்கு அமோகமா இருக்கே!

மூர்த்தி:  அதானே...  அந்த ஸ்ட்ராங் பாயின்ட்டாலதான சின்ன ஜமீன்தார் ஜெயிக்கிறதுக்கு ரொம்ப க்ளோசா வந்திருக்காரு!

மீனாட்சி:  அது தெரிஞ்ச கதை... ஏதாவது காரணத்தால, கடைசிப் பந்தை சரியா ஆட முடியாம, கேட்ச் குடுக்கலாமே!

கோபால்:  ஆமால்ல? . கண் பார்வை சரியில்லாம, இல்ல, வேற ஏதோ டென்ஷன்ல கவனம் இருந்தா அவுட் ஆக்க வழி இருக்கு!

வீணா:  நோ நோ... திவாகருக்கு அப்படியெல்லாம் குறை இருக்கிறதா தெரியலை!

மீனாட்சி:  ஏன் ... இப்படி இருக்கலாமில்ல?  கண் காணாத தேசத்தில இருக்கிற பையன்... பொண்ணு விஷயத்தில அப்படி இப்படி இருக்க வாய்ப்பு இருக்கே?

பரத்:  மீனாட்சி மாமி... இந்த விஷயத்திலேயும் திவாகர் பாஸ்!  அமெரிக்காவில இருக்கிற என் பிரண்டை விசாரிக்க சொன்னேன்.... கொஞ்ச நேரம் முந்தி அவன் போன்ல வந்தான்.... திவாகருக்கு இருக்கிறது ஒரே ஒரு பிரண்டு... ஆம்பளை பிரண்டு!  அந்த பிரண்டு கூட தான் ப்ளாட்ல தங்கியிருக்கறார்... அவங்க ரெண்டு பேரும்தான் ஒன்னா வெளியே போவாங்க!  ஆபீஸ்ல ரொம்ப ஸ்ட்ரிக்டா தான் எல்லார்கிட்டேயும் பழகுவாராம்!

விசாலம்:  மீனாட்சி.... உனக்கே தெரியும்... ஜமீன் பிள்ளை பொம்பளைங்க பக்கம் கூட திரும்பி பாக்கிறது இல்லே!

கோபால்: இதுவும் தப்புதான்னேன்....முசுடா இருக்கிறவங்க கிட்ட பந்தபாசம் இருக்காது!  வீணா எப்படி திவாகரோட குடித்தனம் நடத்துவா?

(வேம்பு உள்ளே நுழைகிறான்)

வேம்பு:  கோபால் சார் சொல்றது கரெக்ட்.... நானும் கிர் கிர் கிரியும் லவ் பண்ண ஆரம்பிச்சதிலேந்து எங்களால தனியாவே இருக்க கஷ்டமா  இருக்கு... கிர் கிர் வந்து நாலு வார்த்தை பேசி, ஒருத்தரை ஒருத்தர் ஆசை தீர பார்த்தப் புறம்தான் எங்களுக்கு மனசு நிம்மதியா இருக்கு!  இந்த திவாகர் என்னடான்னா, வீணா பக்கம் திரும்பியே  பாக்க மாட்டேங்கிறார்.... நிச்சயம்னு ஆனா பிறகும் இப்படியா ஒருத்தர் மரக் கட்டை மாதிரி இருப்பாரு?

மீனாட்சி:  அப்பாடா ... என்னோட பையன் இப்பத்தான் உருப்படியா பேசியிருக்கான்!

கோபால்:  மீனாட்சியம்மா.... திவாகரோட வீக்னெஸ்  என்னன்னு கண்டுபிடிச்சது நானு... கடைசிப் பந்தில அவுட்டுக் குடுக்கப் போறது இந்த அம்பயர்!  அப்புறம் பாரு என் கீர்த்தியை! அடுத்த ஐபீஎல் போட்டிக்கு என்னை கோடிக் கணக்கில ஏலத்தில எடுப்பாங்க!

பரத்:  ஐயோ கோபால் மாமா.... கிரிக்கெட் விளையாடுறவங்களை தான் ஏலத்தில எடுப்பாங்க....அம்பயரை இல்லே!

(திவாகர் குதுகலத்துடன் சின்னக் குழந்தை மாதிரி குதித்துக்கொண்டு பாடிய படி வருகிறான்)

ஹாப்பி....இன்று முதல் ஹாப்பி ... ஹாய் எவரிபடி.... நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..... இந்தாங்க சாக்லேட்.. (கவரை நீட்டுகிறான்)..... வீணா உனக்கு ரெண்டு ... நீ கல்யாணப் பெண்ணாச்சே!   மீனாட்சி மாமி, பரத், கோபால் சார் ... எடுத்துக்குங்க... ஜாலியாசாப்பிடுங்க!  வேம்பு... உனக்கு சாக்லேட் கெடையாது.... (இடைவெளி விட்டு) இந்தா நூறு ரூவா....என்ஜாய்!

கோபால்:  இத்தினி நாளா கடுகடுன்னு நாங்க பாத்த சின்ன ஜமீன் . இப்ப ஜாலி ஜமீனா மாறின காரணம் என்னவோ!

திவாகர்:  சரியான கேள்வி... எனக்குள்ள தூங்கிக்கிட்டிருந்த அன்பை வெளிப்படுத்த இப்ப நேரம் வந்தாச்சு!  கோபால் சார்...  ஒரு மாசமா என்னை பிரிஞ்சிருந்த என்னோட ரூம் தோழன் அமெரிக்காவிலேந்து சென்னைக்கு வர்றான்..... இந்த இருவது நாளா டல் அடிச்சிகிட்டிருந்த நான், எல்லாத்தையும் சேத்து வச்சு என் ப்ரெண்டோட பேசப் போறேன்...  அத நெனைச்சாலே வானத்திலே ரொம்ப உயர பறக்கிற மாதிரி இருக்கு!  பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோன்னு யாரோ சொன்னங்க...  ஆனா நாங்க பேசுவோம்!

மீனாட்சி:  என்னங்க தம்பி இது... புருஷன் பொஞ்சாதி ரொம்ப காலமா பிரிஞ்சு மறுபடி கூடினாதான் அப்படி சொல்லுவாங்க?

திவாகர்:  எல்லாத்துக்கும் அன்பு தானே அடிப்படை....  இந்த இருவது நாளில அதை ஒரேயடியா மிஸ் பண்ணிட்டேனே?  அதோ.... கார் சப்தம் கேட்குது...  உள்ள வந்திட்டான் ! (நீக்ரோ தோற்றமுடைய ஒருவன் அவசரமாக உள்ளே நுழைகிறான்).... மாசி... என் ஆருயிர் தோழா!  வாடா.... வாடா.... (இருவரும் கட்டி அணைத்துக்கொள்கிரார்கள்)

மாசி:  (உடைந்த தமிழில்)  டேய் திவா  ... நீ ஏண்டா ஏர்போர்ட் வரலே ?

திவாகர்:  மாசி... ஏர்போர்ட்ல நான் வந்தா, இப்பிடி கட்டி புடிச்சி டான்ஸ் ஆடுனா, போட்டோ எடுப்பாங்க.. பேப்பர்ல போட்டு அசிங்கம் பண்ணுவாங்க... அரை மணி தானேடா... இதோ எதிரே நிக்கிறியே மாசி (மறுபடி கட்டிக் கொள்கிறார்கள்)

கோபால்:  என்னது!  இவர் நீக்ரோ மாதிரி இருக்கிறாரு... ஆனா தமிழ் சுமாரா பேசறாரு! தமிழ் ஹீரோயினிங்களுக்கு சவால் விடுவாரு போல!

மாசி:  ஆமா அங்கிள்... நானு நீக்ரோ... ரியல் பேரு மோசி... என்னோட டியர் திவா கூட க்ளோசா பேசணும் பழகனும்... அதான் தமிழ் கத்து கிட்டேன் ... மாசின்னு தமில் பேரு மாத்தி கிட்டேன்

விசாலம்:  ட்ரஸ் கூட ரெண்டு பெரும் ஒரே மாதிரி போட்டிருக்கிரான்களே!

மாசி:  ஆமா ஆண்டி... ட்ரஸ் ஷூ எல்லாம் ஜோடியாதான் வாங்குவோம் .. ஒரே கலர்ல போடுவோம்....

திவாகர்:  டேய் மாசி...எப்பிடிடா நான் இல்லாம இத்தினி நாள் தள்ளினே!  சரியான போர் அடிச்சிருக்குமே?  எனி வே... (பாடுகிறான், அவன் கைகளைக் கோத்தபடி) உன்னை நான் சந்தித்தேன்.... நீ ஆயிரத்தில் ஒருவன்...

மாசி:  ஆமான்டா திவ்....  ஒன்ன காணாத கண்ணும் கண்ணுல்ல.... உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சில்ல...

வேம்பு:  (பாடுகிறான்) சூப்பரு.....  இது சூப்பரு.... ஆமா… நான் என்னோட கிர் கிர் கிரியோட இப்பிடி ஏதாச்சும் பாடணுமே?

கோபால்:  பாடேன் இப்படி... நீ எங்கே.... நான் இங்கே...   இல்லாட்டி,  மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.

மூர்த்தி:  கோபால்... நீ இப்பிடி பாடு...  கண்ணுல போட்டாலும் போட்டேன்...  காமெடி பீசா ஆயிட்டேன்!

திவாகர்:  மாசி...  நீ கிரேட் டா... உன் வேலையெல்லாம் விட்டுட்டு அமெரிக்காவிலேந்து என் நிச்சயதார்த்தத்துக்கு வந்திட்டே பார்த்தியா!

மாசி:  இட்'ஸ் ஒகே திவா.... மொதல்ல, ஜமீன் வாரிசுக்கு உனக்கு புள்ளை பெத்து கொடுக்கப் போற பொண்ணு யாரு சொல்லு!

திவாகர்:  இதோ நிக்கிறா பாரு....  வீணா!

மாசி:  ஹாய்...  வீணா...  என் ப்ரெண்ட் திவா ஸ்வீட் பாய் ....  நைட் முழுக்க ஜோக் சொல்லுவான்... நான் அப்பிடியே மயங்கிடுவேன்!

விசாலம்: (மெதுவாக) பார்த்தியாடி வீணா.... இந்த திவாகர் தம்பியை போய் முசுடுன்னு சொல்லலாமா!

திவாகர்:  ஒகே வீணா...  டேய் மாசி... இனிமேலும் நாம ஏன் டைம் வேஸ்ட் பண்ணும்?  பிரிஞ்ச நாம இப்ப சேர்ந்திட்டோம்... இன்னிக்கு புல் டே நமக்கு கொண்டாட்டம்... வா, மாடி ரூமுக்கு போகலாம்....  மொதல்ல நல்லா குளி ... உனக்காக ஸ்பெஷல் ஐய்டங்க சமைச்சு வச்சிருக்கேன்... அசந்து போயிடுவே!

கோபால்:  (சப்பு கொட்டியபடி) சின்ன ஜமீன்தார்... உங்க கை பக்குவத்தை நானும் வந்து சாப்பிட்டு பார்க்கிறேனே?

திவாகர்:  சாரி கோபால் சார்.... எங்களை யாரும் டிஸ்டர்ப் செய்யக்கூடாது...  வாடா மாசி போகலாம் (இருவரும் போகிறார்கள்)

மூர்த்தி:  பார்த்தியா மீனாட்சி... மாப்பிள்ளை திவாகர் ப்ரெண்டுக்காக உசிரையே குடுக்கிறார்...  கல்யாணம் ஆயிட்டா, வீணாவை தல மேல தூக்கி கொண்டாடுவாருங்கிரதில ஒரு சந்தேகமும் இல்லே!

கோபால்:  நீ சொலறது சரிடா மூர்த்தி....  இனிமே, எந்த ரூல் படியும் சின்ன ஜமீனுக்கு அவுட்டு குடுக்க வழி இல்லேன்னேன்!  பேசாம, அவர்தான் மாப்பிள்ளைன்னு உறுதியா டிக்ளேர் செஞ்சிட்டு போட்டியை நிறுத்திடலாம்...  ஏன் ... நிச்சயம் முடிஞ்ச கையோட கல்யாணப் பத்திரிக்கையை அச்சடிக்க குடுத்திடலாம்!

வீணா:   ஏண்டா வேம்பு... உன் கல்யாணத்துக்கு பத்திரிக்கையை எப்படி பிரிண்ட் செய்யப் போறே?

வேம்பு: (ஒரு முறை செருமிக் கொண்டு)  வேம்பு வெட்ஸ்  கிர் கிர் கிரின்னு இங்கிலீஷ்ல போடுவேன்... பின் பக்கம் தமிழ்ல, உடன்குடி நாகராஜனின் சீமந்த புத்திரன் பூமியின் தவப் புதல்வன் வேம்புவுக்கும்,  ப்ராட்பரி கர் கரின் சீமந்த புத்திரி செவ்வாய் சிங்காரி கிர் கிர் கிரிஜாவுக்கும் ... இப்படி ஆரம்பிச்சு போடுவேன்!

பரத்:  அது சரி வேம்பு....  பொண்ணு வீட்டுக்காரங்க எப்படி பத்திரிக்கை போடுவாங்கன்னு  நாங்க தெரிஞ்சிக்க  வேணாமா?  மொதல்ல நாம செவ்வாய் பாஷையை எப்படி படிக்கிறது சொல்லு!

வேம்பு: எங்கப்பா எதுக்கு இருக்கிறார்?  செவ்வாய் பாஷையை தமிழ்ல எழுதி படிக்க கிர் கிர் கிட்ட கத்துக்க சொல்லுவேன்...  அன்னைக்கு எங்க அப்பா தானே தெலுங்கில ராமையா எழுதின லெட்டரை இங்கிலிஷ்ல எழுதி மாத்தி வச்சார்!

மூர்த்தி:  (கோபத்துடன்)  என்னது?  எனக்கு ராமையா எழுதின தெலுங்கு லெட்டரை நாகராஜன் இங்கிலிஷில எழுதி மாத்தி வச்சானா?

மீனாட்சி:  பார்த்தீங்களா...  பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்... என் புருஷன் அதை மாத்தி வைக்க வேண்டிய அவசியம் என்ன?  அடேய் வேம்பு...  குரியர்ல வந்த அந்த தெலுங்கு லெட்டர் எங்க?

வேம்பு:  அதை தான் டாட் தன் பாக்கெட்ல வச்சிகிட்டாரே!

பரத்:  மூர்த்தி மாமா...  இதில ஏதோ குளறுபடி இருக்கு!

மீனாட்சி:  இதை விடக் கூடாது....  வந்த தெலுங்கு லெட்டரை தானே என் புருஷன் மறைச்சிட்டாரு.... அதை எழுதின ராமையா ஜமீன் கிராமத்தில இருக்கிறாரே !  பரத்... நீ ஒன்னு செய்... உடனடியா நீ அங்க போய் ராமையா கிட்ட அவர் என்னதான் எழுதினார்னு விசாரி!

பரத்:  இதோ கிளம்பறேன் மாமி..  எனக்கு ஒரு தெலுங்கு பிரெண்டு இருக்கான்..  அவனையும் கூட்டிகிட்டு போறேன்!

                                                                            திரை - மறுபடி விலகும்

காட்சி 15:

(அதே ஹால்...மூர்த்தி, விசாலம், மீனாட்சி, கோபால், வீணா ஆகியோ ர் இருக்க, பரத் நுழைகிறான்)

மூர்த்தி:  வாடா பரத் ... போன காரியம் என்ன ஆச்சு?

பரத்: (தயங்கியபடி)  மாமா.... எப்பிடி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல...

விசாலம்: (பதறியபடி):  பரத்... எதுவாயிருந்தாலும் சொல்லு...  விடிஞ்சா நிச்சயமாச்சே? அக்கம்பக்கம் எல்லாருக்கும் சொல்லியாச்சேடா

 ..

பரத்:  மாமா, மாமி... பதட்டப்படாதீங்க... நான் தெரிஞ்சுகிட்டதை விவரமா சொல்றேன்... ஒன்னு மட்டும் உறுதி...  சின்ன ஜமீனுக்கு நேரிடையா தொடர்பு இல்ல... மொதல்ல, ஒரு வார்த்தையில சொல்றேன்...  அவரோட அப்பா ஜமீன்தார் ஜகந்நாதன் ஒரு கொலை கேசில சம்பந்தப் பட்டிருக்கார்!

கோபால்:  அய்யய்யோ.. இது எப்படி எனக்கு தெரியாமப் போச்சு?

பரத்:  உள்ளூர் பஞ்சாயத்து ப்ரெசிடெண்ட் ராமையா இந்த தகவலைத் தான் நீங்க போயிருந்தப்போ சொல்ல வந்திருக்கார்...  நீங்க குடுத்த இந்த விலாசத்துக்கு தெலுங்கில எழுதின லெட்டர்ல, “ஜமீன்தார் ஒரு கொலை கேசில மாட்டி இருக்கிறது உங்களுக்கு தெரியாதுன்னு நெனைக்கிறேன்... எதுக்கும் அதைப் பத்தி தீர விசாரிச்சு அப்புறமா உங்க பொண்ணை அவர் பிள்ளைக்கு குடுக்கிறதைப் பத்தி யோசிங்கன்”னு அவர் எழுதியிருந்தாராம்!

மூர்த்தி:  கவருக்குள்ள இருந்த இங்கிலீஷ் லெட்டர்ல அதைப் பத்தி ஒரு வரி கூட இல்லியே?  (மேஜை மீதிருந்து எடுத்து) ஆமா... ஒரு வரி கூட இல்லியே?

மீனாட்சி: எப்படி இருக்கும் அத்தான்...  உங்களுக்கு விஷயம் தெரியக் கூடாதுன்னு தானே, வந்த தெலுங்கு லெட்டரை எடுத்து மறைச்சு, இதை எழுதி வச்சாரு என் வீட்டுக்காரர்!

மூர்த்தி: (கோபத்துடன்) படவா ராஸ்கல்... நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டானே நாகராஜன்....  அவன் வரட்டும்... உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்!

விசாலம்:  ஏங்க.. இப்ப அதுவா முக்கியம்....  பரத்...  என்ன விஷயம்னு சொல்லேன்... எனக்கு வயத்தை கலக்கரதுப்பா?

பரத்:  ஜமீன்தார் சம்சாரம், திவாகர் பொறந்த ஒரு வருஷத்திலேயே செத்திட்டாங்க...  ஜமீன்தார் ஜகந்நாதன் வேற கல்யாணம் செஞ்சுக்கலை....

விசாலம்:  இதை அவங்க அனுப்பிச்ச தகவல்ல சொல்லியிருக்கே?

பரத்:  சொல்ல மறைச்சதை நான் சொல்றேன் மாமி....  அந்த குழந்தை திவாகரை வீட்டு வேலைக்காரி தான் வளர்த்தா...  ஜமீன்தார் எந்நேரமும் ஜமீன் விஷயங்களில மூழ்கியிருந்ததால, குழந்தை பேர்ல அக்கறையே செலுத்தல... வேலைக்காரியோட நாலு வயசுப் பையன்தான் குழந்தை திவாகரை எந்நேரமும் தூக்கி வச்சு விளையாடுவான்...  பத்து பன்னிரண்டு வருஷமா இது தொடர்ந்து, அந்த ரெண்டு பசங்களுக்கும் ஒரு அன்னியோன்னியம் உருவாச்சு...  திவாகர் அந்த வேலைக்காரி மகனோட தான் எந்நேரமும் இருப்பான் , அவன் கூட சாப்பிடுவான், படுப்பான் ...  இந்த சூழ்நிலை சிக்கல் ஜமீந்தாருக்கு மெதுவா தான் புரிஞ்சிது...  மொதல்ல, குழந்தை திவாகரை அந்தப் பையனிடமிருந்து பிரிக்க, அந்த வேலைக்காரியை ஜமீன் வேலையிலேந்து நிறுத்திப் பார்த்தார்.... அப்படியும் திவாகர்  வேலைக்காரி வீடு தேடி அந்தப் பையனோட பழக ஆரம்பிச்சான்.... ஜமீன்தார் எவ்வளவு சொல்லியும் அவன் கேக்கலை...  கோபத்தில, ஜமீந்தார் , குடிசையில தூங்கி கிட்டிருந்த வேலைக்காரி பிள்ளையை, நெருப்பு வச்சு கொளுத்தி சாகடிச்சிட்டார்!  சமையல் நெருப்பால அந்த பையன் செத்தான்னு வதந்தியை கெளப்பினார் .  இருந்தாலும்,  அந்த வேலைக்காரி விடல...  ஊர் பஞ்சாயத்து துணையோட போலீஸ் கேஸ் பதிவாச்சு... ந்யூஸ் பேப்பர்லயும் ஜமீன்தார் தான் இந்த கொலைக்கு காரணம்னு எழுதினாங்க!   இருந்தாலும், தன்னோட பண பலம், ஆள் பலத்தை வச்சு. கேசு வெளியே வராம தூங்க வச்சிட்டார் ஜமீந்தார் ...  என்னைக்காவது  ஒரு நாள் உண்மை வெளியே வரும்னு நம்பிக் கிட்டிருக்காங்க அந்த வேலைக்காரியும், பஞ்சாயத்து ப்ரெசிடெண்ட் ராமையாவும்!


மீனாட்சி:  பாத்தீங்களா அத்தான்...  என் வீட்டுக்காரர் சம்பந்தப்பட்ட விஷயம்னா ரொம்ப கவனமா இருக்கணும்னு நான் சொன்னேனா இல்லியா?

கோபால்:  ஏம்பா பரத்...  திவாகருக்கு தெரிஞ்சா இது நடந்திச்சு?

பரத்:  இல்ல..  முன்னாடியே ஜமீன்தார் சாமர்த்தியமா  மேல் படிப்புன்னு சொல்லி, திவாகரை ஹைதராபாத்ல ஒரு பெரிய ஸ்கூல சேர்த்து, ஹாஸ்டல்ல தங்க வச்சிட்டார்... திவாகரும் படிப்பில கவனம் செலுத்தி, அமெரிக்கா போறதை தன குறிக்கோளா வச்சிகிட்டார்...  அப்பன்கிற பாசம் அவருக்கு எப்பவுமே இல்லே...  அதுமில்லாம, இந்த கொலை விஷயமும் அவருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு...  அதனாலதானோ என்னமோ, ஜமீன்தார் கிட்ட அவர் அதிகமா பேசறது இல்ல... ஜமீன் பங்களாவுக்கு எப்பவாச்சும் போய் உடனே திரும்பி விடுவார்!  கொலை செய்யப் பட்ட அந்த வேலைக்காரி பையனோட பேரைக் கேட்டா ஆச்சர்யப் படுவீங்க... மாசி!

எல்லோரும்: (ஆச்சர்யத்துடன்)  மாசியா!

கோபால்:  அதெப்படிப்பா பரத்!  திவாகர் கூட மாடியில இருக்க நீக்ரோ ப்ரெண்ட் பேரும் மாசி!

பரத்:  காரணம், திவாகர் செத்துப்போன வேலைக்காரி பிள்ளை மாசியோட நினைவாவே இருந்திருக்கார்....  (கையிலிருந்த பத்திரிக்கையை காண்பிக்கிறான்) இங்க பாருங்க.. ஒரு தெலுங்கு பத்திரிக்கையில கொலை நடந்தப்புறம் வந்த வேலைக்காரி பிள்ளை மாசியோட போட்டோ... கருப்பா, திவாகரோட  ப்ரெண்ட்  சாயல்ல இருக்கான்!  நான் நினைக்கிறேன்...  அமெரிக்கா போன திவாகர் நீக்ரோ மோசியைப் பாத்ததும் உள் மனசில இருந்த மாசியோட ஞாபகம் வந்திருக்கு... அதனால தான் ரெண்டு பேரும் க்ளோஸ் ப்ரெண்ட் ஆயிட்டாங்க...  திவாகர், மோசி பேரை மாசின்னு மாத்தி வச்சதும் அதனால தான்!

கோபால்:  மூர்த்தி... இது என்னடா கஷ்ட காலம்... ஜமீன் சம்பந்தம் கொலைகார சம்பந்தமா ஆயிடிச்சே?  ஆனாலும், திவாகர் தம்பி பேர்ல அனுதாபப் படத்தாண்டா தோணுது...  நீ என்ன பண்ணப் போற?  விடிஞ்சா நிச்சயமாச்சே?

வீணா:  அம்மா... எனக்கு ரொம்ப பயமா இருக்கு..  சின்ன ஜமீந்தாரோட அமெரிக்காவில குடித்தனம் நடத்தனும்னு யாருமே சொல்லலே... ஜமீனுக்கு நான் ஒரு வாரிசை பெத்து தரணும்னு தான் எல்லோரும் பேசறாங்க!  அப்ப, நான் வாழ்நாள் பூரா அந்த கொலைகார மாமனாருக்கு சமைச்சு போட்டு ஜமீன்  பங்களாவில காலம் தள்ளனுமா?

மீனாட்சி:  பார்த்தீங்களா அத்தான்.. நம்ம வீணா, கல்யாணத்துக்கு முந்தியே கண் கலங்குறா... இப்படிப் பட்ட சம்பந்தம் தேவைதானா?

விசாலம்:  இத பாருங்க.... வீணா கேள்விக்கு நாம உடனே பதில் தெரிஞ்சுக்கணும்....  அந்த மாப்பிள்ளை பையனை உடனே மாடியிலேந்து வரவழைச்சு, கல்யாணம் ஆன கையோட நீங்க வீணாவை அமெரிக்காவுக்கு அழைச்சிகிட்டுப் போய் குடித்தனம் செய்யனும்னு தீர்த்து சொல்லிடுவோம்... குழந்தை பொறந்தாலும், அது அப்பா அம்மாவோட அமெரிக்காவிலதான் இருக்கணும்

நாகராஜன்:  (கையில் ஒரு பத்திரிக்கையுடன் நுழைகிறார்)  என்னது... நிச்சயமே நாளைக்கு தான் நடக்கப் போறது...  குழந்தை வரைக்கும் போயிட்டீங்க!

மூர்த்தி:  (கோபத்துடன்)  ஏன்டா நாகராஜா... எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள அடிஎடுத்து வச்ச? உன்னோட அயோக்கியத்தனத்துக்கு அளவே கெடையாதா?

விசாலம்:  ஏம்பா நாகராஜா...  நாங்க உனக்கு என்ன கெடுதல் பண்ணோம் சொல்லு...  என் பொண்ணு வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு எங்களை புலம்ப வச்சிட்டியேப்பா?

நாகராஜன்:  என்னை யார் யார் திட்டி தீர்க்கணும்னு நினைக்கிறீங்களோ, அதை இப்பவே செஞ்சிடுங்க... அப்புறம் நான் என்ன சொல்றேன்கிறதையும் கேளுங்க..

மீனாட்சி:  இன்னும் எங்களை கெடுக்கறதுக்கு பாக்கி வச்சிருக்கீங்களா?

நாகராஜன்:  ஏம்பா பரத்... நேத்து நீ ஆந்திராவில ஜமீன் கிராமத்துக்குப் போய் ராமையாவை பாத்திட்டு வந்தே... இல்லியா?

பரத்  ஆமாம் மாமா...

நாகராஜன்:  ஜமீந்தார் பேர்ல கொலை கேசு இருக்குனு சொல்லி தெலுங்கு பத்திரிக்கையெல்லாம் குடுத்திருப்பானே?

கோபால்:  ஆமாம் நாகராஜன்.. விஷயத்தை கேள்விப்  பட்டு நாங்க ஆடிப் போய் உட்காந்திருக்கோம்..  ஜமீன் சம்பந்தம்கிற பெருமையெல்லாம் தலைகீழா மாறிடிச்சு!

நாகராஜன்:  அது நேத்து நடந்த கதை...  இப்ப பேப்பர்ல வந்த நியுஸ் படிக்கிறேன் கேளுங்க! (பேப்பரை படிக்கிறார்)  ஜமீன்தார் ஜகன்னாதன் கோர்ட் அவமதிப்பு  வழக்கு .... ராமையா , வேலைக்காரி கைது!  தன் மீது தொடர்ந்த கொலை வழக்கு தள்ளுபடி செய்திருந்த நிலையில், தன்னை கொலைகாரனாக விஷமப் பிரச்சாரம் செய்ததாக ராமையா மற்றும் வேலைக்காரி கெங்கம்மா மீது ஜமீன்தார் ஜகந்நாதன் தொடுத்த அவமதிப்பு வழக்கு இன்று ஆந்திரா நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டு, அவ்விருவரையும் கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்!  தனது மகனின் திருமணம் சென்னையில் நிச்சயமாகும் நிலையில், தன் மீது அவதூறு கிளப்பி, பெரிய தொகையைக் கேட்டு அவர்கள் மிரட்டியதாக ஜகந்நாதன் தன மனுவில் சமர்ப்பித்ததுடன், அதற்கான ஆதாரத்தையும் கோர்ட்டில் குடுத்திருந்தார்.  போலீஸ் விசாரணையில், ராமையாவுக்கும் கெங்கம்மாவுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதும், ஜமீன்தாரின் புகழைக் கெடுக்க பல முறை அவர்கள் முயற்சித்ததும் தெரிய வந்தது!

நாகராஜன்: (பேப்பரை நீட்டியபடி)  மூர்த்தி அத்தான்... இப்ப என்ன சொல்றீங்க!

மூர்த்தி:  அப்பாடா... என் வயத்தில பாலை வார்த்தடா நாகராஜா...  குழப்பத்தில ஏதேதோ பேசிட்டேன்...  எதையும் மனசில வச்சிக்காதே!

நாகராஜன்:  அத்தான்...  பத்து வருஷமா, ஜமீன்தார் கூட இருந்த எனக்குதான் தெரியும் ஏன் இப்படி நடக்குதுன்னு!  ஜமீன்தார் எத்தினியோ கேசுங்களை சந்திச்சிருக்கார்...  காய்ஞ்ச மரம் தான் கல்லடி படும்?

கோபால்:  நீ சொல்றதும் சரி தான்...  ஆனா ஒரு விஷயம்...  அன்னைக்கு ராமையா எழுதின லெட்டரை ஏன் மாத்தி வச்சே?

நாகராஜன்:  ராமையா தெலுங்கில கேசைப் பத்தி எழுதி அனுப்பிச்சது வாஸ்தவம்... அதை மாத்தி எழுத அந்த ராமையாவே தான் எனக்கு போன் செஞ்சான்.. ஒரு பெரிய தொகையா தனக்கு தரலேன்னா கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு ஜமீன்தாரை மெரட்டிப் பார்த்தான்...  ஆனா, அதுக்கெல்லாம் அவர் அசைஞ்சு குடுக்கலே!

விசாலம்:  ஏம்பா நாகராஜா...  இனிமே எந்த பிரச்சினையும் கல்யாணத்தில வராதுங்கிறையா?

நாகராஜான்:  ஆமாம்...  எல்லாரும் மேற்கொண்டு வேலைய பாருங்க...  ஜமீன்தார் ராத்திரி ப்ளேன்ல நிச்சயதார்த்தத்துக்கு வர்றாரு..  அழைச்சிகிட்டு வரணும்!  (வேகமாகப் போகிறார்)

கோபால்:  என்ன வேடிக்கை... வாழ்க்கையும் கிரிகெட்டும் ஒன்னுன்னு மறுபடி ப்ரூவ் ஆயிடிச்சு..  ஜமீன் குடும்பம் கெட்டதுன்னு கொஞ்ச நேரம் முந்தி நெனைச்சோம்..  இப்ப நெலமை தலை கீழாயிடிச்சே ...  பரத்...  போட்டிக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு...  கடைசிப் பந்தை கையில வச்சிக்கிட்டு என்ன செய்யப் போற?  யோசிச்சு வை..  நான் வீட்டுக்குப் போய் காப்பி சாப்பிட்டு வரேன் (போகிறார்)

                                                                                  திரை - மறுபடி விலகும்  

காட்சி 16:

(அதே ஹால்... மீனாட்சி, பரத், வீணா ஆகியோர் சோகமாக உட்கார்ந்திருக்க, விசாலம், மூர்த்தி ஆகியோர் மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்)

மூர்த்தி:  கண்ணதாசன் அன்னைக்கே எழுதினாரு..  'சிலர் சிரிப்பார். சிலர் அழுவார்.. நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்'னு ...  நமக்கு அது இப்ப சரியா பொருந்தறது !  பரத் குடுத்த தெலுங்கு பத்திரிகை ஜமீன்தார்  கொலைகாரர்னு போட்டுச்சு... நாகராஜன் இன்னைக்கு குடுத்த பேப்பர்ல, ஜமீன்தார்  மேல  பழி போட்டவங்களை ஜெயில்ல தள்ளிட்டாங்கன்னு போட்டிருக்கு!  ஜமீன்தார் நல்லவரா கெட்டவரா தெரியலையே?

மீனாட்சி::  அத்தான்.. நான் ஆரம்பத்திலிருந்தே அடிச்சுகிட்டேன், என் புருஷன் சம்பந்தப்பட்ட விஷயம்னா ஜாக்கிரதையா இருக்கணும்னு

விசாலம்:  மீனாட்சி..  எல்லாமே வலிய நம்மை தேடித்தானே வந்திச்சு?.  பெரிய இடம்னு சபலப் பட்டுட்டோம்...  இப்ப, மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம தவிக்கற நெலமை...

(கோபால் உள்ளே நுழைகிறார்)

கோபால்:  நானும் காப்பி சாப்பிட்டு வந்தாச்சு... இன்னும் அஞ்சே நிமிஷம் தான் இருக்கு...  உன்னோட கடைசிப் பந்துக்கு இந்த வாழ்க்கை போட்டியில ஒரு வேலையும் இல்ல போலிருக்கு...  திவாகர் ஜெயிச்சார்னு சொல்ற ஒரே வேலை தானா இந்த அம்பயருக்கு!

மீனாட்சி:  ம்... பரத்தும் வீணாவும் தான் கடைசியில ஒன்னு சேருவான்னு நான் மனக் கோட்டை கட்டினேன்...  ஏன்தான் கடவுள் இப்படி சோதிக்கறாரோ ?

வீணா:  மாமி...  கடவுள் என்ன செய்வார்?  இந்த நாடகத்தை எழுதின ஆசிரியரை தான் கேக்கணும்!

பரத்:  கரெக்ட் வீணா...  (உரக்க) ஹலோ ...  ஆசிரியர் சார்...  நாடகத்துக்கு 'கடைசிப் பந்து'னு தலைப்பு குடுத்தீங்க...  அந்த கடைசி பந்தை நான் கையில வச்சிக்கிட்டு என்ன செய்யிறதுன்னு தெரியாம முழிக்கிறேன்..  கடைசி நேரமும் வந்தாச்சு..  வில்லனுங்க கை ஓங்கி நிக்கிறது ... இதை நாடகம் படிக்கிறவங்க எப்படிங்க ஏத்துப்பாங்க?

ஆசிரியர் (குரல்):  கவலைப் படாதீங்க.. கடைசிப்  பந்தை கடைசி நிமிஷத்தில வீசினாதான் கதையில த்ரில் இருக்கும்..  இப்ப பாருங்க... நான் கார் டிரைவராக உள்ள வந்து ஒரே ஒரு டயலாக் பேசறேன்!  அப்புறம் என்ன நடக்குது பாருங்க!

ஆசிரியர் (கார் டிரைவரா உள்ள வந்தபடி )  சார்...  மாடியில இருக்கிற மாசி சார் இதை கார்ல விட்டுட்டாரு... தயவு செஞ்சு அவரு கிட்ட குடுத்திடுங்க... (கண்ணடித்தபடி) வரேன் சார் (ஒரு புத்தகத்தை பரத்திடம் தந்து விட்டுப் போகிறார்)

(குழப்பத்துடன் புத்தகத்தை மேலோட்டமாகப் பார்த்த பரத்தின் மூளையில் மின்னல் அடிக்கிறது!  அவசரம் அவசரமாக புத்தகத்தின் பக்கங்களை புரட்டிப் பார்த்து, வீணா , மூர்த்தி, விசாலம், கோபால் என,  தான் பார்த்ததைக் காண்பிக்கிறான்)

வீணா:  ரொம்ப ஷாக்கிங்கா இருக்கே பரத்!

மூர்த்தி:  ஐயையோ... இது என்னடா கஷ்ட காலம்?

விசாலம்: நாசமா போச்சு... ம்... கலிகாலம்னு சரியாதான் சொல்றா

கோபால்:  அய்யோடா...  சரியா மாட்டிகிட்டாங்க...  இந்த அம்பயருக்கு, எல்லோரும் மூக்கில விரல் வைக்கிற அளவுக்கு தீர்ப்பு குடுக்கிற வேளை வந்தாச்சு! (மாடிப் பக்கம் பார்த்து உரக்க)

தம்பி திவாகர்... இறங்கி வாங்க

(திவாகர், மாசி கை கோத்துக் கொண்டு வருகிறார்கள்)

திவாகர்:  ஹலோ கோபால் அங்கிள்... எதிர் அணிக்கு  இன்னும் ரெண்டு நிமிஷம்தான் சான்ஸ் இருக்கு... இல்லியா!

கோபால்: திவாகர் தம்பி... மொதல்ல, மாசியோட கையை உதறிட்டு, பரத் போடப் போற கடைசிப் பந்தை பேஸ் பண்ற வழியைப் பாரு!

மாசி: (சிரித்தபடி) இங்க பார்ரா திவா.. இன்னும் இவங்களுக்கு ஜெயிக்கிற ஆசை இருக்கு!

பரத்:  திவாகர்... நம்ம போட்டியை நாலு சுவத்துக்குள்ள அந்த கண்ணாடி ரூமில வச்சிக்கிறது பெட்டர்னு நெனைக்கிறேன்!

திவாகர்: ஒகே...  வாங்க போகலாம் (எல்லோரும் ரூமுக்குள் செல்ல, ஆசிரியர் போட்டியை வர்ணிக்கிறார்)

ஆசிரியர்: (வர்ணனை)  இப்ப, நீங்க எல்லாரும் எதிர்பார்த்த வீணாவோட வாழ்க்கைப் போட்டி  ஆரம்பிக்கப் போகுது... விடிஞ்சா வீணாவுக்கும் திவாகருக்கும் கல்யாண நிச்சயம்கிற நெலமை...  திவாகரோட அப்பா ஜமீன்தார், கொலைகாரன்னு பட்டம் வாங்கற மாதிரி இருந்து, திடீர் திருப்பமா, அவரோட எதிரிங்களை ஜெயிலுக்கு அனுப்பி நல்ல பேர் எடுத்துட்டார்... இனிமே தனக்கு ஜெயம் நிச்சயம்கிற நினைப்போட திவாகர் தயாரா இருக்கிறார்... கடைசி நிமிஷத்தில வந்த தெம்போட, பந்தை வீசத் தயாரா நிக்கிறார் பரத்... போட்டி முடிவு என்ன ஆகுமோன்னு மனசு திக் திக்குனு அடிச்சிக்க நிக்கிறாங்க மூர்த்தி, விசாலம்... தன் மனசுப்படியே நடக்கும்னு மந்தகாசத்தோட நிக்கிறா வீணா..  தன் நண்பனுக்கு சப்போர்ட் குடுக்க நிக்கிறான் மாசி...  இதோ... வாழ்க்கை போட்டி ஆரம்பிச்சாச்சு...  தனக்கு கடைசி நிமிஷத்தில கிடைச்ச தகவலை வார்த்தை பந்தா வீசறான் பரத்...  அதை எதிர்பார்க்காத திவாகர், அந்த ஹூக்லி பந்தை ஆட முடியாததால, பணம், அந்தஸ்து, பதவின்கிற ஸ்டம்ப் மூணும் எகிறி விழுந்திடிச்சு!  தன்னை சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜுக்கு மேல நினைக்கிற அம்பயர் கோபால்  கை தூக்கி திவாகருக்கு அவுட் குடுக்கிறார்!

(அனைவரும் கண்ணாடி ரூமிலிருந்து வெளியே வருகிறார்கள்)

திவாகர்:  கங்க்ராட்ஸ் பரத்...போட்டியில நீ ஜெயிச்சிட்ட... வீணா உனக்குதான்னு அம்பயர் கோபால் அங்கிள் கை தூக்கி என்னை அவுட் ஆக்கிட்டாரு... மாசி (அவனைக் கட்டிக் கொண்டு) என் மனம் கவர் கள்வனே... நாம சென்னையை மறந்திடுவோம்... இவங்க எல்லாரையும் மறந்திடுவோம் ..  அமெரிக்காவுக்கு உடனே போயிடுவோம்!

மாசி:  அல்லாருக்கும் கும்பிடு ..  நான் வாரேன்  (இருவரும் தோளில் கை போட்டபடி வெளியேறுகிறார்கள்)

விசாலம்:  எனக்கு போன உயிர் இப்பத்தான் திரும்பி வந்திருக்கு...

  மீனாட்சி...  உனக்கு கோயில் கட்டி கும்பிடனும்மா....  கடைசி வரை போராடி, வீணா பாழும் கிணத்தில தள்ளாம நீ பாத்துகிட்டே!

கோபால்:   ஏண்டா மூர்த்தி... பெரிய இடத்து சம்பந்தம் வர்ற மாதிரி வந்து போயிடுச்சேன்னு உனக்கு உள்ளூர வருத்தம் இருக்கு... இல்லியா?

மூர்த்தி:  டேய் கோபால்... வெந்த புண்ல வேலை பாய்ச்சாதப்பா...

மீனாட்சி:  ஏடாகூடமா பேசாதீங்க... பணத்துக்காக அலையறவர் இல்ல எங்க அத்தான்... அவங்களா வந்தாங்க... இப்ப ஏமாந்து போயிட்டாங்க..

மூர்த்தி:  சரியா சொன்னேம்மா...  எனக்கு அந்த ஜமீந்தார் குடுத்த மூணு லட்சத்தை திருப்பி அவர் மூஞ்சியில எறிஞ்சா தான் மனசில ஒரு நிம்மதி வரும்

கோபால்: சாரிடா மூர்த்தி..  நான் யதார்த்தமா சொன்னது தப்பா தெரியுது..  பிரச்சினை நேரத்தில  கை குடுக்கிறவன் தான  நண்பன்!... எங்கிட்ட என் பொஞ்சாதியோட நெலம் வித்த பணம் பாங்க்ல இருக்கு.. அதில வீணாவுக்கு நிச்சயம் செஞ்சிடலாம்... நீயும் உன் கடன் நோட்டை காம்பிச்சு மெரட்ட முடியாதில்ல!

(எல்லோரும் சிரிக்கிறார்கள்)

பரத்:  மூர்த்தி மாமா.. எனக்கு ஒரு மாசம் டைம் குடுங்க... எல்லோரும் மெச்சுகிற மாதிரி ஒரு உசத்தியான மாப்பிள்ளையை வீணாவுக்கு கொண்டு வந்து நிறுத்தறேன்!

வீணா:  ஹலோ.. போட்டியில நீ ஜெயிச்சிட்டே...  நான் இப்ப வீணா பரத்!   நான் உன்னை டைவர்ஸ்  பண்றதா இருந்தா, அப்ப இன்னொரு மாப்பிள்ளையை தேடு!

(எல்லோரும் சிரிக்கிறார்கள்)

மூர்த்தி:  பரத்... இல்லையில்ல.. பரத் மாப்பிள்ளை...  நானும் விசாலமும் உடனடியா போய் எங்க சம்பந்திகளை, அதாம்பா, உன் அப்பா வேலூர் கிருஷ்ணசாமியையும், உன் அம்மாவையும் நிச்சயத்துக்கு அழைச்சிட்டு வரேன்!

(ஆசிரியர் உள்ளே நுழைகிறார்)

ஆசிரியர்:  என்ன..  எல்லா டிராமா பாத்திரங்களும் கதை சுபமா முடிஞ்சிதுன்னு சந்தோஷமா இருக்கிறாப்பல?

கோபால்:  ஆசிரியரே..  சுபமா கதையை முடிச்சீங்க சரி...  நாகராஜன் என்ன ஆனாரு... வேம்புவோட செவ்வாய் கிரக பயணம் எப்ப.. ?

ஆசிரியர்:  என்னங்க நீங்க..  தன பிள்ளைக்கு வீணா இல்லைன்னு ஆயிட்டதால,, ஜமீன்தார் ஜகந்நாதன் தன்னை விரட்டிடுவார்னு நாகராஜனுக்கு புரிஞ்சு, ஆபீஸ்ல அகப்பட்டதை சுருட்டிகிட்டு அவர் ஓடிடுவார்னு இந்த ட்ராமாவப் படிக்கிறவங்களுக்கு  சுலபமா, ரெண்டும் ரெண்டும் நாலுன்னு விளங்கிடும் !

வீணா:  அதே மாதிரி, செவ்வாய் கிரகத்தில ரோடு போட தார்  காண்ட்ராக்ட் வாங்கித் தர்றதா யார் கிட்டியாச்சும் வேம்பு புருடா விட்டிருப்பான்... அவனை உதைச்சு பயித்தியக்கார ஆஸ்பத்திரியில சேத்திருப்பாங்க! எல்லாருமே கோபால் மாமா மாதிரி ஜொள்ளு விட்டுகிட்டு,  வேம்பு சொல்றதை நம்பி  கண்ணில மிளகா எண்ணையை ஊத்திக்குவாங்களா! (எல்லோரும் சிரிக்கிறார்கள்)

பரத்:  இதையெல்லாம் விடுங்க...  வாழ்க்கைப் போட்டியில, திவாகர் எந்த காரணத்தினால அவுட் ஆனாருன்னு நாலு சுவத்துக்குள்ள கண்ணாடி அறையில நடந்த மாதிரி காம்பிச்சிட்டிங்க...  நாடகத்தைப் படிக்கிறவங்களுக்கு நாங்க பேசினது என்னன்னு தெரிய வேணாமா?

ஆசிரியர்:  திவாகர் தோத்துப் போனதுக்கு என்ன காரணம் இருக்குமின்னு படிக்கிறவங்க யோசிச்சு வைக்கட்டும்... கடைசிப் பந்து போட்டப்புறம் DECISION PENDING னு கம்ப்யுட்டர் போர்டில போடறப்ப இருக்கிற ஆவல் கொஞ்ச நாளைக்கு இருக்கட்டுமே! இன்னும் நூறு நாளில அந்த சீனை இந்த ப்ளாக்ல போட்டுடறேன்.. நூறு நாள் ப்ளாக் நாடகத்தில நடிச்ச பெருமை உங்களுக்கும் இருக்குமில்ல!

கோபால்:  ஆசிரியரே... ரொம்ப ஆசைப் படாதீங்க!  இது அவசர இன்டர்நெட் காலம்... பத்து நாளைக்குள்ள அந்த காரணத்தை சொல்லி கதையை முடியுங்க!

ஆசிரியர்: சரி...  அப்படியே செஞ்சிடறேன்

எல்லோரும்:   வாழ்த்துக்கள்!

                                                     -- முடிவு !? --- ஒரு வாரத்தில்!

Wednesday, May 15, 2013

கடைசிப் பந்து - நாடகம் - நான்காம் பகுதி

காட்சி 10:

(அதே ஹால்.... விசாலமும், கோபாலும் இருக்க, மூர்த்தியும் நாகராஜனும் நுழைகின்றனர்)

மூர்த்தி:  அப்பாடா..... என்ன வெய்யில் (உரக்க) மீனாட்சி, கொஞ்சம் குடிக்க தண்ணி குடும்மா
 
விசாலம்:  ஏங்க ... போன காரியம் என்ன ஆச்சு.... அதை சொல்லுங்க...

மூர்த்தி:  நல்ல சேதிதான்.....  ஜமீன்தார் பிள்ளை திவாகரோட ஜாதகமும் வீணா ஜாதகமும் அருமையா பொருந்தறதுன்னு நம்ம ஜோசியரும் சொல்லிட்டார் (மீனாட்சி தண்ணீர் டம்பளருடன் நுழைகிறாள்)

விசாலம்:  மீனாட்சி.... இப்ப உனக்கு திருப்தி தானேம்மா? (மீனாட்சி ஒன்றும் பேசாமல் திரும்பிப் போகிறாள்)

நாகராஜன்:  நம்ம பக்கத்திலேயும் ஜாதகப் பொருத்தம் பார்த்தாச்சுன்னு ஜமீன்தார் கிட்ட நான் போன்ல  சொல்லிட்டேன்.... அவருக்கு அப்படி ஒரு சந்தோஷம்.... ஒரு வேலையா பெங்களூர் ஏர்போர்ட்ல இறங்கினவர், உடனடியா சென்னைக்கு ப்ளைட் பிடிச்சிட்டார்....

கோபால்:  ஓஹோ.... மேற்கொண்டு சம்பந்தம் பேசலாம்னு முடிவு செஞ்சிருப்பார் !

நாகராஜன்:  ரொம்ப சரியா சொன்னீங்க.... ஜமீன்தாருக்கு எந்தக் காரியத்தையும் உடனடியா முடிச்சாகணும்.... இப்ப ஏர்போர்ட்டிலேந்து இங்க கார்ல வந்துகிட்டிருப்பார்.... (கார் ஹார்ன் ஒலி கேட்கிறது)  அவருக்கு நூறு ஆயுசு.... வந்து எறங்கிட்டார்! (உரக்க) முதலாளி.....  வாங்க (நாகராஜன் வெளியே போக, சாதாரண ஜிப்பா அணிந்த ஒருவர் உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்கிறார்...  கோபாலும் மூர்த்தியும் அவரை உதாசீனம் செய்து, பய பக்தியுடன் கை கட்டிக் கொண்டு வாயிற் பக்கம் பார்க்கின்றனர்)

கோபால்: ஏன்டா மூர்த்தி.... ஜமீன்தார்னா கிரீடம், கிரீடத்து மேல மயில் இறகு வச்சிருப்பார்.... வாசப் படி இடிக்குமேடா?

மூர்த்தி:  அதையெல்லாம் ஜமீன் சிப்பந்திங்க பாத்துப்பாங்க... ஒருத்தர் கிரீடத்தை வாங்கி வச்சிப்பார்.... இன்னொருத்தர் ஜமீன்தார் பின்பக்கம் பொரளுர அங்கியை தாங்கிப் பிடிச்சுப்பார்.... ஒருத்தர், முன்னாடி சிவப்பு கம்பளத்தை விரிச்சுப் போடுவார்!

வந்தவர்:  உங்களில, மூர்த்தி யாரு?

மூர்த்தி:  நான் தான்... ஆந்திராவிலேந்து ஜமீன்தார் வரப் போறார்.... நீங்க?   .... ஜமீன்தார் பராக் பராக்னு சொல்லப் போறீங்களா!

வந்தவர்:  பராக்னு சொல்ல மாட்டேன்.... பான் பராக் போடுவேன்....
நீங்க சொன்ன ஜமீன்தார் ஜகந்நாதன்  நான் தான்!

(நாகராஜன் பழத் தட்டுடன் உள்ளே அவசரமாக வருகிறார்)
நாகராஜன்:  மூர்த்தி அத்தான்... இவர் தான் என்னோட முதலாளி ஜமீன்தார் ஜகந்நாதன்... கார்லேந்து பழம், பூவை எடுத்திகிட்டு வரச் சொன்னார் !

மூர்த்தி:  மன்னிக்கணும்.... ஜமீன்தார் இந்த ஜிப்பாவில வருவீங்கன்னு எதிர்பார்க்கலே!

ஜகன்னாதன்: (பழத் தட்டை குடுத்தபடி) இந்தாங்க.... என்னோட ஜமீன் கெட்டப்பெல்லாம் என்னோட ஆந்திரா பங்களாவில்தான்.... மத்தபடி வெளியில இப்படி சிம்பிளா தான் வருவேன்!

மீனாட்சி:  அதுவும் நல்லதுதான்.... வித்தியாசமா வந்தா ஏதோ ஷூட்டிங் நடக்குதுன்னு கும்பல் சேரும்!..
.
விசாலம்:  ஏங்க ... வந்திருக்கிற பெரியவரை என்ன சாப்பிடறீங்கன்னு கேளுங்க!

ஜகந்நாதன் கேக்கவே வேணாம்... மாத்திரை சாப்பிடப் போறேன்.... தண்ணி குடுங்க!
(மீனாட்சி தண்ணீர் தர...)

ஜகந்நாதன் :  இதை நான் விளையாட்டுக்கு சொல்லல.. மாத்திரையாலதான் நான் பொழச்சிகிட்டிருக்கேன் ... சீக்கிரமா என்னோட பையன் திவாகருக்கு கால் கட்டு போட்டு, என்னோட கோடிக் கணக்கான சொத்துக்கு ஜமீன் வழக்கப்படி என் பேரப் பிள்ளை வாரிசாகணும் ... இதான் என்னோட ஒரே ஆசை... (ஜிப்பாவிலிருந்து எடுத்து) இந்த பென் டிரைவ் என்னோட ஜமீன் பரம்பரையோட எல்லா விவரமும் இருக்கு.... எனக்கு உங்க சம்பந்தம் ரொம்ப பிடிச்சிருக்கு...அந்தஸ்து ஒரு பிரச்சினையே இல்லே....நீங்களும் எல்லா விவரத்தையும் நிதானமா பார்த்திட்டு ஒரு நல்ல முடிவுக்கு வாங்க.... கல்யாணத்தை பத்தி பேசினாலே பிடி குடுக்காம இருந்த என் பையன் திவாகர், நான் இப்ப இருக்கிற நிலைமையைப் பாத்து, கல்யாணத்துக்கு ஒரு வழியா சம்மதிச்சிருக்கான்... அவன் மனைவியை தீர்மானிக்கிற பொறுப்பை என்கிட்டே விட்டுட்டான்... திவாகர் உங்க வீட்டு மாடியிலதான இருக்கான்எந்த சந்தேகம் வேணும்னாலும் கேளுங்க... அவன் பதில் சொல்லுவான்... இன்னொன்னும் சொல்லிடறேன்... கல்யாணம் சம்பந்தப் பட்ட அத்தினி செலவும் ஜமீன் ஏத்துக்கும்..... நீங்க சீக்கிரம் நல்ல முடிவா எடுத்து உங்க பொண்ணை எங்க ஜமீன் மருமகளா அனுப்புங்க... நான் போயிட்டு வரேன்!
(ஜகந்நாதன் போகிறார்.... கூடவே நாகராஜனும்)

கோபால்:  பார்த்தியா மூர்த்தி... பெரிய மனுஷன்னா இவர் பெரிய மனுஷன்... இரத்தின சுருக்கமா, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா சொல்லிட்டுப் போறார் பாரு!

மீனாட்சி:  அவர் பெரிய மனுஷராகவே இருந்திட்டுப் போகட்டும்....ஏன் உச்சாணிக் கிளையிலேருந்து இறங்கி வந்து இங்க பொண்ணு கேக்கணும்?

விசாலம்:  மீனாட்சி.... இப்படி தொட்டதுக்கெல்லாம் சந்தேகப் பட்டா எப்படிம்மா?

மூர்த்தி: அதானே?  மீனாட்சி... நீ உன்னை மாத்திக்கணும்... இப்ப, நாகராஜன் கூட ஆளே மாறி நல்லபடியா இருக்கான்..... அவனோட சேர்ந்து குடும்பம் நடத்தி சந்தோஷமா இருக்கிற வழியை பாரும்மா....

மீனாட்சி:  (கண் கலங்கிய படி) இத பாருங்க மூர்த்தி அத்தான்.... நான் என் புருஷனை நம்பறதா இல்ல.... இந்த வீட்டில நான் இருக்கிறது உங்களுக்கு சங்கடமா இருக்குன்னா, சொல்லுங்க... நான் எங்கேயாவது போயிடறேன்...

மூர்த்தி: (ஆதுரத்துடன்) அடடே... நான் அந்த அர்த்தத்தில பேசல மீனாட்சி..... நீ நல்லபடியா இருக்கனுங்கிரதுதான் எங்க ஆசை... நீ ஏன் வெளியில போகணும்... இது உன் வீடும்மா!

விசாலம்:  மீனாட்சி... இந்த ஜமீன் வரனை என்ன பண்ணலாம்னு சொல்லு.... ஜாதகப் பொருத்தம் சரியா இருக்குன்னு தெரிஞ்சு போச்சு....

மீனாட்சி: ஜமீன்தார் குடும்பத்தை பத்திய தகவலை டீவீயில போட்டுப் பாத்து தெரிஞ்சிகிட்டா பத்தாது.... அவங்க ஊருக்கே போயி, அக்கம் பக்கத்தில தீர விசாரிக்கணும்.... மாடியில இருக்கிற ஜமீன்தார் பிள்ளை திவாகர் அமெரிக்காவில எப்படி இருக்கிறார்னு விசாரிக்கணும்...

நாகராஜன்:  (வந்தபடி)  மீனாட்சி..... நான்தான் ஜமீன் மாளிகையில பத்து வருஷம் இருந்திருக்கேனே?  விசாரிக்க என்ன இருக்கு?

மீனாட்சி: வேலிக்கு ஓணான் சாட்சியா?  எல்லாம் நாங்க விசாரிச்சிக்கிறோம் (உள்ளே போகிறாள்)

கோபால்:  பலே... நாகராஜன் நல்லவனா, கெட்டவனாங்கிர சஸ்பென்ஸ்ஸோட டிராமா போறது.... ஒகே... நான் வெட்டியாதான இருக்கேன்? ஆந்திரா பக்கம் போய்  ஜமீன் விஷயத்தை ஒரு கிளறு கிளறிட்டு வந்தா என்ன!

                                                                                   /திரை - மறுபடி விலகும்/

காட்சி 11:


(அதே ஹால்..... வீணா படித்துக் கொண்டிருக்க, பரத் நுழைகிறான்)

பரத்: வீணா.... ஒரு குட் நியூஸ்....  .டி கம்பெனிக்கு நேத்தைக்கு இண்டர்வியூ போயிட்டு வந்தேன்.... அனேகமா சலெக்ட் ஆகிடுவேன்..... ஆரம்பத்தில முப்பதாயிரம் ரூபா தர்றதா சொல்லியிருக்காங்க!

வீணா: (உற்சாகத்துடன்)  கங்க்ராட்ஸ் பரத்... ஸ்வீட் எங்க?

பரத்:  வேலைக்கு ஆர்டர் வந்ததும் மொதல் ஸ்வீட் உனக்குதான் வீணா... இதை பாரு (பேப்பரை நீட்டுகிறான்)

வீணா: ஹை .... பெரிய கம்பெனி.... நல்ல சம்பளம் தருவாங்க.... பரத்.... நீ கட்டாயம் ஜாயின் பண்ணிடு.... இருந்தாலும் எனக்கு ஒரு சின்ன வருத்தம் பரத்.... இப்ப நீ செஞ்சிகிட்டிருக்கிற கிரிக்கெட் வேலையை, சம்பளம் கம்மியா இருந்தாலும், நீ எவ்வளவு நேசிக்கிறேன்னு எனக்கு தெரியும்...

பரத்:  என்ன செய்யிறது வீணா.... ஒன்னு பாத்தா இன்னொன்னு இருக்காது.... இருந்தாலும், நான் ஒரு கிரிக்கெட்  ரசிகன், அனுபவசாலின்னு இண்டர்வியூவில சொன்னேன் வீணா... எங்க கம்பெனி கிரிக்கெட் டீம்ல நீங்க சேருங்கன்னு சொல்லிட்டாங்க!
(மீனாட்சி வருகிறாள்)

பரத்:  மாமி... நல்ல சேதி.... எனக்கு ஒரு நல்ல வேலை கெடைக்கப் போகுது!

மீனாட்சி: (சந்தோஷத்துடன்)  அப்படியாடா பரத் ... நீ ஒசத்தியா வருவேன்னு எனக்கு தெரியும்.... இனிமே நீ எந்த சாக்கு போக்கும் சொல்லி தப்பிக்க முடியாது பரத்... நீயும் வீணாவும் பக்கத்து பக்கத்தில நிக்கிறதை பாத்தாலே என் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குடா .... நீங்க ரெண்டு பேரையும் மாலையும் கழுத்துமா பார்த்தா எனக்கு இன்னும் திருப்தியா இருக்கும்!

பரத்: (தயங்கியபடி) மாமி... புது வேலை வரப் போறது எப்போன்னு நிச்சயமா தெரியணும் ... அதுக்கப்புறம், வர்ற பணத்தில கொஞ்சம் சேர்த்து நான் ஸ்டெடியாகனும்  ... அதுக்கு கொஞ்ச காலம் ஆகுமே மாமி?

மீனாட்சி:  புரியாம பேசாத பரத்.... அய்யர் வர்ற வரை அமாவாசை காத்திருக்காது... இப்பெல்லாம், முன்னாலேயே அட்வான்ஸ் புக்கிங் பண்ணாம, கடைசி நிமிஷத்தில எதுவும் கெடைக்காது! வெளியூர் போகணும்னா கூட ஆறு மாசம் ஒரு வருஷம் முந்தியே ரிசர்வ் பண்றதில்லியா? அத மாதிரி, உங்க கல்யாணத்தை நிச்சயம் பண்ணிடலாம்டா... நடுவில, நீ வேலையில நல்ல ஹோதாவில வந்திடலாம்... வீணாவும் மேல் படிப்பை முடிச்சிடலாம்... இதில யோசிக்கிறது நல்லதில்லே ... இந்த ஜமீன் சம்பந்தம் குறுக்க வருதில்ல?

பரத்:  மாமி... நான் வீணாவை கல்யாணம் பண்ணிகிட்டாலும், இல்லேன்னாலும் உறவுக்காரன்தானே? வீணா ஜமீன் குடும்பத்தில மருமகளா போறது நமக்கெல்லாம் பெருமையான விஷயம்தான்!

மீனாட்சி: (எரிச்சலுடன்) அட போடா பைத்தியக்காரா... உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருக்கிற அந்நியோன்யம் தான் குடும்ப வாழ்க்கைக்கு ஒசத்தி ...  ஜமீன் சம்பந்தம்கிறது ஒய்யாரக் கொண்ட மாதிரி.... அதுக்குள்ள, ஈரும் பேனும் இருக்கிறது நல்லா சோதிச்சு பாத்தா தெரியும்!

வீணா:  மாமி.... எனக்கு குழப்பமாகவும் இருக்கு, பயமாவும் இருக்கு!

மீனாட்சி:  அப்ப  நான் சொல்றபடி கேளுங்க.... 'நாங்க ரெண்டு பெரும் காதலிக்க ஆரம்பிச்சிட்டோம்... வாழ்க்கையிலும் ஒன்னா சேர்ரதுன்னு தீர்மானிச்சிட்டோம்'னு எல்லார் எதிரேயும் சொல்லிடுங்க! மத்ததை நான் பாத்துக்கிறேன்!

வீணா: (பதறியபடி)  ஐயோ மாமி,,,, சாதரணமாவே அப்பா எதிர பேச யோசிப்பேன்.... லவ், கல்யாணம்னு பேச நெனைச்சா, நாக்கு ஸ்ட்ரைக் பண்ணிடும்.... நான் அழுதுடுவேன்!

பரத்:  என்னோட கதையும் அப்படித் தான் மாமி..... ஏற்கெனவே என் அப்பாவுக்கும் வீணாவோட அப்பாவுக்கும் வருஷக் கணக்கா பேச்சு வார்த்தை இல்ல.. இப்ப, நான் எடக்கு மடக்கா லவ், அது, இதுன்னு சொல்ல ஆரம்பிச்சா என்ன நடக்குமோ? இந்த வீட்டுக்குள்ள நான் சகஜமா வந்து போக முடியுமோ முடியாதோ?

மீனாட்சி: என்ன பசங்களோ நீங்க.... நான் ஒன்னு கேக்கறேன் பரத்.... மூர்த்தி அத்தானும், விசாலம் அண்ணியும் ஜமீன் சம்பந்தத்தை பெரிசா நெனைக்கிரா...ஆனா ஜமீன் விஷயத்தில ஏதோ வில்லங்கம் இருக்குன்னு நான் சந்தேகப் படறேன்... அப்படியிருந்தா, வீணாவோட வாழ்க்கை கட்டாயம் பாழாப் போயிடுமா இல்லியா?

பரத்: அய்யய்யோ ... அப்படி நடக்க விடக்கூடாது மாமி....  நான் ஏதாவது செய்ய முடியுமா மாமி?

மீனாட்சி:  திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்கார்?  யார் எது சொன்னாலும் அது சரியான்னு சோதிச்சு பாத்து தெரிஞ்சுக்கணும்....  முக்கியமா, அந்த திவாகர் அமெரிக்காவில எப்படி இருக்கான், எப்படிப்பட்டவன்னு நல்லா விசாரிக்கணும்!

பரத்:  சரி மாமி... என்னோட படிச்சவங்க சில பேர் இப்போ அமெரிக்காவில இருக்காங்க... அவங்க மூலமா ஏதாச்சும் தகவல் கிடைக்கிறதான்னு பாக்கிறேன்

                                                                          /திரை - மறுபடி விலகும்/

காட்சி 12:


(அதே இடம்.... மூர்த்தி, விசாலம் இருக்க, நாகராஜன் கையில் செக்குடன் வருகிறார்)

நாகராஜன்:  மூர்த்தி அத்தான்.... இந்தாங்க,  பிடிங்க செக்கை.... ஜமீன்தார் அனுப்பிச்சிருக்கார்!

மூர்த்தி: (வாங்கிப் பார்த்துவிட்டு)  என்னப்பா இது நாகராஜா... மூணு லட்சத்துக்கு செக்! அதுவும் என் பேர்ல?

நாகராஜன்:  இங்கதான் என் முதலாளி நிக்கிறார்! வீணா-திவாகர் நிச்சயதார்த்த செலவுக்கு பணம் அனுப்பியிருக்கிறார் அத்தான்! அடுத்த மாசத்தில நாலு நல்ல நாள் பாத்தும் எழுதி அனுப்பியிருக்கிறார்! உங்க சவுகரியப்படி ஒரு நாளில நிச்சயதார்தத்தை கிராண்டா நடத்தத் தான் இந்தப் பணம்.... அதுக்கப் புறம் பாருங்க...ஆந்திரா ஜமீன் பங்களாவில எப்படி ரொம்ப விமரிசையா கல்யாணம் நடக்கப் போகுதுன்னு!  வீணாவுக்கு தடபுடல் கல்யாணம் மட்டுமல்ல, அவளுக்குப் பொறக்கப்போற குழந்தைக்குதான் எல்லா சொத்தும் சேரப் போகுது!

விசாலம்:  என்னங்க... இனியும் நாம யோசிச்சா, நம்மளை முட்டாள்னு அக்கம்பக்கத்தில கேலி செய்வாங்க!

மூர்த்தி:  நீ சொல்றதும் சரிதான்... எதுக்கும் நம்ம சோசியர்கிட்ட நிச்சய தேதியை சரி பாத்துக்குவோம் 

(வேம்பு நுழைகிறான்)

வேம்பு:  ஹாய் மூர்த்தி அத்தான்... வீணாவோட நிச்சயதார்த்தம் பத்திதான பேசறீங்க?  டாட் சொன்னார்.... அந்த பங்க்ஷனுக்கு என்னோட கிர் கிர் கிரிஜா, அவ அப்பா, அம்மாவோட வரணும்னு ஆசைப் படறா .... ஒகேவா ?

விசாலம்: தாராளமா வந்து விருந்து சாப்பிட்டுட்டு போகட்டும்... ஆனா, செவ்வாய் மனுஷா நம்ம கண்ணுக்கு தெரிய மாட்டங்களே!.... வந்து என்ன பண்ணப் போறாங்க?

வேம்பு:  ஓல்ட் லேடி ... என்னோட வருங்கால மாமனார் கர் கருக்கு பிசினஸ் மைண்டு ... செவ்வாய் கிரகத்தில புகை, தூசு, சாக்கடை, கொசுக் கடி எதுவும் கிடையாது!  நம்ம ஊர் பத்தி என்னோட கிர் கிர் கிரி அப்பா கிட்ட சொன்னாளா.... அவர் ஒரு பெரிய பிசினஸ் ஐடியா பண்ணி இங்க வரப் போறாரு!

மூர்த்தி: என்ன செய்யப் போறார்? ஏதாவது மருந்து கொண்டாந்து பூமியை சுத்தம் செய்யப் போறாரா உன் மாமனார்?

வேம்பு: சுத்தம் எப்படி ஆகப் போகுதுன்னு சத்தம் போடாம கேளுங்க.... மருந்து மாயம் எதுவுமில்ல... நம்ம ஊரு கூவம் ஆறு, குப்பை கூளம், கொசுக்கடி எல்லாம் என்னோட கிர் கிர் கிரிக்கு ரொம்பவே பிடிச்சிப் போச்சு!  இப்ப, கொசுக் கடி, சாக்கடை நாத்தம் இல்லாம அவளால, செவ்வாயில தூங்கவே முடியலையாம்... ரொம்ப கஷ்டப் படரா!

விசாலம்: (வெறுப்புடன்) சரியான நாத்தம் பிடிச்ச பொண்ணா இருக்காளே!  நீ எப்படிடா செவ்வாயில அந்தப் பொண்ணோட குடித்தனம் செய்யப் போறே!

வேம்பு:  இந்த விஷயத்தில்தான் என்னோட மாமனார் கர் கர் ஐடியா வருது!  பூமியில நாத்தம்னு நாம நினைக்கிறதெல்லாம் செவ்வாயில வாசனையா தெரியுது!  அதனால, இங்க நாத்தம் அடிக்கிற ஐட்டங்களை நான் காண்ட்ராக்ட் எடுத்து காசு செலவில்லாம வாங்கிடுவேன்....   அதை என் மாமனார் செவ்வாய்க்கு கொண்டு  போயி கொள்ளை கொள்ளையா சம்பாதிச்சிடுவார்!

மூர்த்தி: நாத்தம் பிடிச்ச பேமலி .. கொள்ளைக்கார பேமலி... பேஷ்... பேஷ்

விசாலம்: எப்படியோ.... அத்தினி வேஸ்ட்டும் பூமியிலேந்து போயிடும்னு சொல்லு!

வேம்பு: ஆமா... நான் யாருன்னு இப்ப புரிஞ்சுதா!

மூர்த்தி:  ரொம்ப பெருமைப் பட்டுக்காதே... இவ  வேஸ்ட்னு  சொன்னது உன்னையும் சேர்த்து தான்!
(வேம்பு அவரை முறைக்கிறான்... அப்போது நாகராஜனின் செல் போன் ஒலிக்க, அவர் அதை காதில் வைத்து மெதுவாகப் பேசுகிறார்)

நாகராஜன்:  (வேம்புவை தனியே அழைத்துப் போய்)  ஏன்டா வேம்பு... மூர்த்தி அத்தானுக்கு ஏதாச்சும் குரியர் வந்திச்சா?  நீதானே வாங்கி வைப்பே?

வேம்பு:  ஆமா டாட் ... அரை மணி முந்தி ஒரு கவர் வந்திச்சு.... அதோ, டேபிள் மேல வச்சிருக்கேன் பாரு
 
நாகராஜன்: (மெதுவாக) நல்ல வேளை ... அத்தான் அதை இன்னும் பிரிக்கலெ  (உரக்க)  அத்தான்... ராகு காலம் வர்றதுக்குள்ள, செக்கை பூஜை ரூமுக்கு கொண்டு போய் வீணா கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்க பெருமாளை வேண்டிக்குங்க.... அண்ணி.... நீங்களும் போங்க... சாமி ஸ்தோத்திரம் சொல்லுங்க
(மூர்த்தியும் விசாலமும் உள்ளே போகிறார்கள்.... நாகராஜன் அவசரமாக மேஜை மீதிருந்த குரியர் கவரை பிரித்துப் பார்க்கிறார்)

வேம்பு:  (ஆச்சயர்த்துடன்)  டாட் .... மூர்த்தி அத்தானுக்கு வந்த கவர்பா! நீ ஏன் பிரிக்கிற?

நாகராஜன்: (தாஜா பண்ணியபடி) அதில்லடா கண்ணா... இது ஜமீன்தார் ஊரிலேந்து வந்திருக்கிற லெட்டர் .... தெலுங்கில எழுதியிருக்குன்னு எனக்கு போன் வந்திச்சு...  அத்தானுக்கு தான் தெலுங்கு தெரியாதே? ம்.... ஒன்னு செய்யிறேன் (மேசையிலிருந்து பேப்பரையும் பேனாவையும் எடுத்து மடமடவென்று எழுதி கவரில் அதை மாற்றி வைத்து ஒட்டி வைக்கிறார்.... மூர்த்தியும் விசாலமும் நுழைகிறார்கள்)

நாகராஜன்:  மூர்த்தி அத்தான்... ஜமீன் ஊரிலேந்து உங்களுக்கு லெட்டர் வந்திருக்கு பாருங்க!

மூர்த்தி: (அதை எடுத்தபடி)  ஜமீன்தார் எதுக்கு லெட்டர் போட்டிருக்கார்?

நாகராஜன்:  ஜமீன்தார் எழுதலே.... அந்தக் கிராமத்து பஞ்சாயத்து பிரெசிடென்ட் ராமையா போட்டிருக்கிறார்.... அவர் பேரு கவர் மேல தெலுங்கில எழுதியிருக்கு!

வேம்பு:  ஆனா, உள்ள இருக்கிறது தெலுங்கு லெட்டர் இல்லே! அது...

நாகராஜன்:  (அவசரமாக இடைமறித்து):  ஆமா... அந்த ராமையா எனக்கு போன் பண்ணி சொன்னார்... உங்களுக்கு தெலுங்கில எழுதினா தெரியாதே... அதான் இங்கிலிஷ்ல இருக்கு!

மூர்த்தி:  (படித்துப் பார்த்துவிட்டு)  நாகராஜா.... அந்த ராமையா, ஜமீன்தாரை ஓஹோன்னு புகழ்ந்து எழுதியிருக்கார்.... உங்க பொண்ணு ஜமீன் மருமகளா வர்ற ரொம்பவே புண்ணியம் செஞ்சிருக்கனும்னு ராமையா எழுதியிருக்கார்!

நாகராஜன்:  அடடே... அப்படியா எழுதியிருக்கு!

வேம்பு: (ஆச்சர்யத்துடன்)  டாட் ... என்ன இப்படி ரியாக்சன் குடுக்கிறீங்க!  நீங்கதான...

நாகராஜன்: (அவன் வாயைப் பொத்தி)  எழுதினதை ராமையா போன்ல சொல்லிட்டாரே... எதுக்கு ஆச்சர்யப் படறீங்கன்னு கேக்கறான்....

விசாலம்:  இனிமேலும் மசமசன்னு நிக்காதீங்க.... மேல ஆக வேண்டியதைப் பாருங்க!

(நாகராஜன் வேம்புவை தள்ளிக்கொண்டு வெளியே போகிறார்)
                                                                            /திரை - மறுபடி விலகும்/

காட்சி 13:


(அதே ஹால்.... மூர்த்தி, விசாலம் இருக்க, வெளியிலிருந்து மீனாட்சி நுழைகிறாள்)

மூர்த்தி:  வாம்மா மீனாட்சி.... நீ கோவிலுக்கு போய் அர்ச்சனை செஞ்சிட்டு வந்த வேளை , சுப சேதியா வர்ரதும்மா!  ஜமீன்தார் இங்க வந்து பதினைஞ்சு நாள் ஆச்சா... இது வரை தப்பா எதுவும் நம்ம காதில விழல.... இப்ப, அடுத்த மாசம் நிச்சயதார்தத்தை நடத்திக்கலாம்னு ஜமீன்தார் பணத்தை அனுப்பியிருக்கிறார் .... அந்த ஊர் பஞ்சாயத்து ப்ரெசிடெண்ட்டும் ஜமீன்தாரை அப்படி தலையில தூக்கி வச்சு எழுதியிருக்கார்!  நல்ல யோக ஜாதகம் நம்ம வீணாவுதுன்னு இப்ப நல்லாவே புரிஞ்சு போச்சு மீனாட்சி!

மீனாட்சி:  அத்தான்... வீணா உசத்தியா வாழப் போறாங்கிறதில எந்த சந்தேகமும் இல்ல...நிச்சயத்துக்கு இன்னும் நாள் இருக்கே.... அவளுக்கு வரப் போகிற புருஷன் ஸ்ரீராமன் மாதிரி ஏக பத்தினி விரதனா தான் இருப்பான்!

விசாலம்: (சந்தோஷத்துடன்) பார்த்தீங்களா, பார்த்தீங்களா... ஜமீன்தார் பிள்ளை திவாகர் உசத்தியானவன்னு மீனாட்சியே சொல்லிட்டா!

மீனாட்சி:  நான் அப்படி சொல்லலே அண்ணி....நிச்சயதார்த்தம் வரை கொண்டு விட்டிருக்கிற பகவான், வீணாவுக்கு போருத்தமானவனைத் தான் தாலி கட்டவைப்பான்னு சொல்றேன்

(கேட்டுக் கொண்டே கோபால் நுழைகிறார்)

கோபால்:  கல்யாணப் பேச்சு காதில விழறதே மூர்த்தி... இங்க சீக்கிரமா மேள சப்தம் கேக்கும்னு சொல்லு!

விசாலம்:  ஆமா... அதோட, விருந்து சாப்பிட்டு நீங்க விடற ஏப்ப சப்தமும் கேக்கும்!

மூர்த்தி: ஏன்டா கோபால்... உன்னை கொஞ்ச நாளா காணலியே?

கோபால்: என் பொண்டாட்டியோட நிலம் விஷயமா ஆந்திரா பக்கம் போகனுமின்னு சொன்னேனே ஞாபகமில்லியா? போனவன், அப்பிடியே ஜமீன்தார் பங்களாவையும் போய் எட்டிப் பாத்திட்டு வந்தேன்!

விசாலம்:  அதான பாத்தேன்.... ஏதாவது கிடைக்குமான்னு கிளறிப் பாக்காம விட மாட்டீங்களே!

கோபால்:  ஹி , ஹி .... நெஜமாவே வந்திருக்கிற சம்பந்தம் ரொம்ப பெரிய எடம்தான் மூர்த்தி.....ஜமீன் பங்களா, தோப்பு தொறவு இதையெல்லாம் பாத்து பிரமிச்சிட்டுப் போயிட்டேன் ... ஜமீன்தார் நடத்திற ரியல் எஸ்டேட் கம்பெனி உள்பட அத்தினி சொத்தும் இனிமே உன் பொண்ணுக்குத் தாண்டா!  அங்க எனக்கு ராஜோபசாரம்தான் போ! தடபுடல் விருந்து, தட்டில தட்சணைன்னு அசத்திட்டார் ஜமீன்தார்!

மூர்த்தி:  (கடன் நோட்டை எடுத்த படிதட்சணையும் வாங்கினியா!... எவ்வளவு பணம் குடுத்தார் சொல்லு.... நோட்ல எழுதிக்கிறேன்... என் பொண்ணுக்கு வர இருந்ததில கம்மியாயிடிச்சில்ல ?

கோபால்:  தாராளமா எழுதிக்க! மொத்த கடனையும் 'ஜமீன்தார் சம்பந்தி வர்றார்... பராக்.. பராக்'னு  குரல் கொடுத்துகிட்டே அடைச்சிடறேன்!

மீனாட்சி: (கோபத்துடன்) ஏன் கோபால் சார்... பொண்ணு வீட்டு சார்பா அவ்வளவு தூரம் போனீங்களே... மூக்கப் பிடிக்க சாப்பிட்டு வந்து நிக்கிறீங்க..அக்கம்பக்கத்தில விசாரிக்கணும்னு தோணலியா?

கோபால்:  என்னம்மா... இந்த கோழி கோபாலை இப்படிக் கேட்டிட்டே?  எதாச்சும் புதுசா விஷயம் கிடைக்குதான்னு துழாவி துழாவி பாத்தேனே!  ஆனா, அது ஒரு குக்கிராமம்...  இருக்கிற கொஞ்சம் பேரும் படிப்பறிவே இல்லாத தெலுங்கு பேசற ஆசாமிங்க... பஞ்சாயத்து ப்ரெசிடெண்ட்டா இருக்கிற ராமையா என்னோட ஏதோ பேசணும்னு டிரை பண்ணார்... அந்த ஆசாமிக்கும் தெலுங்குதான் தெரியும்!  கடைசியா தட்டு தடுமாறி நம்ம விலாசத்தை கேட்ட மாதிரி இருந்திச்சு... எழுதி குடுத்திட்டு வந்தேன்...

மூர்த்தி:  அந்த ராமையா கிட்டேயிருந்து எனக்கு லெட்டர் வந்தாச்சுடா...  ஜமீன்தாரைப் பத்தி ஆஹா ஓஹோன்னு எழுதியிருக்கிறார்

கோபால்:  கேட்டுக்கிட்டியாம்மா மீனாட்சி... இனிமே என்ன விசாரிக்கிறது?  சம்பந்தத்தை முடிச்சிடுப்பா மூர்த்தி....ஆமா... நான் மாப்பிள்ளை திவாகரைப் உடனே பாத்து கை குலுக்கணுமே!

விசாலம்: (அலுத்துக் கொண்டு)  ஆமா... மாப்பிள்ளை மாடியில இருக்கிராருன்னு பேரு... இங்க இருக்கிற நாங்களே அவரைப் பார்த்து ரெண்டு வார்த்தை பேச முடியலை.... யாரோ 'வாம்மா மின்னலு'ன்னு கூப்பிடற மாதிரி கிர்னு வெளியே போறாரு, கிர்னு மேல போயிடறாரு!

மூர்த்தி:  புரிஞ்சுக்கடி விசாலம்.... மாப்பிள்ளை தன்னோட பிசினசை பார்ப்பாரா, நம்மோட பேசிகிட்டு நிப்பாரா ?

(திவாகர், நாகராஜனுடன் நுழைகிறான்)

திவாகர்:  ஹலோ....

மூர்த்தி:  (பணிவுடன்)  வாங்க மாப்பிள்ளை... உக்காருங்க
 
திவாகர்:  இருக்கட்டும்.... நான் இந்த வீட்டு மாடியில குடி வந்து 21 நாள் ஆகுது...  மொதல் நாள் என்னைப் பாத்தீங்க... அப்புறம், இப்பதான் நான் வந்திருக்கேன்..... ... ஏன்னா... பேச எனக்கு கொஞ்சம் விஷயம் இருக்கு....ம்.... பரத்தையும் வரச் சொன்னேன்... எஸ்... வந்தாச்சு!
(பரத் உள்ளே நுழைகிறான் )

பரத்:  ஹலோ திவாகர் சார்... வரச் சொன்னீங்களே?

திவாகர்:  ஆமா .... என்னை திவாகர்னு கூப்பிட்டா போதும் பரத்.... ஒகே?  என்னோட அப்பா ஜமீன்தார் ஜகன்னாதன் போன் பண்ணி, எனக்கும் வீணாவுக்கும் இன்னும் 15 நாளில கல்யாண நிச்சயம் நடக்கப் போகுதுன்னு சொன்னார்... நான் ஏற்கெனவே, அப்பா நிச்சயம் பண்ற பொண்ணை கட்டிக்கிறதா அவர் கிட்ட ஒத்துக்கிட்டிருக்கேன்!

நாகராஜன்:  மூர்த்தி அத்தான்.... சின்ன ஜமீன்தார் தேங்கா ஒடச்ச மாதிரி, வீணாவை கல்யாணம் செஞ்சிக்க தனக்கு சம்மதம்னு பளிச்சினு சொல்லிட்டார் பாருங்க!

மூர்த்தி:  ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை!

திவாகர்:  இருந்தாலும் ஒரு விஷயத்தை நான் யோசிச்சேன்.. அதைப் பத்தி முக்கியமா பேச வந்திருக்கேன்....  நான் இங்க தங்க வந்தது, கொஞ்ச நாளில என் அப்பா கல்யாண சம்பந்தம் பேச வந்தது, இன்னும் 15 நாளில நிச்சயம் நடக்க இருக்கிறது...  இதனால. உங்க வீட்டில யாருக்காவது ஏதாவது குழப்பம் வந்திருக்க வாய்ப்பு இருக்கு... இல்லியா?

கோபால்:  அதாவது, உங்களை மாப்பிள்ளையா ஏத்துக்க இங்க யாரோ தயக்கம் காட்டுறாங்கன்னு நினைக்கிறீங்களா!

திவாகர்::  ஆமா... அப்படித்தான் எனக்குத் தோணுது!

மூர்த்தி:  மாப்பிள்ளை... உங்களோடது பெரிய சம்பந்தம்... இதை நாங்க எதிர்பார்க்கவேயில்ல... உங்களையும்  முன்னே பின்னே பழக்கமில்லியா ... அதான் ஆளாளுக்கு கொஞ்சம் மிரண்டு போய், இப்ப எல்லாம் சரியாயிடிச்சு....

மீனாட்சி:  அத்தான்... எதுக்கு மூடி மறைக்கணும்.... நான் வெளிப்படையாவே சொல்றேன் தம்பி.... உங்க சம்பந்தம் மட்டும் வராம இருந்திருந்தா, வீணாவுக்கும் பரத்துக்கும் தான் நாங்க கல்யாணம் பேசி முடிச்சிருப்போம்!  ஏன்னா சின்ன வயசிலேந்து பரத் எங்க நிழல்ல வளர்ந்தவன்...  வரப் போற மாப்பிள்ளை எப்படி இருப்பாரோ, தீர விசாரிக்கனுமேங்கிற பயமே இல்லே!

நாகராஜன்:  சின்ன ஜமீன்தார்.... மீனாட்சி சொல்றது வாஸ்தவம் தான்... அதே சமயம், ஒன்னை தெளிவா சொல்லிடறேன்....பரத்-வீணா நடுவில காதல் கசமுசான்னு எதுவுமே இல்லே... உண்மையை சொல்லேம்பா பரத்?

பரத்:  ஆமா அங்கிள்.... நீங்க சொன்னது சரி

நாகராஜன்:  பாத்தீங்களா... நூத்துக்கு நூறு இது பெத்தவங்க நிச்சயம் பண்ற சம்பந்தம்...  அந்தஸ்து, பதவி, சவுகரியமான வாழ்க்கை.. இதையெல்லாம் வச்சு வீணாவைப் பெத்தவங்க, நீங்கதான் மாப்பிள்ளைன்னு தீர்மானம் செஞ்சிட்டாங்க... 15 நாளில நிச்சயதார்த்தம்னும் வந்தாச்சு ... இப்ப, பரத் ஒரு பெரிய வேலையில சேரப் போறான்... கூடிய சீக்கிரம் இவனுக்கு நல்ல வரனா நான் முடிச்சுத் தரேன்!  இதனால, யாருக்கும் மனத் தாங்கல் வர சான்ஸே இல்லேன்னேன்!

திவாகர்: நீங்க ஆயிரம் சமாதானம் சொன்னாலும், எனக்கு ஒரு சின்ன நெருடல் இருக்கு... (மீனாட்சியை கை காட்டி)  இவங்க பரத்தை சின்ன குழந்தையிலேருந்தே தெரியும்னு சொன்னாங்க ... அதாவது என்னைப் பத்தி உங்க யாருக்கும் முழுசா தெரியலை!

மூர்த்தி: மாப்பிள்ளை... மீனாட்சி அந்த அர்த்தத்தில சொல்லலே.... நீங்க தப்பா எடுத்துக்காதீங்க
 
திவாகர்:  கட்டாயம் நான் தப்பா எடுத்துக்கல.... ஆனா, இதை நான் ஒரு போட்டியா எடுத்துக்கறேன்!  நான் பிசினஸ் ஆளு ... போட்டியில்லாத பிசினஸ் எதுவுமில்ல.... அதுவுமில்லாம, அடிப்படையில நான் கிரிக்கெட் ஆசாமி...  பரத்துக்கும் கிரிக்கெட் அனுபவம்  இருக்கு...      வெற்றி, தோல்வியெல்லாம்  எதிர்பாராம கிரிக்கெட்ல வரும்... நம்ம வாழ்க்கையும் கிரிக்கெட் மாதிரிதான்

கோபால்:  மாப்பிள்ளை... இதையெல்லாம் எதுக்கு சொல்றீங்க... நீங்க தான் ஜெயிக்கிற அளவுக்கு வந்தீட்டீங்களே!

திவாகர்:  ஆமா.... கிட்டத்தட்ட...  இருந்தாலும், ஒரு பரபரப்போட ஜெயிச்சா அது எனக்கு ரொம்ப பிடிக்கும்!  கிரிக்கெட்டில கடைசி பந்து இருக்கே... அதோட மகிமையே தனி.... யார் ஜெயிப்பா, யார் தோப்பாங்கறது கடைசி பந்து தீர்மானிக்கும்!  நிச்சயதார்த்தத்துக்கு 15 நாள் இருக்கே, இதுதான் கடைப் பந்து!... இதை வீசப் போறது பரத்.... ஆடப் போறது நான்!  ... யார் ஜெயிக்கிராங்கன்னு பார்த்துடலாம்.... இது ஜாலியான போட்டியாவே எடுத்துக்கலாம்... ஆல் பெஸ்ட்  பரத்! (கை குலுக்கிவிட்டு வேகமாக போகிறான் திவாகர்)

நாகராஜன்:  மூர்த்தி அத்தான்.... மாப்பிள்ளையா வலிய வந்து, கல்யாண விஷயத்தில போட்டிக்கு தயார்னு சவால் விடறார்! இதிலேந்தே தெரியலையா, அவர் சொக்க தங்கம்னு?

மீனாட்சி:  தங்கமா இருந்தாலும் லோகத்தில கண்ணை மூடிக்கிட்டு வாங்க மாட்டாங்க! உரசிப் பாத்துதான் வாங்குவாங்க!

பரத்:  மூர்த்தி மாமா... வீணா ஜமீன்தார் வீட்டு மருமகளாப் போறதுதான் உசத்தி....  போட்டி எதுவும் வேணாம்... விளையாட்டுக்குக் கூட நான்  உங்களுக்கு எந்த தர்மசங்கடத்தையும் குடுக்க நான் விரும்பல மாமா

விசாலம்:  எண்டா பரத்... நெருப்புன்னா வாய் வெந்துடுமா என்ன?  மாப்பிள்ளை என்ன சொன்னாரோ அதை செய்....

வீணா:  ஆமாம் பரத்.... அதிர்ஷ்டம் உன் பக்கம் இருந்தாலும் இருக்கும்....  நீயா நானான்னு ஒரு கை பாத்துடு!

பரத்:  அப்படீங்கிற? ஒகே!

                                                       திரை - மறுபடி விலகும்