Wednesday, June 20, 2012

மூன்றாம் புறம் - சிந்தனைப் பகுதி


முடிந்த கதையைத் தொடர்ந்த சிந்தனைகள்:
என்னுடைய கதையை blogல் தொடராகப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த அதே நேரத்தில், அதைப் புத்தகமாகவும் அச்சிட்டு வெளியிடும் நோக்கத்தில், ஒரு பதிப்பகத்துடன் அதற்கான ஒப்பந்தம் செய்திருந்தேன். புத்தகத்தை அச்சிட்டு வெளியிட இரண்டு மாதங்கள் ஆகுமெனத் தெரிவிக்கப்பட்டது.

ஒரு மாதம் கழிந்திருக்கும்.  கதையின் முடிவுப் பகுதியை blogல் நேற்றுப் பதிவு செய்யும் வேளையில், பதிப்பக உரிமையாளர் வேணு என்னைத் தேடி வந்தார்.  உடன் வந்தவரைத் தன்னுடைய நெருங்கிய நண்பரென எனக்கு அறிமுகம் செய்தார்.
புதியவரின் பெயரைக் கேட்டதும், ஆச்சரியத்தில் நான் உறைந்து போனேன்! மகரிஷி நாரதர்தன்னுடைய முகவுரையில் குறிப்பிட்ட மயில்சாமி!
மயில்சாமி பேசினார் -

நித்யா சார் .. நான் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யிறவன் .. என்னோட நண்பன் வேணு புத்தகங்களை அச்சிடறவன்னா, நான் அதில புழுவா நெளியிறவன்! அதாங்க, புத்தகப் புழு! அச்சுக்கு நீங்க குடுத்த கதையை மொத ஆளா படிச்சிட்டேன்னா பாருங்களேன்

வேடிக்கையாய்ப் பேசியவர், வினாவொன்றை எழுப்பினார் -
நீங்க ஏன் சார் கோகுலை அழ வச்சு அப்படியே விட்டுட்டீங்க?”
நான் திருப்தியடைந்தேன்.  நேர்மையான ஒரு விவசாயி புதையல் எடுத்த கதை, அவரது மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  ஒரு எழுத்தாளனுக்கு வேறு என்ன வேண்டும்?

அவர் தொடர்ந்தார் -
எனக்குப் புரியுது சார்.  கோகுலோட கனவு நிறைவேறினதைச் சொல்லி, நீங்க கதையை முடிச்சிட்டீங்க.  ஆனா, நில அகபரிப்பு முயற்சியினால தன்னோட பாட்டி செத்ததை நெனச்சு கோகுல் விட்ட கண்ணீரை, நிலத்தை விக்கிற தொழில்ல இருக்கிற என்னால அவ்வளவு சுலபமா மறக்க முடியலீங்க

நம்ம நாட்டில, நகர்ப் புறத்தைச் சுத்தி ஜனத்தொகை பெருகி கிட்டே வருது.  வீட்டுக்கும், தொழிற்சாலைக்கும் நிலம் அதிகமா தேவைப் படுது.  அதனால, விவசாயம் பண்ண முடியாம வெறுமெனே கெடக்கிற விவசாய நிலங்க இப்ப குடியிருப்புப் பகுதிகளா மாறிகிட்டு வருது.   இது, காலத்தோட கட்டாயம்

கோகுலோட கதாபாத்திரம், பரம்பரை விவசாய நிலம் இருந்தும் அதில விளைச்சலைப் பாக்க முடியாம தவிக்கிற சின்னச் சின்ன விவசாயிங்களோட நிலமையைப் பிரதிபலிக்குது.  இவங்களுக்கு உதவி செய்ய என் மனதில ஒரு சின்ன திட்டம் பிள்ளையார் சுழி போட்டுகிட்டு உருவாச்சுங்க

நகர்ப் புறத்துக்கும் கிராமப் புறத்துக்கும் இடைப்பட்ட பகுதியில, அதாவது நீங்க தலைப்பு குடுத்த மூண்றாம் புறத்திலதான் என்னைப் போல ஆளுங்க, சாதாரண மக்கள் வாங்கக் கூடிய குடியிருப்பு மனைகளை விக்கிறாங்க.  அப்படி நான் சமீபத்தில ஆரம்பிச்ச திட்டத்தில, ஒரு வீட்டு மனை வாங்கினா, பக்கத்தில மிகக் குறைஞ்ச விலையில விவசாய நிலம் ஒன்னு தர்றதா அறிவிச்சிருக்கேன்! அப்படி விவசாய நிலம் வாங்கறவங்க, தனியாகவோ கூட்டாகவோ அதில உணவு உற்பத்தி செய்ய என்னாலான ஒத்துழைப்பு தர்றதா உறுதி தந்திருக்கேன்! வசிக்க வீடும், புசிக்க வகை செய்யும் நிலமும் பெற எங்கள் கோகுல் நகருக்கு வாங்கன்னு விளம்பரம் செஞ்சிருக்கேன்

என்ன மாதிரி ரியல் எஸ்டேட் தொழில்ல இருக்க மத்தவங்களும் இத மாதிரியான திட்டத்தைச் செயல் படுத்தி, இதற்கு அரசாங்க அனுமதியும், ஆதரவும் இருந்தா, கணிசமான விவசாய நிலங்களைக் காப்பாத்தலாம்னு நான் நினைக்கிறேங்க.  வீடு கட்டற சாதாரண ஜனங்க விவசாயத்தில ஆர்வம் காட்ட இந்தத் திட்டம் வழி வகுக்கும்
மயில்சாமி பேசி முடிக்க, புத்தகப் பதிப்பாளர் வேணு தொடர்ந்தார் -
நித்யா சார் ... கோகுலைப் படைச்சது நீங்க.  அந்தப் பேரில ஆரம்பிச்சிருக்கிற இந்த விவசாய-வீட்டு மனைதிட்டத்தைப் பத்திக் கேட்டா, நீங்க மகிழ்ச்சியடைவீங்கன்னுதான், உங்களைச் சந்திக்க மயில்சாமியைக் கூட்டி கிட்டு வந்தேன்
யான் பெற்ற இன்பம் வாசகர்களும் பெற, இந்த விவரங்களைத் தந்துள்ளேன்.

அன்புடையீர், இந்திய நாடு விவசாய நாடு...வள்ளுவனும் பாரதியும் உழவைப் போற்றியதை நீங்களறிவீர்.  ஆதலின், வீட்டுடன் விளை நிலத்தையும் நாடுவீர்.  நீவீர் எத் தொழில் புரிபவராயினும், பசியகற்றும் ஏரோட்டும் பணியினைப் பேணிக் காத்திடுவீர்.
மேற்படி விளைநில-வீடுகோகுல் நகர் திட்டத்துக்கு உங்களது ஆதரவு இருந்தாலோ, விளைநிலங்களைக் காப்பாற்ற மாற்றுத் திட்டம் தர நீங்கள் விரும்பினாலோ -

NO  WAITING  FOR  COMMENTING !
                                                                 ஆசிரியர்

Tuesday, June 19, 2012

மூன்றாம் புறம் - இறுதிப் பகுதி
15. விவசாயிகளின் விழா

எந்தத் தரப்பிலிருந்தும் ஒரு சிறு எதிர்ப்பும் வராமல், நூறு சதவிகித வெற்றியுடன் நடந்த நிகழ்ச்சியென்றால், அது கிருஷ்ணாம்பட்டியில் கிருஷ்ண ஜயெந்தியன்று நடந்த மாபெரும் கூத்துக் கலைவிழா தான்!
சாதாரணமாக, ஓரு புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்தால், முந்தைய பதவிக் காலத்தில் அனுமதிக்கப் பட்டவையெல்லாம், இப்பொழுது அரை வேக்காடாக நின்று போகும்.  ஆனால், பரந்த மனம் படைத்த புதிய
முதலமைச்சர், பல்லாண்டுகளாய் ந்டந்த கிருஷ்ணாம்பட்டி விவசாயக் குடும்பங்களின் பாரம்பரியக் கலையைப் புதுப்பிக்கும் முயற்சிக்கு முழு ஆதரவு தெரிவித்தார்!

பிற்கென்ன... பெரிய மனிதர்களின் ஆதரவும் சேர்ந்து, பத்திரிக்கை, டீவி, சுவரொட்டிகள் போன்றவை மூலம், பிரமிக்கத்தக்க விளம்பரம் பெற்று, த்மிழ் பாரம்பரியத்தில் அக்கறை கொண்டோரை உலகின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் ஈர்த்து, கிருஷ்ணாம்பட்டி மைதானத்தை மனித வெள்ளத்தால் நிரப்ப வைத்தது கூத்து விழாக் குழு!

அந்த நிலப் பரப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும்,தாத்தா பாட்டி போன்ற முந்தைய தலைமுறையினரின் வாய் வழிச் செய்திகளைக் கேட்டறிந்து, அந்த விவரங்களை விழாக் குழு மலராக வெளியிட,  மிகத் தொன்மை வாய்ந்த பாரம்பரிய நிகழ்ச்சி அந்த மண்ணில் அரங்கேறி வந்தது தெளிவாகியது.

விழா நாயகன், பாகவதத்தில் விவசாயியை அன்ன தாதாவெனப் புகழ்ந்த கிருஷ்ண பகவான் தான் என்பதில் யாருக்காவது ஐயமிருக்குமா என்ன?  இங்கிலாந்திலிருந்து சினிமா உதவி இயக்குநர் ராமு குழுவினருடன், சிலை சரியான நேரத்தில் கிருஷ்ணாம்பட்டிக்கு வந்து சேர்ந்ததுமே, அந்த இடம் பக்திப் பரவசத்தில் மூழ்கியது.  மேட்லி துரை வைத்திருந்த வரைபடத்தின் உதவியுடன், முன்பு கோயில் அமைந்திருந்த இடம் கண்டறியப்பட்டு, கலை நிபுணர்களின் கைவண்ணத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட உயரமான பீடம் அமைக்கப் பட்டு, அதில் ஸ்ரீகிருஷ்ணர் சிலை வேதங்கள் முழங்க பிரதிஷ்டை செய்யப் பட்டது.

தெய்வீக மணம் சூழ்ந்த நிலையைக் கவனத்தில் கொண்டு, காலை முதல் இரவு கூத்து ஆரம்பிக்கும் வரை நடைபெறவிருந்த வேறு கலை நிகழ்சிகளைக் கவனமாகவும் ரசனையாகவும் வடிவமைத்திருந்தனர் விழாக் குழுவினர்.  உணவகங்கள், தங்குமிடங்கள், கடைகள் என பல்வேறு வசதிகள் குறைவில்லாமல் இருந்தன.

உற்சாகத்தின் உச்சத்தை மனதில் நிரப்பிக் கொண்டு, அந்த மைதானத்தை வலம் வந்துகொண்டிருந்தான் ராமு.  கிருஷ்ணாம்பட்டி கிருஷ்ணர் சிலை இடம் பெற்ற படப் பாடலை இயக்கியவன் என்று அவனுக்கு எக்கச்சக்கமான விளம்பரம் மீடியா தயவால் கிடைத்திருக்கிறது.  நூறு ஆண்டு இடைவெளிக்குப் பின் கண்ணபிரான் இச்சிலை வடிவில் தனக்குத் தான் முதல் தரிசனம் தந்தார் என்கிற பெருமை வேறு அவனுக்கு!

யாருமே எதிர்பார்க்கவில்லை, இங்கிலாந்திலிருந்து மேட்லி துரையின் பேரன் ஆல்பர்ட் அந்த விழாவுக்கு வருவானென்று!  அவன் தன்னுடைய வருகையை யாருக்கும் தெரிவிக்காமல், கூட்டத்தில் ஒருவனாகச் சுற்றிவந்தான்.  தன்னுடைய தாத்தா, முல்லை பெரியாறு அணை புகழ் பென்னிகுயிக் அளவுக்குத் தமிழ்நாட்டில் பிரபலமாக இல்லாவிடினும் பரவாயில்லை... கிருஷ்ணாம்பட்டி விவசாயிகளைக் கொடுமைப்படுத்தியல்லவா பிரபலமடைந்தார்?  அவரது பெயரைச் சொல்லி தன்னை அங்கு பிறரிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள அவன் வெட்கப்பட்டான்.  அதே சமயம், சிறு வயது முதல் தன் வீட்டுத் தோட்டத்தில் தான் சுற்றிச் சுற்றி விளையாடிய கிருஷ்ணர் சிலை, இன்று மக்கள் வெள்ளத்தினிடையே கம்பீரமாக நிற்பதை, மதம் கடந்த தோழமைப் பாசத்துடன் பார்த்துப் பரவசமடைந்தான் ஆல்பர்ட்!

ராமுவின் பார்வையில் எப்படியோ ஆல்பர்ட் பட்டுவிட, சிலைக்கும் ஆல்பர்ட் குடும்பத்தினருக்கும் இருந்த உறவு செய்தியாளர்களிடையே காட்டுத் தீ போலப் பரவியது.  தாத்தா மேட்லி துரை பற்றிய நிருபர்களின் கேள்விகளுக்குத் தனக்குத் தெரிந்தவைகளை மறைக்காமல் கூறி, தாத்தா சார்பில் கிருஷ்ணாம்பட்டி விவசாயக் குடும்பங்களிடம் தான் மன்னிப்பு கோருவதாக பகிரங்கமாக அறிவித்தான் ஆல்பர்ட்.
வண்ண மயமான வாணவேடிக்கைகளின் முடிவில். மஹாபாரதக் கூத்து இரவு எட்டு மணிக்குத் தொடங்கியது.  இன்றைய அவசர உலகை மனதில் கொண்டு, கூத்து நான்கே மணிகளில் பழமை மணம் மாறாமல் முடியுமாறு அமைக்கப் பட்டிருந்தது.  நேர்த்தியான ஒளி ஒலியமைப்புடன், பல்லாயிரக்கணக்கானோர் வட்ட வடிவில் அமர்ந்து பார்க்கும் வசதியுடன் மேடையமைப்பு...ஆஙகாங்கே மின்திரை....

தருமர் வேடத்தை கோகுல் ஏற்க, நவநீத், வெங்கட், ராதா, கோபால் ஆகியோர் மற்ற பாண்டவர் சகோதர்களாகத் தோன்ற, நார்வே பெண்மணி கரோலினின் இயக்கத்தில், மஹாபாரதக் கூத்து சிறப்பாக நடந்தது.
கூத்தின் முடிவில், கண்ணபிரான் பவனி வர,அவரவர் நிலங்களில் விவசாயிகள் நின்றுகொண்டு, வயலில் விளைந்ததை சாமிக்குப் படைப்பது மரபு. மேட்லி துரை வசமிருந்த வரைபடத்தின் உதவியால் துல்லியமாகக் குறியீடு செய்யப்பட்ட தன் பாட்டன் நிலத்தில் தருமராக வேடமிட்ட கோகுல், திரொளபதி வேடதாரியுடன் படையலுடன் நின்றிருந்தான்.

ஒற்றை உறவாக இருந்த பாட்டனின் பிறந்த மண் ஏக்கத்தைத் தன் வாழ்நாளின் ஒரே குறிக்கோளாக ஏற்று, அதே மண்ணில் இப்போது நிற்கிறான் கோகுல்!  பெருமைப் படவேண்டிய தருணமல்லவா இது!  ஆனாலும், அவன் முகத்தில் ஏன் இனம் புரியாத சோகம்?

அப்போது -

ஆங்கில சிப்பாய்கள் வேடமணிந்த சிலர் துப்பாக்கியுடன் வந்து, பாண்டவர், கவுரவர் வேடமணிந்தோரைச் சூழ்ந்து கொண்டனர்!  தலைமைச் சிப்பாய் உரக்கக் கூவினான் -

இந்த இடத்தில் கூத்து நடத்தக் கூடாது என்று அரசாங்கம் சார்பாக ஏற்கெனவே மேட்லி துரை அவர்கள் உத்திரவு போட்டுள்ளார். அரசு ஆணையை மீறுவது குற்றம்... உடனடியாக, எல்லோரும் கலைந்து போய்விடுங்கள்

தருமராக வேடமணிந்த கோகுல், ஆவேசமாகக் குரல் கொடுத்தான் -

இது எங்கள் விளைநிலம்...ஆண்டுக்கு ஒரு முறை நாங்கள் கூத்து விழா நடத்துவது பரம்பரை பரம்பரையாக நடக்கிறது.  அருகில் நீங்கள் ஏற்படுத்தியுள்ள கோல்ஃப் விளையாட்டு மைதானத்துக்கு வரும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எங்கள் விழா இடைஞ்சலாக இருப்பதாக துரை அவர்கள் தடையுத்திரவு போட்டது நியாயமற்றது

அதிகாரியின் குரலில் கோபம் கொப்பளித்தது -

நீ விதண்டாவாதம் பேசுகிறாய்.  அரசாங்க உத்திரவை மீற உங்களுக்கு அனுமதியில்லை.  நான் பத்து எண்ணுவதற்குள் எல்லோரும் கலைந்து போய்விடுங்கள்.  இல்லாவிடில், சுட்டுத் தள்ளுவோம்

வேடதாரிகள் ஒவ்வொருவராக பீதியுடன் வெளியேற ஆரம்பிக்க, ‘தருமர்கோகுல், திரொளபதி வேடதாரியுடன் ஏர் கலப்பை சகிதம் தன்னுடைய நிலத்தை விட்டு அசையாது நின்று, மற்றவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தான் -

தயவு செய்து யாரும் விலகாதீர்கள்.  இது நம்முடைய தன்மானப் பிரச்சினை

ஆயினும் பலனில்லை... அவர்கள் இருவரைத் தவிர அங்கு யாருமில்லை!

சிப்பாய்த் தலைவன் பத்து வரை எண்ணி முடித்து, Fire என்று உத்திரவிட, துப்பாக்கி சீறும் சப்தத்தைத் தொடர்ந்து, கோகுலை மறைத்து நின்ற திரொளபதி வேடதாரி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மண்ணில் சாய்கிறார்!
ஒளி வெள்ளம் கோகுலின் மீது வட்ட வடிவமாகப் பாய, அவன் தழுதழுத்த குரலில் பேசினான் –

இத்தினி பெரிய மனுசங்க, படிச்சவங்க எல்லோரும் இப்ப கடோசியா பாத்த காட்சி, நெசமா நான் நின்னுகிட்டிருக்கிற இதே மண்ணுல ந்டந்த கொடுமைங்க.  வெள்ளக்கார சிப்பாயி துப்பாக்கியால சுட்டதில செத்துப் போனது, திரொளபதி வேசம் கட்டின என்னோட கண்ணம்மா பாட்டி...
வயத்துப் பொழப்புக்காக, மாட்டோட மாடா சேர்ந்து வேர்க்க விறுவிறுக்க ஏர் ஓட்டிப் பொழச்சவங்க இந்த கிருஷ்ணாம்பட்டி விவசாயிங்க.  அவங்க போதாத காலம், வெள்ளக்காரங்க கோல்ஃப் குச்சி வெளையாட்டு மைதானம் அருகாமையில வந்திச்சு. வெள்ளக்கார அதிகாரிங்க அங்க வந்து போக, எங்க வெவசாய நெலங்க தடையா இருந்திச்சாம்; அதனால எங்களை வெரட்ட மேட்லி தொரை திட்டம் போட்டாரு.  வருசத்துக்கு ஒரு தரம் பாரம்பரிய பழக்கத்தை விடாம, விவசாயிங்க ஒன்னா சேர்ந்து கூத்து போட்டு சாமிக்கு படைக்கிறதை, வெள்ளைக்காரங்களுக்கு தொந்திரவு கொடுக்கிறதா தப்பு கண்டுபிடிச்சாரு தொரை.  இந்த நிலத்தில கலப்பையோட தைரியமா நின்ன என்னோட அனந்தகிருஷ்ண தாத்தாவுக்கு வச்ச தோட்டா குறி, குறுக்க புகுந்த பாட்டி கண்ணம்மாவை காவு வாங்கிடுச்சுங்கய்யா..(அழுகிறான்)
இதே எடத்தில தாங்க,  தாத்தா கண்ணெதிரியே பாட்டியை அவக குழி தோண்டிப் பொதச்சாங்க.  அதிகாரிங்களோட நகைங்களை கொள்ளையடிச்சதா பொய் கேசு போட்டு, மொத்த கிராமத்து விவசாயிங்க்களையும் கண்காணத தூரத்தில கொண்டு விட்டுட்டாங்க சாமி

ஐயா... நாங்க கையாலாகாத ஏழைங்கன்னாலும், பாசம், பந்தம், சொந்த மண்ணு பேரில பிரியம்னு எங்களுக்கும் இருக்கே... சியாமளா சின்னம்மா, பெரியவரு சாரி, வாசு சார் மாதிரி ந்ல்லவங்களோட விடாமுயற்சியால, நான் இங்க வந்து சேர்ந்திட்டேன்.  இந்த மண்ணுக்கு சொந்தம் கொண்டாட நான் வரலீங்க.  என்னோட தாத்தா கடோசி ஆசைப்படி, கொஞச நேரம் இங்க ஏர் ஓட்டணும்.. அப்புறம் ... உள்ளுக்குள்ள பொதஞ்சு கெடக்கிற என் பாட்டி கண்ணம்மாவோட மிச்சத்தை வெளிய எடுத்து ஈமக் கிரியை 
செய்யணும்... இதை செய்ய விடுங்கய்யா

கோகுல் குலுங்க குலுங்க அழ ஆரம்பிக்க, அங்கு கூடியிருந்தோர் மனங்கள் ஒரு சேர பச்சாதாபத்தால் நிரம்பின.

(வாசகர்களே.. கதையை மேலே தொடர மனமில்லாமல் இங்கே முடித்திருக்கிறேன்.  ஆனாலும், கதை சம்பந்தமாக இன்று நடந்த ஒரு முக்கிய நிகழ்வினை, உங்களுடன் நாளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் - ஆசிரியர்)

 photo courtesy: ngm.nationalgeographic.com

Sunday, June 17, 2012

மூன்றாம் புறம் - பகுதி 14


14. கோகுல் ந்ல்லவனா, கெட்டவனா?

தனது வாழ்வைத் தானே சீர்குலைத்துக் கொண்டு, தந்தைக்குக் கொள்ளி போடமுடியாமல் வேறு மாநிலத்தில் பதுங்கியிருந்து, இறுதியில் போலீஸிடம் சிக்கிச் சிறையிலடைக்கப்பட்ட பாஸ்கருக்கு, சியாமளாவால் ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது.

இனி, அவளது எதிர்காலத்தையும், சாமந்தி கம்பெனியின் எதிர்காலத்தையும், வாசுவுடன் கை கோர்த்துக் கொண்டு எதிர் நோக்க சியாமளா தயார்.
தொடர்ந்து வந்த நிகழ்சிகள் குதூகலமாகவே அமைந்தன.

இங்கிலாந்தில், சினிமாவுக்காக கிருஷ்ணர் சிலையை படமெடுக்கத் தனக்கு அனுமதி தந்த வெள்ளைக்கார அதிகாரியின் பேரன் ஆல்பர்ட்டை ராமு சந்தித்தான்.  அச் சிலையைத் திரும்ப கிருஷ்ணாம்பட்டிக்குக் கொண்டுவரவேண்டுமென்கிற தமிழ்நாட்டு பக்தர்களின் விருப்பத்தை ராமு ஆல்பர்ட்டிடம் தெரிவிக்க, அதற்கு உடனே அவன் சம்மதம் தெரிவித்தான்.

அச்சிலையைத் இங்கிலாந்துக்குக் கொண்டு வந்த நாள் முதல், இறக்கும் வரை அவனுடைய தாத்தா,  தன்னுடைய பதவி காலத்தில் தான் கிருஷ்ணாம்பட்டியில் செய்த பல தவறுகளுக்காக, மன நிம்மதியிழந்து தவித்ததாக ஆல்பர்ட் கூறினான்.  சிலையைப் பழையபடி உரிய இடத்தில் சேர்த்தால், தாத்தாவின் ஆன்மா சாந்தியடையுமெனத் தான் கருதுவதாகவும் அவன் தெரிவித்தான்.

ஒரே வாரத்தில் கிருஷ்ணாம்பட்டிக்குச் சிலை வந்து சேர ஏற்பாடுகள் செய்துவிட்டதாக, சாரியிடம் போனில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான் ராமு.  தான் இங்கிலாந்தை விட்டு இந்தியாவுக்குக் கிளம்பும் முன், ஆல்பர்ட்டை மறுபடி சந்தித்து, அவனது தாத்தா விட்டுச் சென்ற கிருஷ்ணாம்பட்டி பற்றிய முழுத் தகவல்களையும் பெறப் போவதாகவும் ராமு சொன்னான்.
பாஸ்கர், மாஜி மந்திரி உதவியுடன் எவ்வாறெல்லாம் விசாரணைக் கைதிகளாக இருந்த கோகுல் மற்றும் இதர கிராம இளைஞர்களை மிரட்டி வாக்குமூலம் தர வைத்தான் என்பதை, இன்ஸ்பெக்டர் பரத் பத்திரிக்கை மற்றும் சேனல் பேட்டிகளில் விவரித்ததன் காரணமாக, கோகுல் மீது சியாமளாவுக்கு இருந்த மனக் கசப்பு விலகியது.  எனவேதான், சிறையிலிருந்த கோகுலைச் சந்திக்க வாசுவும், சாரியும் கிளம்பியபோது, சியாமளாவும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள்!

அவர்களின் கார் பயணத்தின் போது சாரிக்குத் தொலைபேசி அழைப்பு வர, ராமு ம்று முனையில் உற்சாகத்துடன் பேசினான் -

மாமா...நீங்க உடனடியா இனிப்பு வாங்கி எல்லோருக்கும் கொடுங்க...இப்ப  ஆல்பர்ட் வீட்டிலேந்துதான்    பேசறேன்...கிருஷ்ணாம்பட்டி பத்திய நாம எதிர்பார்த்த எல்லா தகவல்களும் கிடைச்சாச்சு மாமா!

க்ரேட்றா ராமு... விவரமா சொல்லு

அந்த வெள்ளைகார அதிகாரியோட பெட்டியைக் குடஞ்சதில, கிருஷ்ணாம்பட்டி வரைபடம் கெடைச்சது.  கோல்ஃப் மைதானம், குறுக்க ஆறு, கிருஷ்ணாம்பட்டிக் கோயில், கோயிலை சுத்தி பயிர் நிலங்க, வீடுங்கன்னு ஆளுங்க பேரோட, அளவோட குறிச்சிருக்கு மாமா.  குறிப்பா, கோகுலோட தாத்தா அனந்தகிருஷ்ணன் நிலம் எங்கன்னு தெளிவா இருக்கு... அதை நான் உங்களுக்கு ஈ மெயில்ல அனுப்பறேன்

கோகுலை பாக்கத்தான் நாங்க போயிண்டு இருக்கோம்.  அவன் ரொம்ப சந்தோஷப் படுவான்.  கிருஷ்ண பகவான் உன் மனசில புகுந்து ந்ல்லதை பண்ணியிருக்கார்...ரொம்ப ந்ன்றிடா ராமு

மாமா...நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.  இப்ப என் மனசில   கிருஷ்ணாம்பட்டின்னு டைட்டில் போட்டுண்டு ஒரு முழு சினிமா கதையே ஓடிண்டு இருக்கு!

பலே...பலே!  சந்துல சிந்து பாடிட்டியா!  சோழியன் குடுமி சும்மா ஆடாதுங்கறே!

அதை விடுங்க மாமா...கிருஷ்ணாம்பட்டி விவசாயிங்களுக்கு ரொம்ப தொல்லை குடுத்ததா தன்னோட தாத்தா அவரோட டைரியில எழுதியிருக்கிறதா ஆல்பர்ட் சொன்னான்.  கடைசி காலத்தில தாத்தா அதுக்காக வருத்தப் பட்டு சர்ச்சில பாவ மன்னிப்பு கேட்டாராம்.  மாமா ... 

ஆல்பர்ட்டோட தாத்தா பேரை கேட்டா நீங்க ஆச்சரியப் படுவீங்க.. ஒரு நாள் நடுநிசியில உங்க காதில விழுந்த பேருதான்... மேட்லி துரை!
ஒரு வினாடி அதிர்ந்து போனார் சாரி.  அன்று தன்னுடைய காதுகளில் விழுந்த கூத்து உரையாடல்கள் எல்லாம் கண்ணபிரானின் திருவிளையாடலா!

*             *                  *                 *

சிறையில் தன்னைப் பார்க்க சாரி, வாசுவுடன் சியாமளாவும் வந்ததுடன், தன் தாத்தா உழுத நிலத்தின் இருப்பிடம் தெரிய ஆதாரம் கிடைத்த தகவலை அவர்கள் சொல்ல, கோகுல் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தான்.  சியாமளாவை நோக்கிக் கைகூப்பிய வண்ணம் அவன் நெக்குருகிப் பேசினான் -

சின்னம்மா.. என்னோட உடம்பை செருப்பா தெச்சுப் போடற அளவுக்கு நான் உங்களுக்கு கடமைப் பட்டிருக்கீங்க.... லட்சுமி கடாட்சம்னா என்னன்னு உங்களைப் பாத்தப்புறம்தான் புரிஞ்சுகிட்டேன்... உங்க பார்வை என் பேரில பட்ட பெறகுதான், நான் வருஷக் கணக்கா நிறைவேத்த முடியாம தவிச்சுக் கிட்டிருந்த என்னோட தாத்தாவோட கனவு இப்ப நெஜமா நடக்கப்போற நெலைக்கு வந்திருக்கு. நீங்க, சாரி பெரியவரு, வாசு ஐயா அல்லாரும் இந்த வெறும் பய பேரில பிரியம் காட்டி, ஆதரவு தர்றது, நான் செஞ்ச பூர்வ ஜென்ம புண்ணியங்க

கோகுல் மனதிலிருந்து வெளிப்பட்ட உண்மையான வார்த்தைகளால், வந்தவர்கள் நெகிழ்ந்து போயினர்.

அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் பரத், அவருக்குச் சற்று முன் கிடைத்த புதையல் பற்றிய சேதியை, அவர்களிடம் பகிர்ந்துகொண்டார் -
முன்னாள் அமைச்சர் செல்லமுத்து ஏற்பாட்டின் படி, மிஷினை ஓட்டின ராபர்ட், பீட்டர் இருவரும் கேரளாவில் மறைஞ்சுகிட்டிருந்ததை போலீஸ் கண்டுபிடிச்சுட்டாங்க.  ஆங்கிலேயர் இருந்தப்ப, விவசாயிங்க அவங்க ந்கைங்களை கொள்ளையடிச்சு, கிருஷ்ணாம்பட்டி நிலத்தில புதைச்சு வச்சதா ஒரு கேசு நடந்ததை இன்டெர்ந்ட்டில பார்த்திட்டு, அந்த மிஷின் ஓட்டற ஆசாமிங்க, இந்த அஞ்சு கிராமப் புள்ளங்களோட, மண்ணைத் தோண்டி தேடியிருக்காங்க.  ஆனா, ந்கைங்களை கொள்ளையடிச்சதுக்கு ஆதாரமேயில்லன்னு ஆங்கிலேய அரசாங்கமே நாலு வருஷம் கழிச்சு அந்தக் கேசை ரகசியமா மூடிட்டாங்கன்னு ரிகார்டில இப்ப தெரிஞ்சிடிச்சு

வெரி குட் நியூஸ்என்ற வாசு, கம்பிகளுக்குப் பின்னாலிருந்தவர்களைப் பார்த்து ஜோக் அடித்தான் -

அப்ப நீங்க எல்லோரும் கிருஷ்ண ஜெயந்திக்கு உங்க நிலத்தில கூத்து போடறது உறுதியாயிடிச்சு...இனியாச்சும் புதையலை மறந்துடுவீங்க இல்லே!

மற்ற நால்வரும் குற்ற உணர்ச்சியில் தலை குனிய, கோகுல் தீர்மானமாகச் சொன்னான் -

வாசு சார் ... நான் சின்னம்மா கிட்ட மொதல்லியே சொல்லியிருக்கேன்... கிருஷ்ணாம்பட்டி நிலத்தக் கண்டுபிடிச்சு, ஏர் ஓட்டி உழுகணும்...கூத்து போடணும்...இன்னொரு விஷயமும் தாத்தா சொல்படி செய்யணும்.. அதான் தாத்தா நிலத்தை தோண்டனும்!

எல்லோரும் வாயடைத்து நிற்க, சியாமளா சிறிது கோபம் தொணிக்கக் கேட்டாள் -

என்ன பேசறே கோகுல்?  கோர்ட்ல ஜட்ஜ் கிட்ட, புதையல் எடுக்கப் போறதா நீ ஒத்துக் கிட்டது நெஜம்தானா?”

ஆமாங்க சின்னம்மா...ஆனா, அதை ரகசியமா செய்ய மாட்டேன்!  கிருஷ்ண ஜெயந்தியன்னிக்கு, கூத்து முடிவில எல்லா மனுஷனுங்க மத்தியில, என் பாட்டன் நிலத்த தோண்டுவேங்க.  அதுக்கு என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துக்கிறேங்க!

கோகுலின் வெளிப்படையான பேச்சு, சியாமளா உள்பட அனைவருக்கும் ஒன்றைப் புரிய வைத்தது.  கோகுல் விநோதமானவன்.  ஆனால் கெட்டவனில்லை!

பிறகு, கூத்துப் பட்டறை உரிமையாள்ர் கரோலினையும், வாசுவையும் தனியே சந்திக்க ஆசைப்பட்டான் கோகுல்.  கிருஷ்ண ஜெயந்தி கூத்தின் முடிவுக் கட்டத்தில், ஒரு சிறிய காட்சியைச் சேர்க்குமாறு அவன் வேண்டுகோள் விடுக்க, அவர்களும் அதற்குச் சம்மதித்தனர்.

அது என்னவென்று, அந்த விழா நடைபெறும் வரை காத்திருந்து பார்ப்போமே!

(குறிப்பு: வாசகர்களே... அடுத்த பகுதியுடன் கதை முடிகிறது.  மகரிஷி நாரதரின் வினாக்களை நினைவில் கொள்ளவும்.)
...தொடரும்