Sunday, June 3, 2012

மூன்றாம் புறம் - பகுதி 2



2. மஹாபாரதத்தில் துப்பாக்கி
நடுநிசி...கும்மிருட்டு....வாகன நடமாட்டமேயில்லாத சாலை.....இரு பக்கமும் குடியிருப்பு ஏதுமில்லாத பரந்த நிலப்பரப்பு.
பழுதடைந்து நின்று போன வேனில் நரசிம்மாச்சாரி குறைத் தூக்கத்தில் இருந்தார். பக்கத்தில் சினிமா உதவி இயக்குநர்  ராமுவின் குறட்டை ஒலி. படப்பிடிப்பில் ஓடியாடி வேலை செய்த களைப்பு அவனுக்கு.

சினிமாக்காரர்கள் திருமணக் காட்சிக்கு முஹூர்த்ததுக்கு நேரமாச்சு..பொண்ண அழச்சிண்டு வாங்கோபுகழ் ஐயரை ஒப்பந்தம் செய்வது போல, வாய்க்கு ருசியான சமையலுக்குப் படப்பிடிப்பு நாட்களில் நரசிம்மாச்சாரியைத் தான் கூப்பிடுவார்கள்.

பாண்டிச்சேரி கிராமமொன்றில் ஒரு வாரம் படப்பிடிப்பு. கடைசி நாள் இரவு உணவு முடிந்து வேனில் சாரி, ராமுவுடன் கிளம்பும்போது மணி ஒன்பதரை.

குறுக்கு வழியில் சென்றால் சீக்கிரம் சென்னையை அடைந்து விடலாமென்று டிரைவர் முடிவெடுத்ததன் பலன், ஆள் அரவமில்லாத பகுதியில் வண்டி நின்று போய், இரவுப் பொழுதை வெட்ட வெளியில் கழிக்க வேண்டிய நிலமை.

திடீரென நிசப்தத்தைக் கிழித்தபடி காற்றில் மிதந்து வந்த உரையாடல்கள் நரசிம்மாச்சாரியின் காதுகளை எட்டின-

தர்மனே....நீயும் உனது நான்கு சகோதரர்களும், உஙகளது மனைவி திரொளபதியும், இனி எனக்குச் சொந்தம்...துச்சாதனா...நீ போய் திரொளபதியை இழுத்து வா

....................

வந்து விட்டாயா திரொளபதி.....எப்படியெல்லாம் என்னைக் கேலி செய்தாய்! அதற்கு இப்பொழுது பழி தீர்க்கிறேன் பார்! தம்பி துச்சாதனா...இவளது உடைகளை அவிழ்த்தெறி! இந்தச் சபையினர் எல்லோரும் கண்டு களிக்கட்டும்!

வேண்டாம் மகனே துச்சாதனா...திரொளபதியை ஒன்றும் செய்யாதே.... பாவச் செயலுக்கு இடம் கொடாதே
யாருடைய அறிவுரையும் எனக்கு வேண்டாம்...ம்...துச்சாதனா...நான் ஆணையிடுகிறேன்....சொன்னதைச் செய்

(பெண் குரல்)  அருகில் வராதே துச்சாதனா...தருமரே, பீமரே, அர்ச்சுனரே... ஏன் எல்லோரும் மவுனமாக நிற்கிறீர்கள்?  ஐயகோ...எனது உடையை எழுக்காதே நீசனே....ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா .... என் மானத்தைக் காப்பாற்று
.........
உமக்கு கோடானு கோடி நன்றி கண்ணா....எனக்கு நேர இருந்த பெரும் அவமானத்தைத் தடுத்தீர்

(கோஷ்டி குரல்கள் - குழலூதும் தெய்வமே...இந்த விவசாயக் குடும்பஙகளுக்கு நீரே குல தெய்வம்...உமது பெருமையை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு கிருஷ்ண ஜெயந்திக்கும் கூத்துப் பாடல்களுடன் விழா எடுத்துக் கொண்டாடுகிறோம்!  எஙகள் வயல்களின் விளைச்சலைத் தஙகளுக்குப் படைக்கிறோம்...ஏற்றுக் கொள்ளுங்கள் பரமாத்மா

நரசிம்மச்சாரி எழுந்து உட்கார்ந்து ராமுவை உலுக்கி எழுப்பினார் -
டேய் ராமு....கூத்து டயலாக் கேக்குதுடா.....மஹாபாரதம்!

தூங்க விடுஙக மாமா...காலையில மறுபடி டப்பிங்குக்கு ஓடணும்

சிணுங்கலுடன் வாசு சுருண்டு படுக்க, தன் வழுக்கைத் தலையைத் தடவியபடி யோசித்தார் சாரி. இந்தக் குறுக்கு வழியில் அவர் சில முறை வந்திருக்கிறார்.  கண்ணுக்கு எட்டிய வரை குடியிருப்புகள் இல்லை...இப்படியிருக்க, யாருக்காக கூத்து நடக்கிறது?

தூக்க தேவதை சாரியைத் திரும்பத் தழுவ வந்த முயற்சி பயன் தரவில்லை.  மறுபடி காற்றில் வந்த குரல்கள் சாரியின் கண் இமைகளை விலக்கி வைத்தன!

(பெண் குரல்)
வெள்ளக்கார தொரெ...நீங்க ஏன் கிருஷ்ணர் சாமி கோயிலுக்கு வந்தீஙக?”
கண்ணம்மா...நீ இந்த நேரத்தில இங்க வருவேன்னு தெரியும்....அதான் வந்தேன்!

தொரே....நீங்க குடிச்சிருக்கீங்க

கண்ணம்மா...நேத்தைக்கு நீ கூத்தில திரொளபதியா ஆக்ட் பண்ணே..நான் இப்ப துச்சாதன் வேலை பண்ணப் போறேன்!

மேட்லி தொரே...நீங்க தப்பு செய்யப் பாக்குறீங்க...கிட்ட வராதீங்க....

அப்ப நீயா வந்திடு...வர மாட்டியா? நான் உன்னை விடமாட்டேன் கண்ணம்மா

டேய் மேட்லி...புடவையை இழுக்காதே...ஸ்ரீகிருஷ்ணா...என்னைக் காப்பாத்து

கண்ணம்மா...கூத்திலதான் சாமி காப்பாத்தும்...இந்த வெள்ளக்கார துச்சாதன் கிட்ட கிருஷ்ணன் பாச்சா பலிக்காது!

டேய் முட்டாள் தொரெ...சாமி எனக்கு வழி காம்பிச்சிடிச்சுடா...இஙக பாரு...கதிர் அரிவாள்...என் கழுத்தை அறுத்து கிட்டு செத்துப் போயிடுவேன்.....ஓடிப் போயிடு!

சிறு இடைவெளியில் மறுபடி குரல்கள்....

பத்து எண்றதுக்குள்ள எல்லொரும் கலைஞ்சு போயிடுஙக....ஒன், டூ, த்ரீ...

போக மாட்டேன்....எல்லோரும் நில்லுங்க...போகாதீங்க

டுமீல் சப்தம்...ஐய்யோ என்று பெண்ணின் கதறல்...தொடர்ந்து நிசப்தம்.
மறுபடி ராமுவை உலுப்பி எழுப்பி உட்கார வைத்தார் சாரி-

ஏண்டா ராமு...மஹாபாரததில வெள்ளக்காரன், துப்பாக்கி சப்தமெல்லாம் வருதே...எப்படி டா?”

தூக்கம் கலைந்த எரிச்சலில் மனதுக்குள் சாரியைச் சபித்த ராமுவின் மண்டையில் மின்னலாக ஒரு யோசனை இறங்க, அவன் கூவினான் -
மாமா ...நல்ல ஐடியா...எங்க படத்தில பாடல் காட்சிக்கு லண்டன் போகணும்னு புரொட்யூசர் சொல்லிக் கிட்டிருந்தார்.  அங்க போயி வெள்ளைக்காரங்களை வைச்சு மஹாபாரதப் கூத்துப் பாட்டை ஷூட் பண்ணா என்ன?”

தனக்குப் பதிலளிக்காததால் எரிச்சல் பட்ட சாரி கடுகடுத்தார் -

பாத்து செய்....இல்லைன்னா தியேட்டர்ல கல்லைப் போடுவாங்க...புரொட்யூசர் தலையில துண்டைப் போட்டுப் பார்!

விடிந்ததும் சரி செய்யப் பட்டுக் கிளம்பிய வேன், சில நிமிடங்களில் ஜெயம் குடியிருப்புப் பகுதியைக் கடந்து சென்னை நோக்கிச் சென்றது.

(குறிப்பு: வாசகர்களே...மகரிஷி நாரதர் உஙகள் commentsக்காகக் காத்திருக்கிறார்!)

...தொடரும்

No comments:

Post a Comment