Friday, June 15, 2012

மூன்றாம் புறம் - பகுதி 13


13. மந்திரமூர்த்தியின் கடைசி ஆட்டம்
கையிலிருந்த பெட்டியை சோபாவில் கோபத்துடன் தூக்கியெறிந்த பாஸ்கர், எதிரே சங்கடத்துடன் நெளிந்த தந்தை மந்திரமூர்த்தியை நோக்கிப் படபடவென்று பொரிந்தான் -

“’உடனே கிளம்பி வான்னு தகவல் கொடுத்தே...சியாமளாவுக்கும் எனக்கும் நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செஞ்சு முடிச்சிருப்பேன்னு ஆசையா வந்தேன்..ஆனா நீ உன்னோட சின்ன வீட்டுப் பிரச்சினையைப் பெரிசாக்கி நிக்கிறியே...சே

பெத்தவனாக இல்லாமலிருந்தால், விட்டது சனின்னு பாஸ்கர் ஒதுங்கிப் போயிருப்பான்.  அவனே இப்போது உடைந்து போயிருக்கிறான்.  நில விஷயத்தில் தமிழ்நாடு அவனது மூக்கை உடைத்து விட்டது.  காஞ்சனா தானும் ஏமாந்து இவனையும் கைகழுவிவிட்டுப் போய்விட்டாள்! இலவச இணைப்பாக, பெரியதாக இன்னொரு கம்பெனி வரப் போகிறது என்கிற எண்ணத்தில் மண் விழுந்தாயிற்று.  வாசுவோ, கூத்து ஏற்பாடுகளில் ஜெயம் நகர்வாசிகளின் பேராதரவுடன் பிரபலமடைவதன் மூலம், போட்டியில் தன்னைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறுவதால், சியாமளா தனக்கு எட்டாக் கனியாகி விடுவாளோ என்கிற பயம் வேறு பாஸ்கருக்கு.
தன்னுடைய நிலமை இப்படித் தப்புத் தாளங்கள் போட, அப்பனோ சின்ன வீட்டுக்காக வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாமல், வீட்டின் பேரில் ஜப்தி நோட்டீசை கையில் வைத்துக் கொண்டு சோக ராகம் பாடுகிறானே?
சாரிடா பாஸ்கர்...கொஞ்சம் சறுக்கிடிச்சு..நீதான் உடனடியா அம்பது லட்சம் புரட்டி நம்ம மானத்தைக் காப்பாத்தணும்.

அப்பனை வெட்டிக் கூறு போட்டாலென்னவென்று உள்ளுக்குள் கூடங்குளம் அணு உலை மாதிரி கொதித்தான் பாஸ்கர்.  செத்துப்போன அம்மாவுக்குச் சக்களத்தியாய் வந்தவள், இந்தக் கிழவனிடம் சுருட்டும் வரை லாபமென்று கடன் சுமையை ஏற்றிவிட்டாளே!

அம்பது லட்சத்துக்கு நான் எங்க போவேன்சாமந்தி கம்பெனியில நயா பைசா எடுக்க முடியாது...வாசு கண்குத்திப் பாம்பு கணக்கா கணக்குப் பாக்கறான்

தமிழ்நாட்டு வீட்டு ப்ராஜக்டில கோடி கோடியா அள்ளப் போறேன்னு சொன்னியேடா பாஸ்கர்?”

எல்லாம் பணால் ஆகி, முள்ளு மேல இருக்கிறமாதிரி நான் தவிக்கிறேம்பா...அந்த கோகுல் பய, பூமியில பொதஞ்சிருக்கிற ந்கைங்களை திருட்டுத்தனமா எடுக்கப் பாத்து போலீஸில மாட்டிக் கிட்டான். உடனே இந்த சியாமளா என்ன செஞ்சிருக்கணும்கோகுலுக்கும் தமிழ்நாட்டுக்கும் உடனடியா குட்பை சொல்லிட்டு, பெங்களூர் திரும்பி வந்து, எனக்கு கழுத்தை நீட்டி, கர்நாடகா பிஸினசை ஒழுங்கா கவனிக்கலாமில்லியா?”

மந்திரமூர்த்தியின் கிரிமினல் மூளை சட்டென விழித்துக் கொண்டது.  தனது கடன் பிரச்சினைத் தீர்வுக்கும், மகன் - சியாமளா திருமண உறுதிக்கும் வியூகமொன்று அவரது மனதில் உருவானது!

*                          *                        *                       *

தன்னெதிரே மந்திரமூர்த்தி வைத்த சாமந்தி கம்பெனியின் வரவு செலவுக் கணைக்கைப் பார்த்து அதிர்ந்து போனார் மகாலிங்கம்.  கம்பெனியின் ஆடிட்டர் தேவா கையெழுத்திட்டிருந்த அந்த விவரங்கள் கடந்த மூன்று மாதங்களில் கம்பெனியின் லாபம் கோடிக்கணக்கில் சரிந்திருந்ததைச் சுட்டிக் காட்டின!

மகாலிஙகம்...நானும் நீயும் சாமந்தி கம்பெனியை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தோம்? இப்படி சீரழியறதுக்கா, கம்பெனி பொறுப்பை என் பையனுக்கும் உன் பொண்ணுக்கும் கொடுத்தோம்?”

இது எப்படி நடந்திருக்க முடியுமென்று சந்தேகத்துடன் மகாலிஙகம் விவரஙகளை உன்னிப்பாகப் பார்க்க ஆரம்பிக்க, மந்திரமூர்த்தி அவசரமாகத் தொடர்ந்தார் -

ஆரம்ப காலத்திலிருந்தே நம்ம நண்பரா இருந்துகிட்டு நம்ம கம்பெனி வளர்ச்சியில ரொம்ப அக்கறை கொண்ட ஆடிட்டர் தேவா பயந்து போய் இதை அனுப்பியிருக்கிறாரு.  நாம, கம்பெனி விஷயத்தில இப்ப தலையிடறதில்லேன்னு தெரிஞ்சும் அவர் நமக்கு இதை அனுப்பியிருக்காருன்னா, ந்ம்ம பசங்க இனியும் ஏமாறாம இருக்க பெரியவங்க நாம தலையிடறது அவசியம்னு தானே அர்த்தம்?”

ஆடிட்டர் தேவா சரியான சந்தர்ப்பவாதி.  பணத்துக்காக யார் பக்கம் வேண்டுமானாலும் சாய்வார்.  மந்திரமூர்த்தியிடமிருந்து பெரும் தொகை கிடைக்கும் என்கிற உத்திரவாதத்துடன், தேவா பொய்யான தகவல்களை அனுப்பியிருப்பது மகாலிங்கத்துக்குத் தெரிய நியாயமில்லை!

மந்திரமூர்த்தி...ந்ம்ம குழைந்தைங்க ஏன் இதைக் கவனிக்காம விட்டுட்டாங்க?”

மந்திரமூர்த்தி இந்தக் கேள்வியைத் தானே எதிர்பார்த்தார். பதில் உடனே தந்தார் -

மகா...என் பையன் பாஸ்கரும் உன் பொண்ணு சியாமளாவும் கட்டிடங்களை எப்படிக் கட்டறதுன்னு தீர்மானிக்கற பொறுப்பில இருக்கிறவங்க... வரவு செலவு நிர்வாகம் உன்னோட அக்கா மகன் வாசுகிட்ட இருக்கு.  வாசு புத்திசாலிதான்..ஆனா, விளையாட்டுப் பிள்ளையா இருக்கானேதமிழ்நாட்டில பிஸினஸைப் பிடிக்க பாஸ்கரும், சியாமளாவும் சென்னைக்கு போனது சரி.  வாசு ஜெனரல் மேனேஜரா லட்சணமா பெங்களூர்ல தங்கி நிர்வாகத்தைக் கவனிக்காம, அவனும் சென்னைக்குப் போனதோட, அங்க கூத்துப் போடற நெனைப்பாவே இருக்கான்.  இப்ப அதோட விளைவு பாரு...மூணே மாசத்தில கம்பெனி நிர்வாகம் மோசமாயிடிச்சு”            

மகாலிங்கம் யோசனையிலாழ்ந்தார்.  தன்னுடைய பேச்சு அவருக்கு மூளைச் சலவை செய்ய ஆரம்பித்ததைப் புரிந்துகொண்ட மந்திரமூர்த்தி பேச்சைத் தொடர்ந்தார்.

இத பாருப்பா...உன்னை வளர்த்த அக்காவுக்கு நன்றிக் கடனா அவ பிள்ளை வாசுவைப் படிக்க வச்சு, நம்ம கம்பெனியில ஜெனெரல் மேனேஜரா வேலை போட்டுக் கொடுத்தது ரொம்ப சரி.  ஆனா, கம்பெனிக்குப் பிரச்சினைன்னா, உறவெல்லாம் ரெண்டாம் பட்சம்.  வாசு செய்யிற தவறால, கம்பெனி மேல மேல மோசமாறதைப் பாத்துக்கிட்டிருக்க முடியுமாஇந்த லட்சணத்தில, வாசு மாப்பிள்ளையா வரணும்னு உன் பொண்டாட்டியும், உன் அக்காவும் வரிஞ்சு கட்டி நிக்கிறது வேடிக்கையா இருக்குடா!

மகாலிங்கத்தின் கண்கள் கோபத்தில் சிவந்தன -
இப்பவே போன் போட்டு, அந்த வாசுவை நல்லா திட்டப்போறேன்

டேய்...டேய்...அவசரப் படாத மகா...இதை வேற வழியில டீல் பண்ணனும்...முறைப் பொண்ணை கம்பெனி சொத்தோட அடைய, வாசு உறவு செண்டிமெண்டுங்கற அஸ்திரத்தைப் பிரயோகிக்கத் தயாரா வச்சிருக்கான்.  அதை அவன் பயன்படுத்த வழியில்லாம செஞ்சிட்டா என்ன?”

எப்படிடா?”

நாம கம்பெனி நடத்தினப்ப, நீ அறுபது பங்கு, நான் நாப்பது பங்கு வச்சிருந்தோம்.  நம்ம வாரிசுங்க கிட்ட கம்பெனியை ஒப்படைச்சப்ப, நீ சியாமளா பேரில முப்பது பங்கும், நான் பாஸ்கர் பேரில இருபதும் மாத்திக் கொடுத்தோம்.  நான் என்ன சொல்றேன்னா, இப்ப நீ வச்சிருக்க மீதி முப்பது பங்கை உன் மாப்பிள்ளையா வரப்போற பாஸ்கர் பேரில உடனடியா மாத்திடு.  அப்படிச் செஞ்சா, கம்பெனியும் கட்டுக்கோப்பா இருக்கும். வாசுவோட பேராசையும் நிறைவேறாது.  ஆனா, மகாலிங்கம்... இதைக் காதும் காதும் வச்சாப்போல ரகசியமா, உடனடியா செய்யணும்.  உன் மக வாழ்க்கை ந்ல்லபடியா அமையணும்னுதாண்டா நான் இந்த யோசனையைச் சொல்றேன்

மந்திரமூர்த்தியின் பசப்பு வார்த்தைகள் மகாலிங்கத்தைக் கட்டிப் போட்டன!
சரியான் யோசனைதாண்டா... உடனடியா அதுக்கு வழி செய்

இது போதுமே மந்திரமூர்த்திக்கும் பாஸ்கருக்கும்!  சில வருஷங்களுக்கு முன்பே பாஸ்கரின் பெயரில் மகாலிங்கத்தின் மீதி முப்பது பங்கை மாற்றியது போல, பொய் ஆவணங்களை உருவாக்கி, ஒரு வாரத்துக்குள் அதற்கு அரசாங்க அனுமதி பெற மந்திரமூர்த்தி ஒரு அவசரத் திட்டம் போட்டார்.  தங்கள் ஆதிக்கத்தில் வரும் எல்லா கம்பெனி பங்குகளையும் அடமானம் வைத்து, அதில் வரப் போகும் பணத்தில் ஜப்திக்கு வந்த தன் வீட்டை மீட்பதுதான் அவரது முதல் வேலை!

ஆனால், அடுத்த ஒரு வாரத்துக்குள் நடந்த நிகழ்ச்சிகள், மந்திரமூர்த்தியின் 
பேராசைத் திட்டத்தைப் பேரிடியாய்த் தாக்கின!

முன்னாள் அமைச்சர் செல்லமுத்துவின் பல்வேறு ஊழல்களை புதிய அரசாங்கம் வேகமாகக் கிளற ஆரம்பிக்க, அதன் ஒரு பகுதியாக பாஸ்கர், காஞ்சனா சம்பந்தப்பட்ட நில மோசடி விவரங்களை ஒரு புலனாய்வுப் பத்திரிக்கை பத்தி பத்தியாக வெளியிட்டது.  பாஸ்கர், காஞ்சனாவின் நெருக்கமான புகைப்படங்களுடன்அவர்களது கள்ள உறவு எப்படி, எதனால் ஆரம்பித்தது, சாமந்தி கம்பெனிக்கு எதிராக பாஸ்கர், காஞ்சனாவுக்குச் சொந்தமான பட்டேல் கம்பெனியை வளர்க்கத் திட்டம் போட்டு ஏமாந்தது பற்றிய விவரங்களை படித்த சியாமளா, வாசு, சாரி ஆகியோர் அதிர்ச்சி அடந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அரசாங்கம் செல்லமுத்து மீது வழக்குப் பதிவு செய்து, வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான பாஸ்கரைத் தேட ஆரம்பிக்க, அவன் போலீஸிடம் சிக்காமலிருக்க பெங்களூரிலிருந்து ஆந்திராவுக்குத் தப்பியோடினான்.

தனது திட்டங்கள் அரோகரா ஆகி, மகனின் லீலைகள் தெரிந்து ஊரே சிரிப்பாய் சிரிக்க, தன்னை நடுத்தெருவில் நிறுத்தப்போகும் வீட்டு ஜப்தி தேதிக்கு முன்னிரவில், அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார் மந்திரமூர்த்தி.

(குறிப்பு: வாசகர்களே.. முகவுரை எழுதிய மகரிஷி நாரதர்சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கதையைப் படித்து பதில் தாருங்களேன்.)

...தொடரும்

Thursday, June 14, 2012

மூன்றாம் புறம் - பகுதி 12

12. இங்கிலாந்தில் கிருஷ்ணர்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் ஒரு வீட்டுத் தோட்டம்.  அழகான கிருஷ்ணர் சிலையைச் சுற்றி, கோபிகைகள், திரெளபதி, துரியோதனன், துச்சாதனன் போன்ற வேடங்களில் ஆங்கிலேயர்களை வைத்து குத்துப் பாட்டு ஸ்டைலில் கூத்து ஒன்றைப் படமெடுத்து  முடித்த பெருமிதத்தில் அங்கு நின்றிருந்தான் சினிமா உதவி இயக்குநர் ராமு.

அவனது நினைவில் நரசிம்மாச்சாரி வந்தார்.  அன்றொரு நாள் வெட்டவெளியில் நல்ல தூக்கத்தில் இருந்த அவனை, சாரி உலுக்கி எழுப்பியிருக்காவிட்டால், இந்த வெள்ளைக்காரக் கூத்துப் பாட்டு ஐடியா அவனுக்கு வந்திருக்குமா என்ன!  சாரிக்கு உடனே நன்றி சொல்லவேண்டும்.  அவரைப் போனில் அழைத்தான்.  சாரி பேசினார் -

என்னடா ராமு... பாட்டு, ஷூட்டிங்க்குன்னு லண்டனுக்குப் பறந்தியே! உருப்படியா முடிச்சியா?”

என்ன அப்படிச் சொல்லிட்டீங்க மாமா...சாரட் வண்டியில போயிண்டு இருந்த ராயல் ஃபேமலியே கும்பலோடு கும்பலா நின்னு ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தாங்கன்னா பாருங்களேன்!

அடேய்...அடேய்.. ஒரு கிறிஸ்டபர் தலையில, அட்டைக் கிரீடம் வைச்சு, ப்ளாஸ்டிக் பைப்பை புல்லாங்குழல்னு கையில குடுத்து இதான் கிருஷ்ணர்னு நீ படம் எடுத்தா, வெள்ளைக்காரங்க மட்டும்தான் வாயப் பொளந்து பார்ப்பாங்க!

அதான் இல்ல மாமா...மத்தது டூப்பாயிருந்தாலும், கிருஷ்ணர்  பல்லவர் காலத்து சிலையாக்கும்!  இந்தியாவிலேந்து இங்கிலாந்து திரும்பி வந்த ஒரு வெள்ளைக்கார ஆபீசர், கூடவே கோயில் விக்கிரஹத்தையும் தூக்கிண்டு வந்து, தன் தோட்டத்தில வைச்சுண்டுட்டார்! ஒரிஜினல் கிருஷ்ணாம்பட்டி சிலை!

கிருஷ்ணாம்பட்டியா!

சாரி ஏன் வடிவேலு மாதிரி கூவினார் என்பதை அவரே போனில் சுருக்கமாக விளக்கியதன் மூலம் புரிந்து கொண்டான் ராமு.  கிருஷ்ணாம்பட்டி பற்றிய பின்னணி விவரங்கள் ராமுவுக்கு, அவனது அடுத்த சினிமாவுக்கான கருவாகக் கிட்டியது!

அது மட்டுமல்ல...கிருஷ்ணர் சிலையை இங்கிலாந்துக்குக் கொண்டுவந்த அதிகாரியின் பின்னணி என்ன? கிருஷ்ணாம்பட்டியில் நடந்த விவரங்கள் அவர் மூலம் அவனுக்குத் தெரிய வருமா? கிருஷ்ணாம்பட்டியில் கோகுலுடைய தாத்தாவுடைய நிலத்தை கண்டறிய அவர் மூலம் வழி பிறக்குமா?  வரும் கிருஷ்ண ஜெயந்திக்குள், இங்கிலாந்திலுள்ள சிலையை கிருஷ்ணாம்பட்டிக்கு எடுத்துச் செல்லமுடியுமா? 

தான் இந்தியா திரும்புவதற்குள் இத்தனை கேள்விகளுக்கும் விடை தேட ஆயத்தமானான் ராமு.

(குறிப்பு: வாசகர்களே... முகவுரை எழுதிய மகரிஷி நாரதர்சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கதையைப் படித்து பதில் தாருங்களேன்)

Image Courtesy: giftshandicraftsindia.com
...தொடரும்

மூன்றாம் புறம் - பகுதி 11


11. ஏமாந்த பாஸ்கர்!


நீதிமன்றத்திலிருந்து காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த சியாமளாவின் காதுகளில் கோகுலின் அந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஒலித்து, அவளது குற்ற உணர்ச்சியைத் தூண்டின.

போதுமடா சாமி...அயோக்கியன் கோகுல் இருக்கும் திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, சுயம்வரம் அறிவித்தது முதல் இன்று வரை நடந்ததை ஒரு கெட்ட கனவாக மறந்துவிட வேண்டும்.  இனி கம்பெனி விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த பாஸ்கரின் முகத்தில் நமட்டுச் சிரிப்பு நர்த்தனமாடியது. இரவோடு இரவாக, போலீஸ்  இன்ஸ்பெக்டர் பரத்தை வரவழைத்து, கோகுல் மற்றும் இதர நான்கு இளைஞர்களையும் காவல் நிலையத்தில் வரவழைத்து வந்து மிரட்டி, வாக்குமூலம் எழுதி வாங்கி, விடிந்ததும் நீதிமன்றத்தில் நிறுத்தி வைத்து, இப்போது அவர்களை விசாரணைக் கைதிகளாகச் சிறையில் அடைத்தாயிற்று!  சமயோசிதமாக, அமைச்சர் துணையுடன், ராபர்ட்டையும், பீட்டரையும் கேரளாவில் ரகசியமாகத் தங்க ஏற்பாடு செய்தாயிற்று.  கோகுலுக்கு இப்போது திருட்டுப் பட்டம் கிடைத்திருப்பதனால், இனி போட்டியாவது, மண்ணாவது!  அதுவுமில்லாமல், பட்டேல் கம்பெனிக்கு நில உரிமையை மாற்றித தர அவர்களிடமிருந்து மிகச் சுலபமாக எழுதி வாங்கி விடலாம்!

சியாமளாவுடன் காரில் உட்கார்ந்திருந்த நரசிம்மாச்சாரிக்கும், வாசுவுக்கும் மன ஓட்டம் வேறு மாதிரி இருந்தது.  கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.

வாசு மவுனத்தைக் கலைத்தான் -

சியாமா - எனக்கும் சாரி மாமாவுக்கும் கோகுல் பேரில இன்னும் நம்பிக்கை இருக்கு

எப்படி வாசு?  ஆரம்பத்திலிருந்தே கோகுல் தாத்தா எனக்கு ஒரு வேலை குடுத்திருக்காரு..ஆனா, அது என்னன்னு கேக்காதீங்கசொல்லிகிட்டிருந்தான்.  புதையல தான் தேட வந்திருக்கேன்னு இப்ப கோர்ட்ல ஒத்துக் கிட்டிருக்கான்

சாரி தயங்கியபடி பேசினார் -

குழந்தே... போலீஸ்காரங்களைப் பத்தி உனக்குத் தெரியும்.  அடிச்சு மெரட்டி அவங்களுக்கு சாதகமா எழுதி வாங்கி, கேசை முடிக்கப் பார்ப்பாங்க.  எதுக்கும் நாம ஒரு தரம் கோகுலை ஸ்டேஷன்ல போய் பாக்கிறது நல்லதில்லையா?”

மாமா..மன்னியுங்க.  அந்தக் கல்லுளிமங்கனை நான் இனிமே பார்க்க விரும்பலே.  நீங்க ரெண்டு பேரும் போய்ப் பார்த்து, அவன் எந்த தப்பும் செய்யாதவன்னு தெரிஞசா, எனக்குச் சந்தோஷம்தான்

சியாமளா சொன்னது சரியே.  காவல் நிலையத்தில் கோகுலைச் சந்தித்தபோது, புதிதாய் எந்த விவரமும் சாரிக்கும் வாசுவுக்கும் கிடைக்கவில்லை.  அதே சமயம், போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத் இறுக்கமான முகத்துடன் சரியான ஒத்துழைப்பு கொடுக்காதது அவர்களுக்கு ஏமாற்றமளித்தது. இயந்திரங்களை இயக்கிய இரு ஆங்கிலேயர்களும் எங்கேயென்ற கேள்விக்கு இன்ஸ்பெக்டர் பதில் தராதது அவர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது.

வாசுவுக்கும், சாரிக்கும் உதவிக் கரம் நீட்டியவர்கள், கூத்துப் பட்டறை இயக்குநர் கரோலினும், ஜெயம் நகர் சங்க நிர்வாகிகளும்.  கைதின் பின்னணியில் ஏதோ சதி நடப்பதாக எல்லோரும் நம்பினர்.  பிரம்மாண்டமான முறையில் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணாம்பட்டி நிலத்தில் மஹாபாரதக் கூத்து நடத்த ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்ட நிலையில், கோகுல் குழுவினருடன் அதை நடத்தியே தீருவது என அவர்கள் முடிவெடுத்தனர்.  கூத்துப் பயிற்சிக்காக, தினமும் சில மணி நேரங்களுக்கு அந்த விசாரணைக் கைதிகளுக்கு அனுமதி தருமாறு அரசாங்கத்துக்கு மனு தர அவர்கள் முடிவெடுத்தனர்.

இப்படியிருக்க, ஆளும் கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டு, சட்டசபையில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், பெரும்பான்மையில்லாததால் ஆட்சி கவிழ்ந்தது!  பிரதான எதிர்க்கட்சி தன் பலத்தை நிரூபித்து, உடனடியாகப் பதவியேற்றது!

அதை ஏற்கெனவே எதிர்பார்த்த மாஜி அமைச்சர் செல்லமுத்து, ஜெர்மன் முதலாளி மற்றும் பட்டேல் கம்பெனியிடம் வாங்கிய கோடிக்கணக்கான பணத்துடன் உடனடியாக வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்!

கைக்கெட்டியது வாய்க்கெட்டாத எரிச்சலுடனும், கோடிக்கணக்கில் பணத்தையிழந்த ஆத்திரத்துடனும் காஞ்சனா தன் கணவருடன் தன் சொந்த ஊரான டெல்லிக்குப் பறந்துவிட்டாள்!

உச்சியிலிருந்து அதல பாதாளத்தில் தள்ளப் பட்டது போல உணர்ந்தான் பாஸ்கர்.  நடுவில் வந்த காஞ்சனா, என்னென்னமோ ஆசைக் கனவுகளை அவனிடம் வளர்த்து விட்டு, இப்போது அம்போவென்று விட்டுச் சென்று விட்டாள்!

இனி, சாமந்தி கம்பெனியையும், சியாமளாவையும் விட்டால் அவனுக்கு வேறு நாதியில்லை!

(குறிப்பு: வாசகர்களே... முகவுரை எழுதிய மகரிஷி நாரதர்சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கதையைப் படித்து பதில் தாருங்களேன்)

...தொடரும்

Tuesday, June 12, 2012

மூன்றாம் புறம் - பகுதி 10


10. மந்திரியை நம்பி.....
தாளிடப்பட்ட தனியறையில் காஞ்சனாவுடன் நெருக்கமாக இருந்தும், பாஸ்கரின் மனம் வேறெங்கோ அலை பாய்ந்தது.


என்னடா பாஸ்கர்...காத்துகிட்டிருக்கேனே

மனதில் சங்கடத்தை வைத்துக் கொண்டு அவனால் காஞ்சனாவின் கொஞ்சல் அழைப்பை ஏற்க இயலவில்லை.  காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை மறுபடி அசை போட்டுப் பார்த்தான் பாஸ்கர்.


திடீரென அன்று காலை, மந்திரி செல்லமுத்துவிடமிருந்து அழைப்பு வர, காஞ்சனாவுடன் அவரைச் சந்தித்தான் பாஸ்கர்.  பாவம் பாஸ்கர்..வியாபார தந்திரத்தைக் கற்றவனுக்கு அரசியல் சூழ்நிலை தெரியவில்லை!

இன்னும் ஒரு வாரத்தில் எதிர்க் கட்சியினர் சட்டசபையில் ந்ம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாகவும், தனது கட்சியில் பெரும்பான்மையினர், எதிர்கட்சிக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு, அதனால் ஆளும் கட்சி கவிழ்வது உறுதியென்றும் செல்லமுத்துவுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது.  பார்த்தார் அமைச்சர்.  அகப்பட்டதை உடனே சுருட்டிக் கொண்டு சிங்கப்பூர் ஓடிவிடத் தீர்மானித்தார்!

ஜமீந்தார் நிலங்களில் வீடு கட்டும் திட்டத்தை பட்டேல் கம்பெனி செயல் படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும்  அரசாங்கக் கடிதத்தை அமைச்சர் தந்தபோது பாஸ்கரும் காஞ்சனாவும் பூரிப்படைந்தனர்.  பத்து கோடி ரூபாயை கமிஷனாக இரண்டு நாட்களில் தனக்குத் தந்துவிட வேண்டும், கிராமத்து இளைஞர்கள் எந்த விதமான உரிமையும் கோராமலிருக்க அவர்களிடம் ஒப்புதல் கடிதம் வாங்கித் தரவேண்டுமென்று நிபந்தனைகளை விதித்தார் செல்லமுத்து.

காஞ்சனாவின் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது.  தன்னுடைய கம்பெனி பேரில் வீடு கட்டும் திட்டத்துக்கு அரசாங்க அனுமதி கிடைத்தாயிற்று,  பாஸ்கர் மூலமாக கிராமத்து இளைஞர்களிடமிருந்து தன்னுடைய கம்பெனிக்காக ஒப்புதல் கடிதங்கள் ஓரிரு நாட்களில் வாங்கி விட்டு, பிறகு அவனைக் கழற்றி விடவேண்டும்! அதற்குள் அவனுடன் இடைவிடாத சுகத்தை அனுபவித்து விடவேண்டும்.

அமைச்சர் வீட்டிலிருந்து காரில் கிளம்பும் போதே, குஷியில் ஒரு பாட்டில் சரக்கை உள்ளே தள்ளி, போதை மயக்கத்துடன் பயணத்தை வழியிலேயே நிறுத்தச் சொல்லி, பாஸ்கரின் மேல் படர்ந்தாள் காஞ்சனா.

மிரண்டு போன பாஸ்கர், பாதுகாப்புக் காரணம் காட்டி தவிர்க்க முயல, அரைகுறை அலங்கோலத்துடன் காஞ்சனா காரை விட்டிறங்கி, சாலையோரக் கடையில் ரப்பர் உறையை சப்தம் போட்டு வாங்க, அந்தக் கண்ணறாவிக் காட்சியை கோகுல் உள்பட பல பேர் பார்க்க, சங்கடத்தில் நெளிந்தான் பாஸ்கர்!

ஏற்கெனவே சியாமளாவுடன் கைகோர்த்துக் கொண்டு கோகுலுக்குச் சிறப்பான முறையில்  கூத்தில் பயிற்சியளித்து வாசு பிரபலமாகி விட்டிருந்தான்.  இப்போது தன்னை காஞ்சனாவுடன் மிக மோசமான கோலத்தில் பார்த்ததை கோகுல் சியாமளாவிடம் சொன்னால், அவள் தன்னிடமிருந்து விலகி விட ஏதுவாகுமே?  கோகுலின் வாயை மூட என்ன செய்யலாம்? இப்படிப்பட்ட மன நிலையில், காஞசனாவின் அருகில் பாஸ்கர் மரக்கட்டை மாதிரி படுத்திருந்ததில் ஆச்சரியம் இல்லை!

விரகதாபம் தந்த எரிச்சலில், விருட்டென்று எழுந்து, ஜன்னல் பக்கம் போய் நின்றாள் காஞ்சனா.  கண்ணெதிரே மைதானத்தில் தெரிந்த காட்சி அவளுக்கு வியப்பூட்ட, பாஸ்கரை அழைத்தாள் -

பாஸ்கர்..இங்க வாயேன்..இந்த ராத்திரியில பக்கத்து வெட்டவெளியில என்ன செய்யிறாங்க!

ராட்சத இயந்திரங்களை ராபர்ட், பீட்டர் ஆகியோர் இயக்கி அங்கங்கே பள்ளங்கள் தோண்ட, கோகுல் மற்றும் இதர கிராம இளைஞர்கள் மண்ணுக்குள் எதையோ தேடுவது, பாஸ்கருக்குத் தொலைநோக்குக் கருவி மூலம் தெளிவாகத் தெரிந்தது!

கூட்டாகச் சேர்ந்து அவர்கள் எதையோ ரகசியமாகத் தேடுகிறார்கள்..நிச்சயம்  ஏதோ வில்லங்கமான விவகாரம் தான்.  கிராமத்துப் பசங்களை, குறிப்பாக கோகுலைத் தன் வழிக்குக் கொண்டுவர ஒரு வழி பிறந்து விட்டதனால், பாஸ்கருக்கு மனதில் உற்சாகம் பீறிட்டது.  மன்மத ராசாவாக மாறி, காஞ்சனாவை அலேக்காகத் தூக்கினான்!

(குறிப்பு: வாசகர்களே... முகவுரை எழுதிய மகரிஷி நாரதர்சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கதையைப் படித்து பதில் தாருங்களேன்)

...தொடரும்