Thursday, June 14, 2012

மூன்றாம் புறம் - பகுதி 12

12. இங்கிலாந்தில் கிருஷ்ணர்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் ஒரு வீட்டுத் தோட்டம்.  அழகான கிருஷ்ணர் சிலையைச் சுற்றி, கோபிகைகள், திரெளபதி, துரியோதனன், துச்சாதனன் போன்ற வேடங்களில் ஆங்கிலேயர்களை வைத்து குத்துப் பாட்டு ஸ்டைலில் கூத்து ஒன்றைப் படமெடுத்து  முடித்த பெருமிதத்தில் அங்கு நின்றிருந்தான் சினிமா உதவி இயக்குநர் ராமு.

அவனது நினைவில் நரசிம்மாச்சாரி வந்தார்.  அன்றொரு நாள் வெட்டவெளியில் நல்ல தூக்கத்தில் இருந்த அவனை, சாரி உலுக்கி எழுப்பியிருக்காவிட்டால், இந்த வெள்ளைக்காரக் கூத்துப் பாட்டு ஐடியா அவனுக்கு வந்திருக்குமா என்ன!  சாரிக்கு உடனே நன்றி சொல்லவேண்டும்.  அவரைப் போனில் அழைத்தான்.  சாரி பேசினார் -

என்னடா ராமு... பாட்டு, ஷூட்டிங்க்குன்னு லண்டனுக்குப் பறந்தியே! உருப்படியா முடிச்சியா?”

என்ன அப்படிச் சொல்லிட்டீங்க மாமா...சாரட் வண்டியில போயிண்டு இருந்த ராயல் ஃபேமலியே கும்பலோடு கும்பலா நின்னு ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தாங்கன்னா பாருங்களேன்!

அடேய்...அடேய்.. ஒரு கிறிஸ்டபர் தலையில, அட்டைக் கிரீடம் வைச்சு, ப்ளாஸ்டிக் பைப்பை புல்லாங்குழல்னு கையில குடுத்து இதான் கிருஷ்ணர்னு நீ படம் எடுத்தா, வெள்ளைக்காரங்க மட்டும்தான் வாயப் பொளந்து பார்ப்பாங்க!

அதான் இல்ல மாமா...மத்தது டூப்பாயிருந்தாலும், கிருஷ்ணர்  பல்லவர் காலத்து சிலையாக்கும்!  இந்தியாவிலேந்து இங்கிலாந்து திரும்பி வந்த ஒரு வெள்ளைக்கார ஆபீசர், கூடவே கோயில் விக்கிரஹத்தையும் தூக்கிண்டு வந்து, தன் தோட்டத்தில வைச்சுண்டுட்டார்! ஒரிஜினல் கிருஷ்ணாம்பட்டி சிலை!

கிருஷ்ணாம்பட்டியா!

சாரி ஏன் வடிவேலு மாதிரி கூவினார் என்பதை அவரே போனில் சுருக்கமாக விளக்கியதன் மூலம் புரிந்து கொண்டான் ராமு.  கிருஷ்ணாம்பட்டி பற்றிய பின்னணி விவரங்கள் ராமுவுக்கு, அவனது அடுத்த சினிமாவுக்கான கருவாகக் கிட்டியது!

அது மட்டுமல்ல...கிருஷ்ணர் சிலையை இங்கிலாந்துக்குக் கொண்டுவந்த அதிகாரியின் பின்னணி என்ன? கிருஷ்ணாம்பட்டியில் நடந்த விவரங்கள் அவர் மூலம் அவனுக்குத் தெரிய வருமா? கிருஷ்ணாம்பட்டியில் கோகுலுடைய தாத்தாவுடைய நிலத்தை கண்டறிய அவர் மூலம் வழி பிறக்குமா?  வரும் கிருஷ்ண ஜெயந்திக்குள், இங்கிலாந்திலுள்ள சிலையை கிருஷ்ணாம்பட்டிக்கு எடுத்துச் செல்லமுடியுமா? 

தான் இந்தியா திரும்புவதற்குள் இத்தனை கேள்விகளுக்கும் விடை தேட ஆயத்தமானான் ராமு.

(குறிப்பு: வாசகர்களே... முகவுரை எழுதிய மகரிஷி நாரதர்சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கதையைப் படித்து பதில் தாருங்களேன்)

Image Courtesy: giftshandicraftsindia.com
...தொடரும்

No comments:

Post a Comment