13. மந்திரமூர்த்தியின் கடைசி ஆட்டம்
கையிலிருந்த
பெட்டியை சோபாவில் கோபத்துடன் தூக்கியெறிந்த பாஸ்கர், எதிரே சங்கடத்துடன் நெளிந்த தந்தை மந்திரமூர்த்தியை நோக்கிப் படபடவென்று
பொரிந்தான் -
“’உடனே கிளம்பி வா’ன்னு தகவல் கொடுத்தே...சியாமளாவுக்கும் எனக்கும் நிச்சயதார்த்தத்துக்கு
ஏற்பாடு செஞ்சு முடிச்சிருப்பேன்னு ஆசையா வந்தேன்..ஆனா நீ உன்னோட சின்ன வீட்டுப்
பிரச்சினையைப் பெரிசாக்கி நிக்கிறியே...சே”
பெத்தவனாக
இல்லாமலிருந்தால், விட்டது சனின்னு
பாஸ்கர் ஒதுங்கிப் போயிருப்பான். அவனே
இப்போது உடைந்து போயிருக்கிறான். நில
விஷயத்தில் தமிழ்நாடு அவனது மூக்கை உடைத்து விட்டது. காஞ்சனா தானும் ஏமாந்து இவனையும்
கைகழுவிவிட்டுப் போய்விட்டாள்! இலவச இணைப்பாக, பெரியதாக
இன்னொரு கம்பெனி வரப் போகிறது என்கிற எண்ணத்தில் மண் விழுந்தாயிற்று. வாசுவோ, கூத்து
ஏற்பாடுகளில் ஜெயம் நகர்வாசிகளின் பேராதரவுடன் பிரபலமடைவதன் மூலம், போட்டியில் தன்னைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறுவதால், சியாமளா தனக்கு எட்டாக் கனியாகி விடுவாளோ என்கிற பயம் வேறு பாஸ்கருக்கு.
தன்னுடைய நிலமை
இப்படித் தப்புத் தாளங்கள் போட, அப்பனோ சின்ன
வீட்டுக்காக வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாமல், வீட்டின் பேரில் ஜப்தி நோட்டீசை கையில் வைத்துக் கொண்டு சோக ராகம் பாடுகிறானே?
“சாரிடா
பாஸ்கர்...கொஞ்சம் சறுக்கிடிச்சு..நீதான் உடனடியா அம்பது லட்சம் புரட்டி நம்ம
மானத்தைக் காப்பாத்தணும்.”
அப்பனை வெட்டிக்
கூறு போட்டாலென்னவென்று உள்ளுக்குள் கூடங்குளம் அணு உலை மாதிரி கொதித்தான்
பாஸ்கர். செத்துப்போன அம்மாவுக்குச்
சக்களத்தியாய் வந்தவள், இந்தக் கிழவனிடம்
சுருட்டும் வரை லாபமென்று கடன் சுமையை ஏற்றிவிட்டாளே!
“அம்பது லட்சத்துக்கு
நான் எங்க போவேன்? சாமந்தி கம்பெனியில நயா பைசா எடுக்க முடியாது...வாசு கண்குத்திப் பாம்பு
கணக்கா கணக்குப் பாக்கறான்”
“தமிழ்நாட்டு
வீட்டு ப்ராஜக்டில கோடி கோடியா அள்ளப் போறேன்னு சொன்னியேடா பாஸ்கர்?”
“எல்லாம் பணால்
ஆகி, முள்ளு மேல இருக்கிறமாதிரி நான் தவிக்கிறேம்பா...அந்த
கோகுல் பய, பூமியில பொதஞ்சிருக்கிற ந்கைங்களை திருட்டுத்தனமா
எடுக்கப் பாத்து போலீஸில மாட்டிக் கிட்டான். உடனே இந்த சியாமளா என்ன
செஞ்சிருக்கணும்? கோகுலுக்கும் தமிழ்நாட்டுக்கும் உடனடியா குட்பை சொல்லிட்டு, பெங்களூர் திரும்பி வந்து, எனக்கு கழுத்தை நீட்டி, கர்நாடகா பிஸினசை ஒழுங்கா கவனிக்கலாமில்லியா?”
மந்திரமூர்த்தியின்
கிரிமினல் மூளை சட்டென விழித்துக் கொண்டது.
தனது கடன் பிரச்சினைத் தீர்வுக்கும், மகன் - சியாமளா
திருமண உறுதிக்கும் வியூகமொன்று அவரது மனதில் உருவானது!
* * * *
தன்னெதிரே
மந்திரமூர்த்தி வைத்த சாமந்தி கம்பெனியின் வரவு செலவுக் கணைக்கைப் பார்த்து
அதிர்ந்து போனார் மகாலிங்கம். கம்பெனியின்
ஆடிட்டர் தேவா கையெழுத்திட்டிருந்த அந்த விவரங்கள் கடந்த மூன்று மாதங்களில் கம்பெனியின்
லாபம் கோடிக்கணக்கில் சரிந்திருந்ததைச் சுட்டிக் காட்டின!
“மகாலிஙகம்...நானும்
நீயும் சாமந்தி கம்பெனியை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தோம்? இப்படி சீரழியறதுக்கா, கம்பெனி பொறுப்பை என்
பையனுக்கும் உன் பொண்ணுக்கும் கொடுத்தோம்?”
இது எப்படி
நடந்திருக்க முடியுமென்று சந்தேகத்துடன் மகாலிஙகம் விவரஙகளை உன்னிப்பாகப் பார்க்க
ஆரம்பிக்க, மந்திரமூர்த்தி அவசரமாகத் தொடர்ந்தார் -
“ஆரம்ப
காலத்திலிருந்தே நம்ம நண்பரா இருந்துகிட்டு நம்ம கம்பெனி வளர்ச்சியில ரொம்ப அக்கறை
கொண்ட ஆடிட்டர் தேவா பயந்து போய் இதை அனுப்பியிருக்கிறாரு. நாம, கம்பெனி
விஷயத்தில இப்ப தலையிடறதில்லேன்னு தெரிஞ்சும் அவர் நமக்கு இதை
அனுப்பியிருக்காருன்னா, ந்ம்ம பசங்க இனியும்
ஏமாறாம இருக்க பெரியவங்க நாம தலையிடறது அவசியம்னு தானே அர்த்தம்?”
ஆடிட்டர் தேவா
சரியான சந்தர்ப்பவாதி. பணத்துக்காக யார்
பக்கம் வேண்டுமானாலும் சாய்வார்.
மந்திரமூர்த்தியிடமிருந்து பெரும் தொகை கிடைக்கும் என்கிற உத்திரவாதத்துடன், தேவா பொய்யான தகவல்களை அனுப்பியிருப்பது மகாலிங்கத்துக்குத் தெரிய
நியாயமில்லை!
“மந்திரமூர்த்தி...ந்ம்ம
குழைந்தைங்க ஏன் இதைக் கவனிக்காம விட்டுட்டாங்க?”
மந்திரமூர்த்தி
இந்தக் கேள்வியைத் தானே எதிர்பார்த்தார். பதில் உடனே தந்தார் -
“மகா...என் பையன்
பாஸ்கரும் உன் பொண்ணு சியாமளாவும் கட்டிடங்களை எப்படிக் கட்டறதுன்னு தீர்மானிக்கற
பொறுப்பில இருக்கிறவங்க... வரவு செலவு நிர்வாகம் உன்னோட அக்கா மகன் வாசுகிட்ட
இருக்கு. வாசு புத்திசாலிதான்..ஆனா, விளையாட்டுப் பிள்ளையா இருக்கானே?
தமிழ்நாட்டில பிஸினஸைப் பிடிக்க
பாஸ்கரும், சியாமளாவும் சென்னைக்கு போனது சரி. வாசு ஜெனரல் மேனேஜரா லட்சணமா பெங்களூர்ல தங்கி
நிர்வாகத்தைக் கவனிக்காம, அவனும் சென்னைக்குப்
போனதோட, அங்க கூத்துப் போடற நெனைப்பாவே இருக்கான். இப்ப அதோட விளைவு பாரு...மூணே மாசத்தில கம்பெனி
நிர்வாகம் மோசமாயிடிச்சு”
மகாலிங்கம்
யோசனையிலாழ்ந்தார். தன்னுடைய பேச்சு
அவருக்கு மூளைச் சலவை செய்ய ஆரம்பித்ததைப் புரிந்துகொண்ட மந்திரமூர்த்தி பேச்சைத்
தொடர்ந்தார்.
“இத பாருப்பா...உன்னை வளர்த்த அக்காவுக்கு
நன்றிக் கடனா அவ பிள்ளை வாசுவைப் படிக்க வச்சு, நம்ம கம்பெனியில ஜெனெரல் மேனேஜரா
வேலை போட்டுக் கொடுத்தது ரொம்ப சரி. ஆனா, கம்பெனிக்குப் பிரச்சினைன்னா, உறவெல்லாம் ரெண்டாம் பட்சம். வாசு செய்யிற தவறால, கம்பெனி மேல மேல மோசமாறதைப்
பாத்துக்கிட்டிருக்க முடியுமா? இந்த லட்சணத்தில, வாசு மாப்பிள்ளையா வரணும்னு உன் பொண்டாட்டியும், உன் அக்காவும் வரிஞ்சு
கட்டி நிக்கிறது வேடிக்கையா இருக்குடா!”
மகாலிங்கத்தின்
கண்கள் கோபத்தில் சிவந்தன -
“இப்பவே போன் போட்டு, அந்த வாசுவை நல்லா திட்டப்போறேன்”
“டேய்...டேய்...அவசரப் படாத மகா...இதை
வேற வழியில டீல் பண்ணனும்...முறைப் பொண்ணை கம்பெனி சொத்தோட அடைய, வாசு உறவு செண்டிமெண்டுங்கற அஸ்திரத்தைப் பிரயோகிக்கத் தயாரா
வச்சிருக்கான். அதை அவன் பயன்படுத்த
வழியில்லாம செஞ்சிட்டா என்ன?”
“எப்படிடா?”
“நாம கம்பெனி நடத்தினப்ப, நீ அறுபது பங்கு, நான் நாப்பது பங்கு வச்சிருந்தோம். நம்ம
வாரிசுங்க கிட்ட கம்பெனியை ஒப்படைச்சப்ப, நீ சியாமளா பேரில முப்பது பங்கும், நான் பாஸ்கர் பேரில இருபதும் மாத்திக் கொடுத்தோம். நான் என்ன சொல்றேன்னா, இப்ப நீ வச்சிருக்க மீதி முப்பது பங்கை உன் மாப்பிள்ளையா வரப்போற பாஸ்கர்
பேரில உடனடியா மாத்திடு. அப்படிச் செஞ்சா, கம்பெனியும் கட்டுக்கோப்பா இருக்கும். வாசுவோட பேராசையும் நிறைவேறாது. ஆனா, மகாலிங்கம்... இதைக் காதும் காதும்
வச்சாப்போல ரகசியமா, உடனடியா செய்யணும். உன் மக வாழ்க்கை
ந்ல்லபடியா அமையணும்னுதாண்டா நான் இந்த யோசனையைச் சொல்றேன்”
மந்திரமூர்த்தியின்
பசப்பு வார்த்தைகள் மகாலிங்கத்தைக் கட்டிப் போட்டன!
“சரியான் யோசனைதாண்டா... உடனடியா
அதுக்கு வழி செய்”
“இது போதுமே மந்திரமூர்த்திக்கும்
பாஸ்கருக்கும்! சில வருஷங்களுக்கு முன்பே
பாஸ்கரின் பெயரில் மகாலிங்கத்தின் மீதி முப்பது பங்கை மாற்றியது போல, பொய் ஆவணங்களை உருவாக்கி, ஒரு வாரத்துக்குள் அதற்கு அரசாங்க அனுமதி
பெற மந்திரமூர்த்தி ஒரு அவசரத் திட்டம் போட்டார்.
தங்கள் ஆதிக்கத்தில் வரும் எல்லா கம்பெனி பங்குகளையும் அடமானம் வைத்து, அதில் வரப் போகும் பணத்தில் ஜப்திக்கு வந்த தன் வீட்டை மீட்பதுதான் அவரது
முதல் வேலை!
ஆனால், அடுத்த ஒரு வாரத்துக்குள் நடந்த நிகழ்ச்சிகள், மந்திரமூர்த்தியின்
பேராசைத் திட்டத்தைப் பேரிடியாய்த் தாக்கின!
முன்னாள்
அமைச்சர் செல்லமுத்துவின் பல்வேறு ஊழல்களை புதிய அரசாங்கம் வேகமாகக் கிளற
ஆரம்பிக்க, அதன் ஒரு பகுதியாக பாஸ்கர், காஞ்சனா சம்பந்தப்பட்ட நில மோசடி
விவரங்களை ஒரு புலனாய்வுப் பத்திரிக்கை பத்தி பத்தியாக வெளியிட்டது. பாஸ்கர், காஞ்சனாவின் நெருக்கமான
புகைப்படங்களுடன், அவர்களது கள்ள உறவு
எப்படி, எதனால் ஆரம்பித்தது, சாமந்தி கம்பெனிக்கு எதிராக பாஸ்கர், காஞ்சனாவுக்குச் சொந்தமான பட்டேல்
கம்பெனியை வளர்க்கத் திட்டம் போட்டு ஏமாந்தது பற்றிய விவரங்களை படித்த சியாமளா, வாசு, சாரி ஆகியோர் அதிர்ச்சி அடந்தனர்.
அதன்
தொடர்ச்சியாக, அரசாங்கம் செல்லமுத்து மீது வழக்குப் பதிவு செய்து, வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான பாஸ்கரைத் தேட ஆரம்பிக்க, அவன் போலீஸிடம் சிக்காமலிருக்க பெங்களூரிலிருந்து ஆந்திராவுக்குத்
தப்பியோடினான்.
தனது திட்டங்கள்
அரோகரா ஆகி, மகனின் லீலைகள் தெரிந்து ஊரே சிரிப்பாய் சிரிக்க, தன்னை நடுத்தெருவில் நிறுத்தப்போகும் வீட்டு ஜப்தி தேதிக்கு முன்னிரவில், அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார் மந்திரமூர்த்தி.
(குறிப்பு: வாசகர்களே.. முகவுரை எழுதிய ’மகரிஷி நாரதர்’ சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கதையைப் படித்து பதில் தாருங்களேன்.)
...தொடரும்
No comments:
Post a Comment