Thursday, June 14, 2012

மூன்றாம் புறம் - பகுதி 11


11. ஏமாந்த பாஸ்கர்!


நீதிமன்றத்திலிருந்து காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த சியாமளாவின் காதுகளில் கோகுலின் அந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஒலித்து, அவளது குற்ற உணர்ச்சியைத் தூண்டின.

போதுமடா சாமி...அயோக்கியன் கோகுல் இருக்கும் திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, சுயம்வரம் அறிவித்தது முதல் இன்று வரை நடந்ததை ஒரு கெட்ட கனவாக மறந்துவிட வேண்டும்.  இனி கம்பெனி விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த பாஸ்கரின் முகத்தில் நமட்டுச் சிரிப்பு நர்த்தனமாடியது. இரவோடு இரவாக, போலீஸ்  இன்ஸ்பெக்டர் பரத்தை வரவழைத்து, கோகுல் மற்றும் இதர நான்கு இளைஞர்களையும் காவல் நிலையத்தில் வரவழைத்து வந்து மிரட்டி, வாக்குமூலம் எழுதி வாங்கி, விடிந்ததும் நீதிமன்றத்தில் நிறுத்தி வைத்து, இப்போது அவர்களை விசாரணைக் கைதிகளாகச் சிறையில் அடைத்தாயிற்று!  சமயோசிதமாக, அமைச்சர் துணையுடன், ராபர்ட்டையும், பீட்டரையும் கேரளாவில் ரகசியமாகத் தங்க ஏற்பாடு செய்தாயிற்று.  கோகுலுக்கு இப்போது திருட்டுப் பட்டம் கிடைத்திருப்பதனால், இனி போட்டியாவது, மண்ணாவது!  அதுவுமில்லாமல், பட்டேல் கம்பெனிக்கு நில உரிமையை மாற்றித தர அவர்களிடமிருந்து மிகச் சுலபமாக எழுதி வாங்கி விடலாம்!

சியாமளாவுடன் காரில் உட்கார்ந்திருந்த நரசிம்மாச்சாரிக்கும், வாசுவுக்கும் மன ஓட்டம் வேறு மாதிரி இருந்தது.  கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.

வாசு மவுனத்தைக் கலைத்தான் -

சியாமா - எனக்கும் சாரி மாமாவுக்கும் கோகுல் பேரில இன்னும் நம்பிக்கை இருக்கு

எப்படி வாசு?  ஆரம்பத்திலிருந்தே கோகுல் தாத்தா எனக்கு ஒரு வேலை குடுத்திருக்காரு..ஆனா, அது என்னன்னு கேக்காதீங்கசொல்லிகிட்டிருந்தான்.  புதையல தான் தேட வந்திருக்கேன்னு இப்ப கோர்ட்ல ஒத்துக் கிட்டிருக்கான்

சாரி தயங்கியபடி பேசினார் -

குழந்தே... போலீஸ்காரங்களைப் பத்தி உனக்குத் தெரியும்.  அடிச்சு மெரட்டி அவங்களுக்கு சாதகமா எழுதி வாங்கி, கேசை முடிக்கப் பார்ப்பாங்க.  எதுக்கும் நாம ஒரு தரம் கோகுலை ஸ்டேஷன்ல போய் பாக்கிறது நல்லதில்லையா?”

மாமா..மன்னியுங்க.  அந்தக் கல்லுளிமங்கனை நான் இனிமே பார்க்க விரும்பலே.  நீங்க ரெண்டு பேரும் போய்ப் பார்த்து, அவன் எந்த தப்பும் செய்யாதவன்னு தெரிஞசா, எனக்குச் சந்தோஷம்தான்

சியாமளா சொன்னது சரியே.  காவல் நிலையத்தில் கோகுலைச் சந்தித்தபோது, புதிதாய் எந்த விவரமும் சாரிக்கும் வாசுவுக்கும் கிடைக்கவில்லை.  அதே சமயம், போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத் இறுக்கமான முகத்துடன் சரியான ஒத்துழைப்பு கொடுக்காதது அவர்களுக்கு ஏமாற்றமளித்தது. இயந்திரங்களை இயக்கிய இரு ஆங்கிலேயர்களும் எங்கேயென்ற கேள்விக்கு இன்ஸ்பெக்டர் பதில் தராதது அவர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது.

வாசுவுக்கும், சாரிக்கும் உதவிக் கரம் நீட்டியவர்கள், கூத்துப் பட்டறை இயக்குநர் கரோலினும், ஜெயம் நகர் சங்க நிர்வாகிகளும்.  கைதின் பின்னணியில் ஏதோ சதி நடப்பதாக எல்லோரும் நம்பினர்.  பிரம்மாண்டமான முறையில் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணாம்பட்டி நிலத்தில் மஹாபாரதக் கூத்து நடத்த ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்ட நிலையில், கோகுல் குழுவினருடன் அதை நடத்தியே தீருவது என அவர்கள் முடிவெடுத்தனர்.  கூத்துப் பயிற்சிக்காக, தினமும் சில மணி நேரங்களுக்கு அந்த விசாரணைக் கைதிகளுக்கு அனுமதி தருமாறு அரசாங்கத்துக்கு மனு தர அவர்கள் முடிவெடுத்தனர்.

இப்படியிருக்க, ஆளும் கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டு, சட்டசபையில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், பெரும்பான்மையில்லாததால் ஆட்சி கவிழ்ந்தது!  பிரதான எதிர்க்கட்சி தன் பலத்தை நிரூபித்து, உடனடியாகப் பதவியேற்றது!

அதை ஏற்கெனவே எதிர்பார்த்த மாஜி அமைச்சர் செல்லமுத்து, ஜெர்மன் முதலாளி மற்றும் பட்டேல் கம்பெனியிடம் வாங்கிய கோடிக்கணக்கான பணத்துடன் உடனடியாக வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்!

கைக்கெட்டியது வாய்க்கெட்டாத எரிச்சலுடனும், கோடிக்கணக்கில் பணத்தையிழந்த ஆத்திரத்துடனும் காஞ்சனா தன் கணவருடன் தன் சொந்த ஊரான டெல்லிக்குப் பறந்துவிட்டாள்!

உச்சியிலிருந்து அதல பாதாளத்தில் தள்ளப் பட்டது போல உணர்ந்தான் பாஸ்கர்.  நடுவில் வந்த காஞ்சனா, என்னென்னமோ ஆசைக் கனவுகளை அவனிடம் வளர்த்து விட்டு, இப்போது அம்போவென்று விட்டுச் சென்று விட்டாள்!

இனி, சாமந்தி கம்பெனியையும், சியாமளாவையும் விட்டால் அவனுக்கு வேறு நாதியில்லை!

(குறிப்பு: வாசகர்களே... முகவுரை எழுதிய மகரிஷி நாரதர்சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கதையைப் படித்து பதில் தாருங்களேன்)

...தொடரும்

No comments:

Post a Comment