காட்சி 4:
(அதே
ஹால்.... மூர்த்தி, விசாலம் உட்கார்ந்திருக்க, கோபால்
கறுப்புக் கண்ணாடி மாட்டிகொண்டு தட்டுத்
தடுமாறியபடி வருகிறார்)
மூர்த்தி: வாடா கோழி கோபால்... என்ன... கறுப்புக் கண்ணாடி போட்டு கிட்டு, தண்ணி போட்டவன் மாதிரி வர்றே!
கோபால்: தண்ணி இல்லடா... எண்ணெய்
மூர்த்தி: ஓஹோ... வேம்பு கிட்ட மாட்டிகிட்டியா!
விசாலம்: வேம்பு லவ் பண்றதா சொல்லியிருப்பானே.... தன் ரூமுக்கு அழைச்சிகிட்டு போயிருப்பானே!
கோபால்: (ஆச்சரியத்துடன்) ஆமா ... அழைச்சிகிட்டுப் போனானே
மூர்த்தி: செவ்வாய் கிரகத்துப் பொண்ணு பொண்டாட்டியா வரப் போறான்னு சொல்லியிருப்பானே!
கோபால்: சொன்னானே...சொன்னானே
விசாலம்: உங்களையும் செவ்வாய்க்கு தன்னோட கல்யாணத்துக்கு கூட்டிண்டு போறதா சொல்லியிருப்பானே!
கோபால்: அதுவும் சொன்னான்.... போய் வர மூவாயிரம் ரூபா ஆகும்னும் சொன்னானே!
மூர்த்தி: அந்த செவ்வாய்ப் பொண்ணைப் பாக்கணும்கிற ஆசையில, சொட்டு மருந்துன்னு நெனைச்சு, மிளகாப் பொடி எண்ணையை கண்ணில விட்டுக் கிட்டுருப்பியே!
கோபால்: ஐயோ... விட்டுக்கிட்டேனே... என் கண்ணை நானே கெடுத்துகிட்டேனே
விசாலம்: உங்க ஜேபியிலேந்து மூவாயிரம் ரூபா காணாமப் போயிருக்குமே!
கோபால்: போச்சே... அந்தப் பணம் நாசாவுக்கு டிரான்ச்பர் ஆயிடிச்சுன்னு வேம்பு சொல்லிட்டானே... ஏண்டா மூர்த்தி.... இப்படியெல்லாம் நடக்கும்னு என்கிட்டே மொதல்லயே சொல்லப்படாதாடா?
மூர்த்தி: வயசுப் பசங்கதான் ஜொள்ளு விட்டுகிட்டு அவன்கிட்ட இப்படி ஏமாந்தாங்க! நீ எப்படிடா ஏமாந்தே!
விசாலம்: உங்க பிரண்டுக்கு கட்டயில ஏற்ற வயசில போய் , செவ்வாய் சிறுக்கியைப் பார்க்க ஆசை வந்திச்சு பாரு... அதான் அனுபவிக்கிறார்!
கோபால்: (பரிதாபமாக) போதும் விசாலம் மாமி....
ஏற்கெனவே, வேம்புவோட மிளகாப் பொடி கண்ணை
குத்துது.... நீங்களும் மேல மேல குத்தாதீங்க!
(வேம்பு
வருகிறான்)
வேம்பு: ஹாய் கோபால் மாமா ... அஞ்சு நிமிஷம் முந்தி என்னோட கிர் கிர் ஒரு செவ்வாய் கிரக ஜோக் சொன்னா பாருங்க..... அதை கேட்டு சிரிச்சு சிரிச்சு என் வயிறே புண்ணாயிடுச்சு... அந்த ஜோக் என்னன்னா.....
கோபால்: (அவசரமாக) வேணாம்பா சாமி..... மிளகாப் பொடியால ஏற்கெனவே கண்ணு புண்ணாயிடுச்சு .... வயிறு வேற ஆகணுமா?
வேம்பு: இத பாருங்க கோபால் மாமா... நான் டூப் அடிக்கிறேன்னு இங்க யாராச்சும் சொல்லுவாங்க.... அதையெல்லாம் காதில போட்டுக்காதீங்க!
கோபால்: கண்ணு, காது, மூக்கு எதிலேயும் போட்டுக்க மாட்டேன்.... போதுமாப்பா!
வேம்பு: கூல் மாமா.... இத மாதிரி சில சிரமங்க இருக்கத்தான் செய்யும்.... 2020ல செவ்வாய்ல என் கல்யாணத்துக்கு வந்தப் புறம் என்னை தலை மேல தூக்கி வச்சு கொண்டாடுவீங்க !
கோபால்:
(கிண்டலாக) ஆமாம்பா.... நான் உன் தாய்
மாமன் பாரு... கல்யாணத்தில மாலை
மாத்த உன்னைத் தலை மேல
தூக்கி வச்சிக்கப் போறேன்... மொதல்ல, உன்னைப் பெத்த
அப்பனை உன் கல்யாணத்துக்கு கூட்டிப்
போகிறதைப் பத்தி யோசி!
வேம்பு: ஒகே கோபால் மாமா.... உங்க சவாலை நான் ஏத்துக்கிறேன்....(உரக்க) ஹல்லோ நாடக ஆசிரியரே.... என்னோட அப்பா கேரக்டரை எப்ப நொழைக்கப் போறீங்க!
ஆசிரியர் குரல்: இதோ .... இப்பவே!
(கோட்
அணிந்தபடி நாகராஜன் நுழைகிறார்)
நாகராஜன்: மூர்த்தி அத்தான்.... விசாலம் அண்ணி... சௌக்கியமா இருக்கீங்களா? நான் தான் நாகராஜன்
மூர்த்தி: யாரு.... மீனாட்சியோட புருஷனா? ஆளே மாறிட்டே! பெரிய மனுஷன் மாதிரி கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு நிக்கிறே?
நாகராஜன்: நான் இப்ப பெரிய மனுஷன் தான் அத்தான்..... கட்டடம் கட்டுற பெரிய கம்பெனியோட மேனேஜர்! என்னோட விசிட்டிங் கார்டு இந்தாங்க! (கார்டை நீட்டுகிறார்)
கோபால்: யாரு... நீங்க வேம்புவோட அப்பாவா! ... ஹி ஹி ... நான் மூர்த்தியோட பிரெண்டு கோபால்..... ஏன் சார் நீங்க குடும்பத்தை விட்டுட்டு ஓடிப் போனீங்க?
நாகராஜன்: அப்ப வேறு வழி தெரியலே கோபால் சார்.... இப்ப தான் பெரிய ஆளா திரும்பி வந்திட்டேனே!
வேம்பு: (நாகராஜனிடம்) ஹாய் டாட்!
நாகராஜன்: (அவனை அணைத்தபடி) சாரிடா வேம்பு.... உன்னை சின்ன வயசிலேயே விட்டுட்டுப் போனாதால உனக்கு இந்த அப்பா மேல கோபமா?
விசாலம்: ஏண்டா நாகராஜா....கோபப் படாம அவன் உன்னைக் கொஞ்சுவான்னு எதிர்பார்க்கறியா
வேம்பு: இட்'ஸ் ஒகே டாட்..... நான் எல்லாத்தையும் சகஜமா எடுத்துக்குவேன்... நீங்க வந்துடுவீங்கன்னு கோபால் மாமா கிட்ட சவால் விட்டேன்... இப்ப பாருங்க.... ஐயாயிரம் ரூபா ஜெயிச்சிட்டேன்!
கோபால்: (பதறியபடி) இரு...இரு... சவால் வவ்வால்னு நீயா அதுக்கு ஐயாயிரம் வெலை வேற வைக்கிறியா.... இந்த விளையாட்டுக்கு நான் வரலே!
நாகராஜன்: இவர் குடுக்கலேன்னா என்னடா கண்ணா... நான் பத்தாயிரமா தரேன்!
விசாலம்: (உரக்க) மீனாட்சி.... இங்க கொஞ்சம் வாயேன்...
மீனாட்சி: (வந்தபடி) என்ன அண்ணி.....உங்களுக்காக இருமல் கஷாயம் ரெடி பண்ணிகிட்டிருந்தேன்...
விசாலம்: எதிர யார் நிக்கிறது பாரு மொதல்ல...
நாகராஜன்: நான் திரும்பி வந்திட்டேன் மீனாட்சி... நல்லா இருக்கியா...
மீனாட்சி: (வெறுப்புடன்) ஏன் வந்தீங்க? நீங்க இங்க வரலேன்னு யாரும் இங்க அழலியே
நாகராஜன்: உன் கோபம் நியாயம்
தான் மீனாட்சி.....
உனக்கே தெரியும், என் பிசினஸ் நல்லபடியா
நடக்கும்னு நான் கடன் வாங்கினது,
வட்டியோட கடன் தலைக்கு மேல
போயி, நான் தலைமறைவா இருக்கவேண்டிய
சூழ்நிலை... மூர்த்தி அத்தானும் அண்ணியும் உன்னையும் வேம்புவையும் பத்திரமா பாத்துக்குவாங்கன்னு நான் நம்பியது வீண்
போகலே.... இப்ப பாரு மீனாட்சி...
எனக்கு பெரிய வேலை, கை
நிறைய சம்பளம்... இனிமே கடனையெல்லாம் சுளுவா
திருப்பிக் குடுத்திடலாம்! இங்க பக்கத்து தெருவிலேயே
பெரிய flatடை வாடகைக்கு எடுத்திட்டேன்
... இனிமே நாம நிம்மதியா வாழலாம்
மீனாட்சி!
மீனாட்சி: இத பாருய்யா... இனி உன்னை எந்த ஜன்மத்துக்கும் நான் நம்ப மாட்டேன்... உன்னோட காசு பணம் எதுவும் எனக்கு தேவையில்லே... நம்ம உறவு விட்டுப் போயி ரொம்ப காலம் ஆயிடிச்சு..
நாகராஜன்: (கெஞ்சியபடி) அப்படியெல்லாம் சொல்லாத மீனாட்சி..... நடந்ததை கெட்ட கனவா நெனைச்சு என்னை மன்னிச்சு, என் கூட வந்துடு
வேம்பு: மம்மி..... அப்பா இவ்வளவு சொல்றாரில்ல.....சரீன்னு சொல்லும்மா
மீனாட்சி: அட போடா போக்கத்தவனே.... உங்கப்பன் குணம் எனக்குத் தான் தெரியும்.... இனியும் இந்த மனுஷன் கூட நான் குடித்தனம் நடத்தறதா இல்லே...
நாகராஜன்: இந்த ஒரே ஒரு தரம் எனக்காக விட்டுக் கொடு மீனாட்சி
மீனாட்சி: இந்த விஷயத்தை பத்தி இனிமே நான் பேசறதா இல்லே (விருட்டென்று உள்ளே போகிறாள்)
கோபால்: நாகராஜன்..... நீ இன்னிக்கு தானே வந்திருக்கே? மீனாட்சி மனசு மாற கொஞ்சம் டைம் குடுப்பா.... நல்லதே நடக்கும்னு நம்புவோம்... என்ன மூர்த்தி?
மூர்த்தி: ஆமா.... நீ கோபாலா இப்ப சரியாதான் சொல்லியிருக்கே..... அப்புறம் கோழியா மாறி எப்படி கிளறுவியோ !
வேம்பு: டாட்.... இந்த வீட்டில யாருமே என்னை சரியா புரிஞ்சுக்கில.... என்னை பிரீயாவே இருக்க விடமாட்டேன்கிறாங்க.... ஸோ .... நான் கூட வரேன் டாடி... வாங்க போகலாம் (இருவரும் போகிறார்கள்)
கோபால்: என்ன விசாலம்மா.... மீனாட்சி புருஷன் திரும்பி வந்திருக்கிறதைப் பத்தி நீங்க ஒண்ணுமே சொல்லலே?
விசாலம்: சொல்றதுக்கு என்ன இருக்கு.... கிரிக்கெட்டில ரொம்ப மோசமா ஆடிட்டு காணாமப் போன ஆட்டக்காரன் திரும்பி விளையாட வந்தா, பாக்கிறவங்க அவனைச் சட்டையே செய்ய மாட்டாங்க!...... நாகராஜன் இனிமேலாச்சும் பொறுப்பா இருந்து நல்ல பேர் எடுக்கிறானா, இல்லே, பழையபடி சொதப்பரானான்னு பாக்கணும்!
திரை - மறுபடி விலகும்
காட்சி 5:
(அதே ஹால்..... பரத், வீணா, மூர்த்தி, விசாலம் ஆகியோர் டீவீ எதிரில் இருக்க, மீனாட்சி உள்ளே நுழைகிறாள்)
பரத்: மீனாட்சி மாமி... நீங்களும் வந்து பாருங்க....
கோபால்: (நுழைந்தபடி) நானும் பார்க்கலாமில்லியா!
மூர்த்தி: அதான் வந்திட்டியே கரடி
கோபாலா!
பரத்: இப்ப நான் போட்டிருக்கிற வீசீடி என்ன தெரியுமா?
விசாலம்: பரத், நீ கிரிக்கெட் ஆசாமி..... அதை தான் போடுவேன்னு எங்களுக்குத் தெரியாதாடா!
பரத்: ஆனா, வழக்கமான, இந்தியன் டீம், ஆஸ்திரேலியா டீம், இங்கிலாந்து டீம்னு இல்லே.....இது வேற.... சினிமா பிரபலங்க ஆடின கிரிக்கெட்!
வீணா: (குதூகலத்துடன்) ஹை ... அப்ப சூர்யா,ஜோதிகா, விஜய்,, அசின், விக்ரம், திரிஷா - இப்படி ஜோடியா ஆடியிருகிறாங்களா பரத்?
கோபால்: ஏம்மா வீணா... கிரிக்கெட் என்ன சினிமாவில டூயெட் ஆடற மாதிரியா! இந்த சினிமாக் காரங்களுக்கு ஒழுங்கா பேட்டையே பிடிக்கத் தெரியாதே!
பரத்: கோபால் சார்....மொதல்ல டீவீயப் பார்த்திட்டுப் பேசுங்க.... எல்லா சினிமா நட்சத்திரங்களும் ஒரு வாரம் ஷூட்டிங்கைக் கேன்சல் பண்ணிட்டு, என்கிட்டே கிரிக்கெட் ஆடறதுக்கு ட்ரைனிங் எடுத்துக்கிட்டாங்க!
விசாலம் :
ஆமாண்டா பரத்... நீ சிரமப்பட்டு
கத்துக் குடுத்தது வீண் போகலே... இங்க
பாரேன்.. விஷாலுக்கு எகிறிக் குதிச்சு என்னமா
பந்தை சுழட்டிப் போட சொல்லித் தரே! அவன் சொதப்பரப்ப அஞ்சலியும்
டாப்சியும் பக்கத்தில நின்னுகிட்டு கலாட்டா பண்ணுதுங்களே ! என்னது?
சந்தடி சாக்கில நமீதாவுக்கு பேட்டை
இப்பிடிப் பிடி அப்பிடிப் பிடின்னு
நீ அவ கையை அழுத்திப்
பிடிச்சு சொல்லித் தரே?
பரத்: மாமி.... நான் அப்பிடி சிரத்தையா சொல்லித் தரவே தான் நமீதா இந்த மேட்ச்ல அம்பது ரன் எடுத்தாங்க! இங்க பாருங்க ஒரு ஆக்டர் விடாம, என்னோட படம் எடுத்துக்கிட்டு போஸ் குடுக்கிறதை!
வீணா: அப்போ... இந்த மேட்ச்ல நீதான் ரியல் ஹீரோன்னு சொல்லு!
கோபால்: ஏம்பா பரத்.... இவ்வளவு நெருக்கமா சினிமாக்காரிங்க உடம்போட உரசிக்கிட்டு நின்னிருக்கே! நீ கொஞ்சம் கூட ஜொள்ளு விடலியே!
மீனாட்சி: வாயை அலம்புங்க.... எங்க பரத் குணத்தில ராமனாக்கும்!
(வேம்புவும் நாகராஜனும் உள்ளே நுழைகிறார்கள்)
நாகராஜன்: என்ன மூர்த்தி அத்தான்.... பரதன், ராமன்லாம் காதில விழுது! ராமாயண சீரியல் பாக்கிறீங்களா?
மூர்த்தி: ராமாயணமும் இல்ல, பரதனும் இல்லடா நாகராஜா... இந்த பரத்தைப் பத்தி தான் பேசிக்கிட்டிருந்தோம்
நாகராஜன்: (வீணாவைப் பார்த்து) நீ.... நம்ம வீணா தானே... முக ஜாடை மாறவேயில்ல.... ஆனா அதெப்படி இப்படி கிடு கிடுன்னு வளர்ந்திட்டே!
விசாலம்: ஏம்பா நாகராஜா... நீ பத்து வருஷம் முன்னாடி எங்கேயோ போயிட்டே....அதுக்காக வீணா வளராம அப்படியே குழந்தையா இருக்கனும்கிரியா!
மீனாட்சி: (வெறுப்புடன்) இந்த ஓடிப்போன மனுஷனோட பிள்ளையும்தான் இதோ மதமதன்னு வளர்ந்து நிக்கிறான், யாருக்கும் பிரயோஜனமில்லாம!
நாகராஜன்: மீனாட்சி...நான்தான் இப்போ சுக்கிர தசையோட திரும்பி வந்திட்டேனே....இனிமே பாரு... நம்ம பையன் வேம்புவை ஓஹோன்னு ஆக்கி காட்டறேன்!
வேம்பு:
எஸ் மம்மி..... டாடியோட நேத்து ஆபிசுக்கு
கார்ல போனப்ப, அப்பாவுக்கு அவ்வளவு
மரியாதை! எனக்கும் சேர்த்து சல்யூட் அடிச்சாங்க! ஆபிசும்
சரி, அப்பாவோட ப்ளாட்டும் சரி... அப்படியே குளு
குளுன்னு இருக்கு மம்மி!
மீனாட்சி: (கேலியாக) ஆமா....ரவுடி, தாதாங்க கூடதான் ஏ.சி கார், பங்களான்னு இருக்காங்க..... உன் அப்பனும் நீயும் அடுத்தவன் காசில அட்டகாசம் பண்றவங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்! (உள்ளே போகிறாள்)
மூர்த்தி: என்னடி இது விசாலம்.... மீனாட்சி மனசு மாறவே மாறாதா?
விசாலம்: (பெருமூச்செறிந்தபடி) ஹூம்... அப்பன் துணையில்லாம, ஒரு ரெண்டுங்கெட்டான் பையனை கட்டிக் காப்பாத்த மீனாட்சி எவ்வளவு கஷ்டப்பட்டான்னு உங்களுக்கே தெரியும்.... அந்த விரக்தி தான் அவளை இப்படி வைராக்கியமா பேச வைக்கிறது...
நாகராஜன்: நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன் அண்ணி..... நடுவில அப்பப்ப மீனாட்சியையும் வேம்புவையும் பாக்க வந்திருக்கணும்.... ஆனா இப்ப ஒரு தீர்மானத்தோட தான் இருக்கேன் அத்தான்.... வருஷக் கணக்கில, மீனாட்சிக்கும் பையனுக்கும் நீங்க ஆதரவு தந்ததுக்கு நன்றிக் கடனா உங்க குடும்பத்துக்காக நான் மாடா உழைக்கப் போறேன்!
மூர்த்தி: இப்படி சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம் நாகராஜா.... ஆனா என்ன.... மாடா உழைக்கறேன்னு பக்கத்தில இருக்கிறவங்களை முட்டிடாதே! வெளையாட்டுக்குச் சொன்னேன்!
நாகராஜன்: ஆனா நான் இந்த விஷயத்தில சீரியஸ்ஸா இருக்கேன் அத்தான்.... அதுவும் வீணாவுக்கு உசத்தியான வாழ்க்கையை அமைச்சுக் குடுக்கிறது என்னோட ரொம்ப முக்கியப் பொறுப்பு!
வீணா: அதானே..... அங்க சுத்தி, இங்க சுத்தி எல்லோரும் என்னோட கல்யாணப் பேச்சில வந்து நிப்பீங்களே!
நாகராஜன்: பேச்சோட நான் நிக்க மாட்டேன் வீணா! உன்னோட கல்யாணத்தை முடிச்சிட்டுதான் மறு வேலை!
வேம்பு: டாடி.... 2020ல என் கல்யாணம் ஞாபகம் இருக்கட்டும்... நான் சொன்னேனே, என்னோட கிர் கிர் கிரி... செவ்வாய் கிரகப் பொண்ணு!
நாகராஜன்: அதுக்கென்னடா கண்ணு.... அந்தக் கிரகசாரத்தை அப்ப பாத்துக்கலாம் ..... ஆமா மூர்த்தி அத்தான்.... இந்த பரத் யாருன்னு நீங்க சொல்லவே இல்லியே?
விசாலம்:
இவன் வேலூர் கிருஷ்ணசாமியோட பையன்
... உனக்கு தெரிஞ்சிருக்குனுமே?
நாகராஜன்: என்ன அத்தான் இது.. எனக்கு நல்லாவே நெனவில இருக்கு ... முன்னே இதே இடத்தில உங்களை கன்னா பின்னான்னு திட்டி, பணத்தை உங்க மூஞ்சியில விட்டெறிஞ்சு, உங்களை அடிக்க கை ஓங்கின, அந்த கிருஷ்ணசாமியோட பிள்ளையா இந்த பரத்!
பரத்: நாகு மாமா.... உங்களுக்கு ஆயிரம் கும்பிடு ... கொஞ்சம் கொஞ்சமா இப்பதான் என் அப்பா செஞ்ச தப்பை மூர்த்தி மாமாவோட குடும்பத்தை மறக்க வச்சு, இப்ப என்னோட சகஜமா பழகிற நிலைமைக்கு பெரும் பிரயர்த்தனம் எடுத்து, கொண்டு வந்திருக்கேன்.... அதனால, மறுபடியும் அந்த சங்கதியை பத்தி பேசறதை விட்டுடுங்க... ப்ளீஸ்! வீணா... கடைக்குப் போகணும்னு சொன்னியே.... போகலாம் (இருவரும் போகிறார்கள்)
கோபால்: (தனக்குள்) ஆஹா..... கிளறிக் கிளறியே, விஷயத்தை ஊசி குத்தற மாதிரி இந்த கோழி கோபால் கக்க வைப்பான்னா, இந்த நாகராஜன் புஸ்னு படமெடுத்தே பயமுறுத்தரானே... இந்த ஆளை நான் கலாய்ச்சா என்ன! (உரக்க) என்ன நாகராஜன்.... நான் ஒன்னு கேக்கணும்.... உங்களுக்கு, செவ்வாய் கிரகப் பொண்ணு கிர் கிர் கிரிஜா மருமகளா வர்றது சம்மதம்தான?
நாகராஜன்: என்ன இப்படிக் கேட்டுட்டீங்க கோபால் சார்.... அப்பா அப்பான்னு என் பேர்ல கிர் கிர் கிரி உசிரையே வச்சிருக்கா!..... என் கால்ல விழுந்து என்னோட மனப்பூர்வமான ஆசீர்வாதத்தை வாங்கிட்டா! அப்ப எடுத்த போட்டோ என் கிட்ட இருக்கு.... பாக்கிறீங்களா?
கோபால்: பேஷா பாக்கறேனே .... எங்க காட்டுங்க?
வேம்பு: இதோ, இப்பவே கிர் கிர் கிரியோட போட்டோவை எடுத்துகிட்டு வரேன் கோபால் மாமா..... அதோட, அதை நீங்க பாக்கிறதுக்கு சொட்டு மருந்தும் கொண்டு வரேன்!
கோபால்: (அதிர்ச்சியுடன்) மறுபடியும் மிளகாப் பொடியா....இந்த விளையாட்டுக்கு நான் வரலே! (அவசரமாக வெளியே போக, மற்றவர்கள் சிரிக்கிறார்கள்)
திரை - மறுபடி விலகும்
காட்சி 6:
(அதே ஹால்.... மூர்த்தி, விசாலம், கோபால் ஆகியோர் அமர்ந்திருக்க, நாகராஜன் திவாகருடன் நுழைகிறார்)
நாகராஜன்: மூர்த்தி அத்தான்..... வந்திருக்கிறவர், என்னோட முதலாளியோட ஒரே பையன் திவாகர்.... ஒரே வாரிசு.... ஜமீன் பரம்பரை..... இந்த திவாகர் சார் அமெரிக்காவில பிசினஸ் பண்றார்.... போன வெள்ளிக்கிழமை தான் என்னோட போன்ல பேசினார்... இப்ப, சென்னையில வந்து நிக்கிறார்! இங்க புதுசா பேக்டரி ஆரம்பிக்கப் போறார்.... அதுக்காக ஆறு மாசம் சென்னையில தங்கப் போறார்
மூர்த்தி: உட்காருங்க சார்.... நீங்க எங்களைப் பாக்க வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்...(உரக்க) மீனாட்சி.... காப்பி கொண்டாம்மா
திவாகர்: சாரி.... நான் வெளியில எதையும் சாப்பிடறதில்ல .... எனக்கு வேண்டியதை நானே தயார் செஞ்சிப்பேன்!
கோபால்: ரொம்ப நல்ல பாலிசி தம்பி சார்.....ஹி ..ஹி .... நான் இந்த பேமலி பிரண்டு.... கோபால்!
நாகராஜன்: மூர்த்தி அத்தான்..... நான் சொல்லாம கொள்ளாம ஆந்திரா போனதிலேந்து எனக்கு அதிர்ஷ்டம் மேல அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும்! நெல்லூர் கிட்ட இவங்களோட ஜமீன் இருக்கு...தோட்டம் துரவுன்னு எக்கச்சக்கமான சொத்து... இவரோட அப்பா ஜமீன்தார் ஜகன்னாதன் கண்ணில நான் பட்டேன்... என்னைப் பிடிச்சுப் போயி, பெரிய மனசு பண்ணி, அவர் ஜமீன்ல என்னை மேனேஜரா எடுத்துக்கிட்டார்! இருக்கிற சொத்து போதாதுன்னு ரியல் எஸ்டேட் பிசினசையும் பெரிய அளவில ஜமீன்தார் செய்யிறார். அந்த கம்பெனியோட சென்னை பிராஞ்சிலதான் நான் இப்ப மேனேஜர்! சின்ன ஜமீன்தார் திவாகர் சாரும் தன்னோட இருந்து, சொத்து பிசினசையெல்லாம் பாத்துக்கனும்னு பெரியவருக்கு ஆசை.. ஆனா அமெரிக்காவிலேயே தங்கி கார் தயாரிக்கிற தொழில்ல பெரிய ஆளா வரணும்னு இந்த சின்னவருக்கு ஆசை ... அதான் அங்கியே செட்டில் ஆயிட்டார்
திவாகர்: (பொறுமை இழந்து) ஒகே...ஒகே.... நான் வந்த
விஷயத்தை சொல்லிடுங்க!
நாகராஜன்: (சமாளித்தபடி) பாத்தீங்களா... திவாகர் சாருக்கு நேரம் ரொம்ப ரொம்ப முக்கியம்... இவர் தங்கறதுக்காக பைவ் ஸ்டார் ஹோட்டல்ல பெரிய ரூமா புக் பண்ணியிருக்கோம்... ஆனாலும் அது ஆபீஸ் வேலைக்கு மட்டும்தான், வீட்டு சூழல்ல தனியா ஒரு ரூம் வேணுமின்னு அடம் பிடிக்கிறார்! எனக்கு இந்த வீடுதான் ஞாபகம் வந்திச்சு அத்தான்.... இங்க மாடி ரூம் காலியாதான கெடக்கு? அதை ஆறு மாசம் வாடகைக்கு விடுவீங்களான்னு கேக்க இவர் வந்திருக்கிறார்!
மூர்த்தி: அதுக்கென்ன.... பேஷா தர்றேனே
விசாலம்: (நம்பிக்கையில்லாமல்) பெரிய மனுஷர்! இங்க தங்க நாங்க குடுத்து வச்சிருக்கணும்... ஆனா, ரொம்ப பழைய ரூம்.... இவருக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ?
திவாகர்: பரவாயில்லை... நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்... ஆறே மாசம்தான... (செக்கை எடுத்து எழுதித் தந்தபடி) இந்தாங்க, ஒரு லட்சம் ரூபா அட்வான்ஸ்!
மூர்த்தி: ஹி ..ஹி ... அதிகமாவே குடுத்திருக்கீங்க.. சாருக்கு என்ன மாதிரி சமையல் பிடிக்கும்னு சொல்லுங்க... எங்க மீனாட்சி கிட்ட சொல்லி ஏற்பாடு செஞ்சிடறேன்!
திவாகர்: தேங்க்ஸ்.... ஆனா எனக்கு பிரைவசி ரொம்ப ரொம்ப முக்கியம்.... சமையல் மட்டுமில்ல, என் சம்பந்தப் பட்ட வேலைங்களை நானேதான் பாத்துப்பேன்
நாகராஜன்: இது மட்டுமில்ல அத்தான்... லேடீஸ்னா திவாகர் சாருக்கு ரொம்ப மரியாதை... அளவோட தான் பேசுவார்! சின்ன முதலாளி .... மாடிக்கு வாங்க போகலாம் (இருவரும் மேலே போக, மீனாட்சி வருகிறாள் )
மீனாட்சி: அத்தான்.... எல்லாத்தையும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன்... முன்னே, பின்னே தெரியாதவரை நம்பி மாடி ரூமை வாடகைக்கு விடறது சரீன்னு எனக்குப் படல...
விசாலம்:
இப்படி பயப்பட வேண்டிய அவசியமே
இல்லம்மா மீனாட்சி.... பெரிய இடத்துப் பிள்ளைன்னு
பார்த்தாலே நல்லா தெரியுதே!
மூர்த்தி: இங்க பாரும்மா... டக்குனு லட்ச ரூபாய்க்கு செக் குடுத்துட்டார்.... அதுவுமில்லாம, உங்க வீட்டுக்காரனோட முதலாளி பிள்ளை தானேம்மா!
மீனாட்சி: அதனால தான் எனக்கு
சந்தேகமே ... வந்திருக்கிறது சின்ன முதலாளின்கிறார்... தன்னோட
ப்ளாட்ல கூட வச்சிக்கிலாமில்லியா?
கோபால்: அட... அதுதாம்மா முதலாளி பந்தா.... தனக்கு கீழ வேலை செய்யிறவங்க கூட தங்க மாட்டானுங்க!
மீனாட்சி: என் மனசில தோணினதை சொல்லிட்டேன் அத்தான்.... என் வீட்டுக்காரர் குணம் எப்படின்னு எனக்கு நல்லாவே அனுபவம் இருக்கே.... நாம ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது (உள்ளே போகிறாள்)
மூர்த்தி:
விசாலம்... எனக்கு என்னமோ மீனாட்சி
தேவையே இல்லாம பயப்படறா ன்னு
தோணுது!
விசாலம்: ம்.... வயசுப் பொண்ணு வீட்ல இருக்கிறதால மீனாட்சி இப்படிப் பேசறா... அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் .... அவ சொன்னதை இந்த காதில வாங்கி அந்த காதில விட்டுடுங்க...
கோபால்: (தனக்குள் மெதுவாக) பலே... வீணாவுக்கு ஜோடி பரத்தா, இல்ல திவாகரான்னு இந்தக் கதை போகுது! அப்பப்ப, பிரச்சினையை கிளறி விட இந்த கோழி கோபாலுக்கு வேலை வந்தாச்சு!
(திரை - மறுபடி விலகும்)
No comments:
Post a Comment