Monday, May 13, 2013

கடைசிப் பந்து - நாடகம் - மூன்றாம் பகுதி

காட்சி 7


(அதே ஹால்....விசாலம், வீணா, பரத் ஆகியோர்)


விசாலம்:  ஏம்பா பரத்... நேத்து டீவீயில பாத்த கிரிக்கெட் விளையாட்டில, பந்தை பிடிக்காம, கையைக் கட்டிக்கிட்டு ஒதுங்கிப் போனானே ஒரு தொப்பி ஆசாமி.... அவனை எப்பிடி ஆட்டத்தில சேர்த்துக் கிட்டாங்க?

வீணா: ஐயோ அம்மா... அவர் பந்தையே தொடக்கூடாது! ஏன்னா, அவர் லெக் அம்பயர்!

விசாலம்: இது என்னடி கூத்து! காலுக்குன்னு தனியா அம்பயரா? அப்ப, பந்து வீசறவன் பக்கத்தில நின்னுகிட்டு, கொடுக்கிரதை எல்லாம் இடுப்பில சொருகிக்கிறவன்,  கைக்கு அம்பையரா?

பரத்:  (சிரித்தபடி)  மாமி..... பொம்பளைங்க ஆடற கிரிக்கெட் விளையாட்டு அடுத்த மாசம் இங்க நடக்கப் போகுது... நான் உங்களை அழைச்சிக்கிட்டுப் போயி எல்லாத்தையும் விவரமா புரிய வைக்கிறேன்... 
(நாகராஜன் உள்ளே வருகிறார்)

நாகராஜன்:  ஏம்பா பரத்... நீ பலே ஆளுப்பா! இங்க எல்லாரையும் கிரிக்கெட்டை பாக்க வச்சே மயக்கற!

மீனாட்சி: (வந்தபடி)  ரசனை இருக்கிறவங்க கிரிக்கெட்டை விரும்பிப் பாக்கிறாங்க... ஒண்ணுமில்லாத ஜடங்களுக்கு அது புரியாது....

நாகராஜன்:  அடடே... மீனாட்சி, நீயும் கிரிக்கெட் ரசிகையா! இருக்கட்டும், இருக்கட்டும்... ஏம்பா பரத்.... நீ டெஸ்ட் பிளேயரா?

பரத்:  அதெல்லாம் இல்லை மாமா.... கிரிக்கெட் ஆபீஸ்ல வேலை பாக்கிறேன் ... எல்லாத்தையும் பாத்து, பழகி தெரிஞ்சுகிட்டேன்!

நாகராஜன்: (கிண்டலாக) ப்பூ ... இவ்வளவுதானா... மாடி ரூம்ல இருக்கிற திவாகர் சார் கர்நாடகா ரஞ்சி டீம் ப்ளேயராக்கும்!  அவர் ஜெயிச்சு வாங்கின கப் எல்லாத்தையும் என்கிட்டே காண்பிச்சார்.... அவர் கண்டி அமெரிக்காவில செட்டில் ஆகாம இருந்திருந்தா, இங்க சச்சின், சேவாக்  ரேஞ்சுக்கு வந்திருப்பார்!
(கேட்டுக்கொண்டே திவாகர் நுழைகிறான்)

திவாகர்:  நாகராஜன்... என்ன என்னை ஒரேயடியா தூக்கி வச்சுப் பேசறீங்க!

நாகராஜன்: (பணிவுடன்) வாங்க... வாங்க... நெஜத்தை தான் சொன்னேன்..... மூர்த்தி அத்தான் வெளியே போயிருக்கிறார்.... இவ, அவரோட பொண்ணு வீணா
.
திவாகர்:  ... (பரத் பக்கம் திரும்பி கை குலுக்கிய படி)... நீங்க?

பரத்:  என் பேரு பரத்.... இவங்களுக்கு உறவு....

நாகராஜன்: கிரிக்கெட் ஆபீஸ்ல பரத் வேலை பாக்கிறான்.... பால், பேட், ஸ்டம்ப் பத்தியெல்லாம் தெரியும்... சின்ன முதலாளி.... இந்த வீ ட்ல எல்லோருக்கும் கிரிக்கெட்னா ரொம்ப பிடிக்கும்.... நீங்க ரஞ்சி ட்ராபியில செஞ்சரி அடிச்ச சீடியை குடுத்தா, இவங்க பாத்து ரொம்ப சந்தோஷப் படுவாங்க!/

திவாகர்:  அதுக்கென்ன தரேனே...  இப்ப எனக்கு அவசர மீட்டிங் இருக்கு... நான் போகணும் (வேகமாகப் போகிறான்)

கோபால்: (வந்தபடி) என்னம்மா வீணா... மூர்த்தி டீநகர் வரைக்கும் போறேன்னான்.... வந்துட்டானா?

விசாலம்: ஒப்புக்கு விசாரிச்சது போறும் .... நீங்க பேப்பர் படிங்க!

வீணா: கோபால் மாமா..... இன்னையிலேந்து பேப்பர் விலை ஒரு ரூபா ஏறியிருக்கு... உங்க கடன் நோட்டில அப்பா எழுதிட்டார்!

கோபால்: (மேலே பார்த்து விட்டு நாற்காலியைத் தள்ளிப் போட்டுக்கொள்கிறார்)  தலைக்கு மேல பேன் சுத்துதே... கரண்ட்டு காசையும் நோட்டில எழுதிடப் போறான்!.....  ஏம்பா  நாகராஜன்... பரத் தம்பி இங்க இருக்கச்சே,  இவனோட அப்பா வேலூர் கிருஷ்ணசாமி முன்ன போட்ட சண்டையைப் பத்தி அசட்டுத் தனமா உளறி வைக்காதீங்க!

வீணா:  கோபால் மாமா.... உங்களுக்கு அந்த சண்டை விஷயத்தை கிளறிப் பாக்கணும்... அதான?  வாங்க மீனாட்சி மாமி, பரத்... உள்ள நாம போகலாம் (மூவரும் போகிறார்கள்)

நாகராஜன்: இத பாருங்க கோபால் சார்.... பரத்தை எளக்காரமா பேசணும்னு எனக்கு எண்ணம் இல்லே... இருந்தாலும் நீங்க தெரிஞ்சுக்க வேணாமா?  அந்த வேலூர் கிருஷ்ணசாமி ஏதோ அவசரத்துக்கு மூர்த்தி அத்தான் கிட்ட அம்பதாயிரம் ரூபா கை மாத்தா கேட்டான்... அத்தானும் எங்கெங்கயோ புரட்டி பணத்தைக் கொடுத்தார்... ஒரு வருஷம் கழிச்சப் புறம் மூர்த்தி அத்தானுக்கு பணம் தேவைப் பட்டதால, கிருஷ்ணசாமியை கேட்டிருக்கிறார்... இதில என்ன தப்பு?  கிருஷ்ணசாமிக்கு அது அவமானமாப் போயிடிச்சாம்....  நானா திருப்பிக் கொடுக்காதவரை நீ எப்பிடி பணத்தை கேப்பே .... கொடுத்த மாதிரி குடுத்து இப்படி மட்டம் தட்டறியா  .... உறவுக்காரன்னு மதிப்பே இல்லை... அது, இதுன்னு எல்லார் எதிரேயும் அத்தானை அடிக்க வர்ற மாதிரி குதிச்சார்... கெட்ட வார்த்தைங்க சரளமா வந்திச்சு... (தயங்கியபடி) அதையெல்லாம் சொல்லனும்னா....

கோபால்: சொல்ல வேண்டாமே.... எனக்குத் தெரியாத கெட்ட  வார்த்தை இருக்கா என்ன?

விசாலம்:  அப்ப ஒன்னு பண்ணுங்க...  நீங்க நாகராஜனை கெட்ட வார்த்தையால திட்டுங்க..... பதிலுக்கு நாகராஜன் உங்களை திட்டட்டும்..... எதாச்சும் விட்டுப் போனா, நான் சொல்றேன்!

கோபால்: வேணாம் மாமி... எனக்கு இன்னைக்கு நேரம் சரியில்லை.... பேப்பர்ல ராசி பலன் படிக்கணும்! (பேப்பரால் மூடிக் கொள்கிறார்)

                                                                             திரை - மறுபடி விலகும்

காட்சி 8:


(அதே இடம்.... மூர்த்தி, விசாலம், மீனாட்சி ஆகியோர் இருக்க, நாகராஜன் உள்ளே நுழைகிறார்)

நாகராஜன்:  அத்தான்.... ஸ்வீட் எடுத்துக்குங்க

மூர்த்தி:  என்னடா நாகராஜா விசேஷம்?

நாகராஜன்:  சொல்றேன்.... அண்ணி, நீங்களும் எடுத்துக்குங்க... மீனாட்சி.... நீயும் எடுத்துக்க!

மீனாட்சி: இனிப்பு சாப்பிடறதை நான் நிறுத்தி  பல வருஷம் ஆச்சு..
அதுவும் உங்க கையிலேயிருந்து வந்தா விஷம் மாதிரி!

நாகராஜன்: (சோகமாக)  அத்தான்..... மீனாட்சி மனசு மாறி, என்னை ஏத்துக்கிற நாள் ரொம்ப தூரத்தில இல்ல.... நான் எதுக்கு ஸ்வீட் குடுக்கிறேன்னு சொல்றேன்.... நான் நினைச்சதை விட வெகு சீக்கிரமா அதிர்ஷ்டம் இந்த வீட்டுக் கதவை தட்டப் போறது!

மீனாட்சி: (கேலியாக) அப்ப, இந்த மனுஷன் சொல்றது குருட்டு துர் அதிர்ஷ்டம்.... வீட்டு வாசல்ல காலிங் பெல் இருக்கச்சே அது கதவை ஏன் தட்டனுன்கிறேன்!

நாகராஜன்: நல்ல ஜோக் மீனாட்சி.... ஆனா, கரண்டை நம்பி ரிஸ்க் எடுக்கிற அதிர்ஷ்டம் இது இல்ல.... அத்தான்... இப்படிப்பட்ட உண்மையான அதிர்ஷ்டம் கதவை தட்டினா, நீங்க கதவைத் திறப்பீங்களா , மாட்டீங்களா !
(கோபால் உள்ளே நுழைகிறார்)

கோபால்:  கதவைப் பத்தி என்ன பேச்சு?  திறந்திருந்திது... நொழஞ்சிட்டேன்!

விசாலம்:  அப்ப, உங்க பூர்வ ஜென்மம் என்னன்னு எங்களுக்கு புரிஞ்சு போச்சு!

மூர்த்தி:  பூர்வ ஜென்மம், நாய், பேய் பத்தியெல்லாம் என்ன பேச்சு..... நாகராஜா.... அதிர்ஷ்டம்  கதவை தட்டினா, தொறக்காத மக்கு நாங்க இல்ல!

நாகராஜன்:  ரொம்ப சரியா சொன்னீங்க அத்தான்..... இப்ப விஷயத்தை சுருக்கமா சொல்லிடறேன்.... ஆந்திராவிலேந்து என்னோட முதலாளி கிட்டேயிருந்து போன் வழியா எனக்கு ஒரு நல்ல சேதி கிடைச்சிருக்கு!  ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி, அவர் ஜமீன்தார் பரம்பரை... கோடிக்கணக்கில சொத்து இருக்கு... நம்ம பழக்க வழக்கங்கதான்.... அவருக்கு திவாகர் சார் ஒரே பையன்.... ஜமீன்தாருக்கு கொஞ்ச நாளா உடம்பு சரியில்ல....குடும்ப ஜோசியரை ஆலோசனை கேட்டிருக்கிறார்... அதன் பிரகாரம் திவாகருக்கு உடனடியா கல்யாணம் பண்ணத் தீர்மானிச்சிட்டார் ஜமீன்தார் ....

மீனாட்சி:  மூர்த்தி அத்தான் ... இதையெல்லாம் இவர் நம்ம கிட்ட ஏன் சொல்றார்?  இங்க சம்பந்தம் பேச யாரும் ஜமீன் பரம்பரையோ, பணக்காரங்களோ இல்லை!

கோபால்: ஒரு வேளை இப்படி இருக்குமோ.... கல்யாண விஷயத்தை ஜமீன்தார் தன் பிள்ளை திவாகர் கிட்ட சொல்லியிருப்பார்..... அவர் தனக்குப் பிடிச்ச பொண்ணைக் கட்டிக்கிறேன்னு சொல்லியிருப்பார்.... ஆனா, அதுக்கும், அதிர்ஷ்டம் இந்த வீட்டுக் கதவைத் தட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்?

நாகராஜன்: சம்பந்தம் இருக்கு கோபால் சார்.... பரத், வீணா மாதிரி, திவாகர் மனசிலேயும் காதல், கத்திரிக்கான்னு எதுவும் இல்லே.... அவருக்கு எப்பவும் பிசினஸ் ஞாபகம்தான்... இப்ப அப்பாவுக்கு உடம்பு சரியில்லேன்னு தெரிஞ்சதால, அப்பா கை காட்ற பொண்ணுக்கு தாலி கட்ட திவாகர் சார் சம்மதிச்சிருக்கிறார்!

மூர்த்தி: நாகராஜா... ஜமீன்தாரோட ஒரே பிள்ளைன்னு சொல்றே.... எக்கச்சக்கமான பணம் வேற.... பெரிய பெரிய இடத்து வரனெல்லாம் வந்து குவியுமேப்பா!

நாகராஜன்: ஆமாம் அத்தான்... நாலஞ்சு வருஷமாவே ஜாதகங்க குவிஞ்சுகிட்டே வருது... நான் கூட, அட குடுத்து வைப்பமேன்னு, நம்ம வீணாவோட பொறந்த நாள், நேரம்,நட்சத்திரம் தெரிஞ்சிருந்ததால, அவ ஜாதகத்தையும் கணிச்சு குடுத்திருந்தேனே!

விசாலம்: அதனால என்ன லாபம் சொல்லு நாகராஜா.... அவங்க அந்தஸ்துக்கு நம்மது ஏணி வச்சாலும் எட்டாதே?

நாகராஜன்: ஆனா, தெய்வ சங்கல்பம்னு ஒண்ணு இருக்கே அண்ணி..... அந்த ஜமீன் வழக்கப்படி, பரம்பரை ஜோசியர் வந்த ஜாதகத்தையெல்லாம் கண்ணில வெளக்கெண்ணை விட்டுக் கிட்டு பார்ப்பார்!  காரணம், ஜமீன்தார் சொத்து எல்லாமே பிள்ளைக்குப் பொறக்கப் போற பேரனுக்கோ, பேத்திக்கோ தான் போகப் போகுது!

மூர்த்தி: இப்ப புரியுது நாகராஜா.... ஜமீன்தார் தன செலவில ஒரு பொண்ணுக்கு கல்யாணத்தை நடத்தி வைச்சா, அவர் பையனுக்கு பொருத்தமான வரன் அமையும்னு பரிகாரம் சொல்லியிருப்பார்... சரிதானே?

மீனாட்சி: அப்படியிருந்தா, வீணாவுக்கும் பரத்துக்கும் உடனடியா கல்யாணத்தை முடிச்சிடலாம் மூர்த்தி அத்தான்!

நாகராஜன்: (அவசரமாக)  அப்படியெல்லாம் ஒரு பரிகாரமும் இல்ல...அத்தான்.... நான் சட்டுபுட்டுன்னு நறுக்னு சொல்றேன்.....ஜமீன் ஜோசியர் எல்லா ஜாதகத்தையும் சல்லடை போட்டு சலிச்சு, ரெண்டே ரெண்டு ஜாதகம் தான் திவாகர் ஜாதகத்துக்கு எல்லா விதத்திலும் போருந்தறதுனு சொல்லிட்டார்... அந்த ரெண்டு அதிர்ஷ்ட ஜாதகத்தில ஒன்னு நம்ம வீணாவுது!

விசாலம்:  ரொம்ப நல்ல சேதிதான் சொல்லியிருக்கே நாகராஜா....கேக்கிறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.... ஏங்க ... நீங்க என்ன சொல்றீங்க?

மூர்த்தி: ஜமீன் சம்பந்தம்... நம்ப பக்கத்து மனுஷங்க....சந்தேகமே இல்லாம, இது உசத்தியான சம்பந்தம் தான்.....ஆனா...

நாகராஜன்: (அவசரமாக குறுக்கிட்டு)  அத்தான்.... நீங்க இப்படி தயங்குவீங்கன்னு தெரிஞ்சுதான், ஜமீன்தாரே நேர இங்க வந்து 'இந்த சம்பந்தம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... எல்லா கல்யாண செலவையும் நானே ஏத்துகிறேன்'னு அவர் வாயாலேயே உங்க கிட்ட சொல்லப் போறார்!

கோபால்:  அப்புறம் என்னடா மூர்த்தி... உடனே ஜமீன்தாருக்கு போன் போட்டு உனக்கும் சம்மதம்னு சொல்லிடு!

மூர்த்தி:  இத பாருப்பா கோபால்... அபரிமிதமான சந்தோஷத்தில நான் தலையும் புரியாம காலும் புரியாம இப்ப இருக்கேன்.... வீணா கல்யாணத்தைப் பத்தி நாங்க கொஞ்சம் கூட யோசிக்கலியே?

மீனாட்சி: மூர்த்தி அத்தான்.... வீணாவும் கல்யாணம் இப்ப வேணாம்னு சொல்லியிருக்கா... அதை மனசில வச்சிக்குங்க

நாகராஜன்:  நீ சொல்லறது சரி மீனாட்சி... ஆனா, அவளுக்கு கல்யாண அதிர்ஷ்டம் இப்ப சொல்லாம கொள்ளாம வந்திடுச்சே!  அதனால, வீணா நாம எடுத்து சொன்னா கட்டாயம் சம்மதிப்பா... மொதல்ல நிச்சயத்தை முடிப்போம்... மத்ததுக்கு டைம் எடுத்துக்குவோம்

மீனாட்சி:  இவரு பேச்சை விடுங்க அத்தான் 
 கல்யாணம் ஒரு ஆயிரம் காலத்துப் பயிர்னு பெரியவங்க சொல்றாங்க... அதில அவசரம் கூடாது... வீணாவுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா அதைப் பாத்து சந்தோஷப் படற மொதல் ஆளு இந்த மீனாட்சிதான்

விசாலம்: இதை நீ சொல்லனுமா மீனாட்சி.... நாங்க இந்த வீட்டில வெறும் பொம்மைங்க.... வீணாவை சின்ன குழந்தையிலேந்து வளர்த்து ஆளாக்கினது நீ தானே !

மூர்த்தி:  சரியா சொன்ன விசாலம்..... ஏம்மா மீனாட்சி.... இப்ப நாம மேல என்ன செய்யிறதுன்னு நீயே சொல்லேன்!

மீனாட்சி:  அத்தான்..... ஜாதகப் பொருத்தம் பிள்ளை வீட்டில மட்டும் பாத்தா போதாது .... பொண்ணு  வீட்டார் நாமும் பாக்கணும்... அதைப் பார்த்தப்புறம் மேல யோசிக்கலாம்...

மூர்த்தி:  நாகராஜா.... மீனாட்சி சொல்றதும் சரின்னு எனக்குப் படறது

நாகாராஜன்:  ஒகே அத்தான் ...  ஜாதகத்தை உடனே வரவழைக்கிறேன்!
(கேட்டுக் கொண்டே வேம்பு வருகிறான்)

வேம்பு: (சந்தோஷத்துடன்) டாட்.... உங்க கையில ஸ்வீட்டு .... வாயில ஜாதகத்தைப் பத்தி பேச்சு .... என் கல்யாணத்தைப் உனக்கு எவ்வளவு அக்கறை!  டாட்.... ஜாதகம்னு சொன்னே இல்ல?  என்னோட கிர் கிர் கிரி ஜாதகத்தை வரவழைச்சு தரேன்....  ஆனா ஒன்னு... அவ செவ்வாய் கிரகத்துப் பொண்ணு, செவ்வாய் தோஷம் இருக்குன்னு கலாட்டா பண்ணக் கூடாது!

நாகராஜன்:  அப்படி நான் பண்ண மாட்டேண்டா கண்ணு..... அவளுக்கு செவ்வாய் தோஷம் ஒன்னு தானே.... உனக்கு பூமியில இருக்க அத்தனை தோஷமும் இருக்கேடா!
(வேம்பு அவரை முறைக்கிறான்)

விசாலம்: ஏண்டா   வேம்பு... உன்னோட   கல்யாணத்துக்கு எங்களையெல்லாம்  ஆகாயக்  கப்பல்ல  செவ்வாய்க்கு அழைச்சிகிட்டுப் போறதா சொல்றே.... நல்ல  மாதிரி  கப்பல்ல அழைச்சிகிட்டு போகப்படாதா? ஏன்  நாசக்காரக் கப்பலை  ஏற்பாடு பண்ணே?

வேம்பு:  ஐயோ பாட்டி... நாசமும் இல்ல மோசமும் இல்ல... அது நாசா விஞ்சானிங்க கப்பல்!  கோபால் சார்...  கப்பல்ல இந்த செவ்வாய் மாப்பிள்ள  போறதால,  brakefast  என்ன  தெரியுமா?    இட்லி, தோசை...தொட்டுக்க என்ன தெரியுமா? கிண்ணத்தில.....

கோபால்:  (பதறியபடி)   தொட்டுக்க வேணாம்... வேணவே வேணாம்.... நான் அப்படியே சாப்பிடுவேன்!
                                                                                            திரை - மறுபடி விலகும்


  காட்சி     9:


(அதே இடம்.... கோபால் பேப்பர் படிக்க, மீனாட்சி ஹாலைப் பெருக்குகிறாள்)

கோபால்: (தனக்குள்) மூர்த்தி குளிக்கப் போயிட்டான்...விசாலம்  பொழக் கடையில  வேலைகாரியோட வம்பு பேசிகிட்டிருக்கா..... இதான் சரியான டைம்... மீனாட்சிக்கும் நாகராஜனுக்கும் ஏன் ஒத்துப் போகலேன்னு தெரிஞ்சுக்கணும்! (உரக்க) மீனாட்சியம்மா....எனக்கு ஒரு விஷயம் புரியலை...

மீனாட்சி: (குறுக்கிட்டு)  நீங்க blogg படிக்கிறவங்களுக்கு சொன்னது என் காதிலேயும் விழுந்தது.... எனக்கும் என் புருஷனுக்கும் ஏன் ஒத்துப் போகலைன்னு உங்களுக்கு தெரியணும் ... இதானே?

கோபால்: ஹி , ஹி ...ஆமாம் மீனாட்சியம்மா.... நாகராஜனைப் பாத்தா குடிகாரன், கஞ்சா அடிக்கிறவன், பொம்பளை பொறுக்கி ... இப்படி எதுவும் இல்லியே?

மீனாட்சி:  அதையெல்லாம் விட மோசம்.... குடும்ப பாசம், பந்தம் எதுவுமில்லாத ஆசாமி என் புருஷன்..... பணம், பணம்னு அலைஞ்சு, குறுக்கு வழியில சேர்த்த அதை, கோணல் வழியிலேயே கோட்டை விட்ட கோமாளி.... என் சொத்து மொத்தம் அந்த மனுஷனால தான் அழிஞ்சிது.... இப்ப, அந்த ஆளு வந்திருக்கிறதும் தன் குடும்பத்துக்காக இல்ல, ஏதோ சுய நலத்தோடதான்!

கோபால்:  மீனாட்சியம்மா... உன் புருஷன் தன்னோட பழைய அனுபவங்களை ஒரு பாடமா எடுத்துகிட்டு திருந்தியிருக்க சான்ஸ் இருக்கே... அதில்லாம, இப்ப பெரிய கம்பெனியில நல்ல ஹோதாவில இருக்காரு... அவரோட பிளாட்டுக்கு நான் கூட போயிருந்தேன்.... அமர்க்களமா இருக்காரு.... கூட உன் பையன் வேம்புவும் சேர்ந்துட்டான்... இன்னும் என்னம்மா வேணும்?

மீனாட்சி: அப்பனும் பிள்ளையும் ஒரே குட்டையில ஊறின மட்டைங்க!  அவங்க டம்பம் ரொம்ப நாள் நிக்காது...
கோபால்:  சரி... இருந்திட்டுப் போகட்டும்.... ஆனா, வீணாவுக்கு வந்திருக்கிற ஜமீன் வரன் ரொம்ப உசத்தியாச்சேம்மா! ஏன் நீ அதை தட்டிக் கழிக்கப் பாக்கிறே?

மீனாட்சி: ஏன்னா, வீணா நான் பாத்து பாத்து வளர்த்த குழந்தை.... முழுசா விசாரிக்காம, மொதல்லயே தலையை ஆட்டிட மாட்டேன்!
(வீணா உள்ளே நுழைகிறாள்)

வீணா:  மாமி.... நான் காலேஜுக்கு போயிட்டு வரேன்....

கோபால்:  வீணா .... நாங்க உன் கல்யாணத்தைப் பத்திதான்
பேசிக்கிட்டிருக்கிறோம்...

வீணா:  ராத்திரி என் அப்பா, அம்மா கூட சொன்னாங்க.... மாடியில குடியிருக்கிற திவாகர் ஜமீன் பரம்பரையாம் .... அவரோட அப்பா கல்யாணம் பேச வர்றாராம்.... மீனாட்சி மாமி... நான்தான் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவே இல்லியே?

கோபால்:  இத பாரும்மா வீணா.... என்னைக்காவது ஒரு நாள் நீ இன்னொருத்தனோட குடித்தனம்  பண்ணித்தான் ஆகணும்! அதுக்கு நேரம் வந்தா தள்ளிப் போடக் கூடாதம்மா

வீணா:   அப்பாவும் இப்படியேதான் சொல்றார்.... ரெண்டில ஒன்னு சொல்லும்மான்னு கேக்கிறார்

மீனாட்சி:  பார்த்தியா.... இப்படி நெருக்கடியெல்லாம் வருது .... பரத் நமக்கு ரொம்ப  நல்லா தெரிஞ்ச பையன்... உறவுக்காரப் பையன்../.. நல்லவன்னா அப்படி நல்லவன்... அவன்தான் உனக்கு சரியான ஜோடின்னு எத்தனையோ தரம் சொல்லியிருக்கேன்.... நீ தான்  தலையை ஆட்டல

வீணா:  ஆனா மாமி... பரத் தனக்கு நல்ல வேலை கெடைக்கிற வரைக்கும் கல்யாணத்தைப் பத்தி யோசிக்க மாட்டேன்னு சொல்லிட்டானே?

மீனாட்சி:  ம்.. இப்படி ரெண்டு பெரும் குழம்பி கிட்டே இருங்க... இதனால என்ன ஆச்சு.... காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொத்திக்கிட்டுப் போகப் பாக்கிறான்!  நான் விட மாட்டேனே!

வீணா:. மாமி நான் சின்ன பொண்ணு... எனக்கு எது நல்லதுன்னு நீயே அப்பா கிட்ட பேசி முடிவு பண்ணு... ப்ளீஸ்.... நான் கெளம்பறேன் (போகிறாள்)

கோபால்:  மீனாட்சியம்மா ... பரத்துக்கு வீணாவை கட்டிக் குடுக்க நீங்க ஆசைப் பட்டது நியாயம்தான்.... ஆனா, உசத்தியான சம்பந்தத்தை விட்டுட்டு சாதாரண இடத்தில பொண்ணை  தள்ளி விட்டிட்டாங்களேன்னு  நாலு பேர் மூர்த்தியை குத்தி காம்பிக்க மாட்டாங்களா?

மீனாட்சி:  நீங்க கோழி கோபால்னு பேர் வச்சிக்கிட்டு என்ன பிரயோஜனம்?  வந்திருக்கிறது நெஜமாவே ஒசத்தியான வரன்தானான்னு நல்லா கெளரிப் பாத்திட்டு அப்புறம் சொல்லுங்க!
(கோபால் தலையச் சொறிந்து கொள்கிறார்)

                                                                                  திரை - மறுபடி விலகும்

No comments:

Post a Comment