Wednesday, May 15, 2013

கடைசிப் பந்து - நாடகம் - நான்காம் பகுதி

காட்சி 10:

(அதே ஹால்.... விசாலமும், கோபாலும் இருக்க, மூர்த்தியும் நாகராஜனும் நுழைகின்றனர்)

மூர்த்தி:  அப்பாடா..... என்ன வெய்யில் (உரக்க) மீனாட்சி, கொஞ்சம் குடிக்க தண்ணி குடும்மா
 
விசாலம்:  ஏங்க ... போன காரியம் என்ன ஆச்சு.... அதை சொல்லுங்க...

மூர்த்தி:  நல்ல சேதிதான்.....  ஜமீன்தார் பிள்ளை திவாகரோட ஜாதகமும் வீணா ஜாதகமும் அருமையா பொருந்தறதுன்னு நம்ம ஜோசியரும் சொல்லிட்டார் (மீனாட்சி தண்ணீர் டம்பளருடன் நுழைகிறாள்)

விசாலம்:  மீனாட்சி.... இப்ப உனக்கு திருப்தி தானேம்மா? (மீனாட்சி ஒன்றும் பேசாமல் திரும்பிப் போகிறாள்)

நாகராஜன்:  நம்ம பக்கத்திலேயும் ஜாதகப் பொருத்தம் பார்த்தாச்சுன்னு ஜமீன்தார் கிட்ட நான் போன்ல  சொல்லிட்டேன்.... அவருக்கு அப்படி ஒரு சந்தோஷம்.... ஒரு வேலையா பெங்களூர் ஏர்போர்ட்ல இறங்கினவர், உடனடியா சென்னைக்கு ப்ளைட் பிடிச்சிட்டார்....

கோபால்:  ஓஹோ.... மேற்கொண்டு சம்பந்தம் பேசலாம்னு முடிவு செஞ்சிருப்பார் !

நாகராஜன்:  ரொம்ப சரியா சொன்னீங்க.... ஜமீன்தாருக்கு எந்தக் காரியத்தையும் உடனடியா முடிச்சாகணும்.... இப்ப ஏர்போர்ட்டிலேந்து இங்க கார்ல வந்துகிட்டிருப்பார்.... (கார் ஹார்ன் ஒலி கேட்கிறது)  அவருக்கு நூறு ஆயுசு.... வந்து எறங்கிட்டார்! (உரக்க) முதலாளி.....  வாங்க (நாகராஜன் வெளியே போக, சாதாரண ஜிப்பா அணிந்த ஒருவர் உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்கிறார்...  கோபாலும் மூர்த்தியும் அவரை உதாசீனம் செய்து, பய பக்தியுடன் கை கட்டிக் கொண்டு வாயிற் பக்கம் பார்க்கின்றனர்)

கோபால்: ஏன்டா மூர்த்தி.... ஜமீன்தார்னா கிரீடம், கிரீடத்து மேல மயில் இறகு வச்சிருப்பார்.... வாசப் படி இடிக்குமேடா?

மூர்த்தி:  அதையெல்லாம் ஜமீன் சிப்பந்திங்க பாத்துப்பாங்க... ஒருத்தர் கிரீடத்தை வாங்கி வச்சிப்பார்.... இன்னொருத்தர் ஜமீன்தார் பின்பக்கம் பொரளுர அங்கியை தாங்கிப் பிடிச்சுப்பார்.... ஒருத்தர், முன்னாடி சிவப்பு கம்பளத்தை விரிச்சுப் போடுவார்!

வந்தவர்:  உங்களில, மூர்த்தி யாரு?

மூர்த்தி:  நான் தான்... ஆந்திராவிலேந்து ஜமீன்தார் வரப் போறார்.... நீங்க?   .... ஜமீன்தார் பராக் பராக்னு சொல்லப் போறீங்களா!

வந்தவர்:  பராக்னு சொல்ல மாட்டேன்.... பான் பராக் போடுவேன்....
நீங்க சொன்ன ஜமீன்தார் ஜகந்நாதன்  நான் தான்!

(நாகராஜன் பழத் தட்டுடன் உள்ளே அவசரமாக வருகிறார்)
நாகராஜன்:  மூர்த்தி அத்தான்... இவர் தான் என்னோட முதலாளி ஜமீன்தார் ஜகந்நாதன்... கார்லேந்து பழம், பூவை எடுத்திகிட்டு வரச் சொன்னார் !

மூர்த்தி:  மன்னிக்கணும்.... ஜமீன்தார் இந்த ஜிப்பாவில வருவீங்கன்னு எதிர்பார்க்கலே!

ஜகன்னாதன்: (பழத் தட்டை குடுத்தபடி) இந்தாங்க.... என்னோட ஜமீன் கெட்டப்பெல்லாம் என்னோட ஆந்திரா பங்களாவில்தான்.... மத்தபடி வெளியில இப்படி சிம்பிளா தான் வருவேன்!

மீனாட்சி:  அதுவும் நல்லதுதான்.... வித்தியாசமா வந்தா ஏதோ ஷூட்டிங் நடக்குதுன்னு கும்பல் சேரும்!..
.
விசாலம்:  ஏங்க ... வந்திருக்கிற பெரியவரை என்ன சாப்பிடறீங்கன்னு கேளுங்க!

ஜகந்நாதன் கேக்கவே வேணாம்... மாத்திரை சாப்பிடப் போறேன்.... தண்ணி குடுங்க!
(மீனாட்சி தண்ணீர் தர...)

ஜகந்நாதன் :  இதை நான் விளையாட்டுக்கு சொல்லல.. மாத்திரையாலதான் நான் பொழச்சிகிட்டிருக்கேன் ... சீக்கிரமா என்னோட பையன் திவாகருக்கு கால் கட்டு போட்டு, என்னோட கோடிக் கணக்கான சொத்துக்கு ஜமீன் வழக்கப்படி என் பேரப் பிள்ளை வாரிசாகணும் ... இதான் என்னோட ஒரே ஆசை... (ஜிப்பாவிலிருந்து எடுத்து) இந்த பென் டிரைவ் என்னோட ஜமீன் பரம்பரையோட எல்லா விவரமும் இருக்கு.... எனக்கு உங்க சம்பந்தம் ரொம்ப பிடிச்சிருக்கு...அந்தஸ்து ஒரு பிரச்சினையே இல்லே....நீங்களும் எல்லா விவரத்தையும் நிதானமா பார்த்திட்டு ஒரு நல்ல முடிவுக்கு வாங்க.... கல்யாணத்தை பத்தி பேசினாலே பிடி குடுக்காம இருந்த என் பையன் திவாகர், நான் இப்ப இருக்கிற நிலைமையைப் பாத்து, கல்யாணத்துக்கு ஒரு வழியா சம்மதிச்சிருக்கான்... அவன் மனைவியை தீர்மானிக்கிற பொறுப்பை என்கிட்டே விட்டுட்டான்... திவாகர் உங்க வீட்டு மாடியிலதான இருக்கான்எந்த சந்தேகம் வேணும்னாலும் கேளுங்க... அவன் பதில் சொல்லுவான்... இன்னொன்னும் சொல்லிடறேன்... கல்யாணம் சம்பந்தப் பட்ட அத்தினி செலவும் ஜமீன் ஏத்துக்கும்..... நீங்க சீக்கிரம் நல்ல முடிவா எடுத்து உங்க பொண்ணை எங்க ஜமீன் மருமகளா அனுப்புங்க... நான் போயிட்டு வரேன்!
(ஜகந்நாதன் போகிறார்.... கூடவே நாகராஜனும்)

கோபால்:  பார்த்தியா மூர்த்தி... பெரிய மனுஷன்னா இவர் பெரிய மனுஷன்... இரத்தின சுருக்கமா, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா சொல்லிட்டுப் போறார் பாரு!

மீனாட்சி:  அவர் பெரிய மனுஷராகவே இருந்திட்டுப் போகட்டும்....ஏன் உச்சாணிக் கிளையிலேருந்து இறங்கி வந்து இங்க பொண்ணு கேக்கணும்?

விசாலம்:  மீனாட்சி.... இப்படி தொட்டதுக்கெல்லாம் சந்தேகப் பட்டா எப்படிம்மா?

மூர்த்தி: அதானே?  மீனாட்சி... நீ உன்னை மாத்திக்கணும்... இப்ப, நாகராஜன் கூட ஆளே மாறி நல்லபடியா இருக்கான்..... அவனோட சேர்ந்து குடும்பம் நடத்தி சந்தோஷமா இருக்கிற வழியை பாரும்மா....

மீனாட்சி:  (கண் கலங்கிய படி) இத பாருங்க மூர்த்தி அத்தான்.... நான் என் புருஷனை நம்பறதா இல்ல.... இந்த வீட்டில நான் இருக்கிறது உங்களுக்கு சங்கடமா இருக்குன்னா, சொல்லுங்க... நான் எங்கேயாவது போயிடறேன்...

மூர்த்தி: (ஆதுரத்துடன்) அடடே... நான் அந்த அர்த்தத்தில பேசல மீனாட்சி..... நீ நல்லபடியா இருக்கனுங்கிரதுதான் எங்க ஆசை... நீ ஏன் வெளியில போகணும்... இது உன் வீடும்மா!

விசாலம்:  மீனாட்சி... இந்த ஜமீன் வரனை என்ன பண்ணலாம்னு சொல்லு.... ஜாதகப் பொருத்தம் சரியா இருக்குன்னு தெரிஞ்சு போச்சு....

மீனாட்சி: ஜமீன்தார் குடும்பத்தை பத்திய தகவலை டீவீயில போட்டுப் பாத்து தெரிஞ்சிகிட்டா பத்தாது.... அவங்க ஊருக்கே போயி, அக்கம் பக்கத்தில தீர விசாரிக்கணும்.... மாடியில இருக்கிற ஜமீன்தார் பிள்ளை திவாகர் அமெரிக்காவில எப்படி இருக்கிறார்னு விசாரிக்கணும்...

நாகராஜன்:  (வந்தபடி)  மீனாட்சி..... நான்தான் ஜமீன் மாளிகையில பத்து வருஷம் இருந்திருக்கேனே?  விசாரிக்க என்ன இருக்கு?

மீனாட்சி: வேலிக்கு ஓணான் சாட்சியா?  எல்லாம் நாங்க விசாரிச்சிக்கிறோம் (உள்ளே போகிறாள்)

கோபால்:  பலே... நாகராஜன் நல்லவனா, கெட்டவனாங்கிர சஸ்பென்ஸ்ஸோட டிராமா போறது.... ஒகே... நான் வெட்டியாதான இருக்கேன்? ஆந்திரா பக்கம் போய்  ஜமீன் விஷயத்தை ஒரு கிளறு கிளறிட்டு வந்தா என்ன!

                                                                                   /திரை - மறுபடி விலகும்/

காட்சி 11:


(அதே ஹால்..... வீணா படித்துக் கொண்டிருக்க, பரத் நுழைகிறான்)

பரத்: வீணா.... ஒரு குட் நியூஸ்....  .டி கம்பெனிக்கு நேத்தைக்கு இண்டர்வியூ போயிட்டு வந்தேன்.... அனேகமா சலெக்ட் ஆகிடுவேன்..... ஆரம்பத்தில முப்பதாயிரம் ரூபா தர்றதா சொல்லியிருக்காங்க!

வீணா: (உற்சாகத்துடன்)  கங்க்ராட்ஸ் பரத்... ஸ்வீட் எங்க?

பரத்:  வேலைக்கு ஆர்டர் வந்ததும் மொதல் ஸ்வீட் உனக்குதான் வீணா... இதை பாரு (பேப்பரை நீட்டுகிறான்)

வீணா: ஹை .... பெரிய கம்பெனி.... நல்ல சம்பளம் தருவாங்க.... பரத்.... நீ கட்டாயம் ஜாயின் பண்ணிடு.... இருந்தாலும் எனக்கு ஒரு சின்ன வருத்தம் பரத்.... இப்ப நீ செஞ்சிகிட்டிருக்கிற கிரிக்கெட் வேலையை, சம்பளம் கம்மியா இருந்தாலும், நீ எவ்வளவு நேசிக்கிறேன்னு எனக்கு தெரியும்...

பரத்:  என்ன செய்யிறது வீணா.... ஒன்னு பாத்தா இன்னொன்னு இருக்காது.... இருந்தாலும், நான் ஒரு கிரிக்கெட்  ரசிகன், அனுபவசாலின்னு இண்டர்வியூவில சொன்னேன் வீணா... எங்க கம்பெனி கிரிக்கெட் டீம்ல நீங்க சேருங்கன்னு சொல்லிட்டாங்க!
(மீனாட்சி வருகிறாள்)

பரத்:  மாமி... நல்ல சேதி.... எனக்கு ஒரு நல்ல வேலை கெடைக்கப் போகுது!

மீனாட்சி: (சந்தோஷத்துடன்)  அப்படியாடா பரத் ... நீ ஒசத்தியா வருவேன்னு எனக்கு தெரியும்.... இனிமே நீ எந்த சாக்கு போக்கும் சொல்லி தப்பிக்க முடியாது பரத்... நீயும் வீணாவும் பக்கத்து பக்கத்தில நிக்கிறதை பாத்தாலே என் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குடா .... நீங்க ரெண்டு பேரையும் மாலையும் கழுத்துமா பார்த்தா எனக்கு இன்னும் திருப்தியா இருக்கும்!

பரத்: (தயங்கியபடி) மாமி... புது வேலை வரப் போறது எப்போன்னு நிச்சயமா தெரியணும் ... அதுக்கப்புறம், வர்ற பணத்தில கொஞ்சம் சேர்த்து நான் ஸ்டெடியாகனும்  ... அதுக்கு கொஞ்ச காலம் ஆகுமே மாமி?

மீனாட்சி:  புரியாம பேசாத பரத்.... அய்யர் வர்ற வரை அமாவாசை காத்திருக்காது... இப்பெல்லாம், முன்னாலேயே அட்வான்ஸ் புக்கிங் பண்ணாம, கடைசி நிமிஷத்தில எதுவும் கெடைக்காது! வெளியூர் போகணும்னா கூட ஆறு மாசம் ஒரு வருஷம் முந்தியே ரிசர்வ் பண்றதில்லியா? அத மாதிரி, உங்க கல்யாணத்தை நிச்சயம் பண்ணிடலாம்டா... நடுவில, நீ வேலையில நல்ல ஹோதாவில வந்திடலாம்... வீணாவும் மேல் படிப்பை முடிச்சிடலாம்... இதில யோசிக்கிறது நல்லதில்லே ... இந்த ஜமீன் சம்பந்தம் குறுக்க வருதில்ல?

பரத்:  மாமி... நான் வீணாவை கல்யாணம் பண்ணிகிட்டாலும், இல்லேன்னாலும் உறவுக்காரன்தானே? வீணா ஜமீன் குடும்பத்தில மருமகளா போறது நமக்கெல்லாம் பெருமையான விஷயம்தான்!

மீனாட்சி: (எரிச்சலுடன்) அட போடா பைத்தியக்காரா... உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருக்கிற அந்நியோன்யம் தான் குடும்ப வாழ்க்கைக்கு ஒசத்தி ...  ஜமீன் சம்பந்தம்கிறது ஒய்யாரக் கொண்ட மாதிரி.... அதுக்குள்ள, ஈரும் பேனும் இருக்கிறது நல்லா சோதிச்சு பாத்தா தெரியும்!

வீணா:  மாமி.... எனக்கு குழப்பமாகவும் இருக்கு, பயமாவும் இருக்கு!

மீனாட்சி:  அப்ப  நான் சொல்றபடி கேளுங்க.... 'நாங்க ரெண்டு பெரும் காதலிக்க ஆரம்பிச்சிட்டோம்... வாழ்க்கையிலும் ஒன்னா சேர்ரதுன்னு தீர்மானிச்சிட்டோம்'னு எல்லார் எதிரேயும் சொல்லிடுங்க! மத்ததை நான் பாத்துக்கிறேன்!

வீணா: (பதறியபடி)  ஐயோ மாமி,,,, சாதரணமாவே அப்பா எதிர பேச யோசிப்பேன்.... லவ், கல்யாணம்னு பேச நெனைச்சா, நாக்கு ஸ்ட்ரைக் பண்ணிடும்.... நான் அழுதுடுவேன்!

பரத்:  என்னோட கதையும் அப்படித் தான் மாமி..... ஏற்கெனவே என் அப்பாவுக்கும் வீணாவோட அப்பாவுக்கும் வருஷக் கணக்கா பேச்சு வார்த்தை இல்ல.. இப்ப, நான் எடக்கு மடக்கா லவ், அது, இதுன்னு சொல்ல ஆரம்பிச்சா என்ன நடக்குமோ? இந்த வீட்டுக்குள்ள நான் சகஜமா வந்து போக முடியுமோ முடியாதோ?

மீனாட்சி: என்ன பசங்களோ நீங்க.... நான் ஒன்னு கேக்கறேன் பரத்.... மூர்த்தி அத்தானும், விசாலம் அண்ணியும் ஜமீன் சம்பந்தத்தை பெரிசா நெனைக்கிரா...ஆனா ஜமீன் விஷயத்தில ஏதோ வில்லங்கம் இருக்குன்னு நான் சந்தேகப் படறேன்... அப்படியிருந்தா, வீணாவோட வாழ்க்கை கட்டாயம் பாழாப் போயிடுமா இல்லியா?

பரத்: அய்யய்யோ ... அப்படி நடக்க விடக்கூடாது மாமி....  நான் ஏதாவது செய்ய முடியுமா மாமி?

மீனாட்சி:  திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்கார்?  யார் எது சொன்னாலும் அது சரியான்னு சோதிச்சு பாத்து தெரிஞ்சுக்கணும்....  முக்கியமா, அந்த திவாகர் அமெரிக்காவில எப்படி இருக்கான், எப்படிப்பட்டவன்னு நல்லா விசாரிக்கணும்!

பரத்:  சரி மாமி... என்னோட படிச்சவங்க சில பேர் இப்போ அமெரிக்காவில இருக்காங்க... அவங்க மூலமா ஏதாச்சும் தகவல் கிடைக்கிறதான்னு பாக்கிறேன்

                                                                          /திரை - மறுபடி விலகும்/

காட்சி 12:


(அதே இடம்.... மூர்த்தி, விசாலம் இருக்க, நாகராஜன் கையில் செக்குடன் வருகிறார்)

நாகராஜன்:  மூர்த்தி அத்தான்.... இந்தாங்க,  பிடிங்க செக்கை.... ஜமீன்தார் அனுப்பிச்சிருக்கார்!

மூர்த்தி: (வாங்கிப் பார்த்துவிட்டு)  என்னப்பா இது நாகராஜா... மூணு லட்சத்துக்கு செக்! அதுவும் என் பேர்ல?

நாகராஜன்:  இங்கதான் என் முதலாளி நிக்கிறார்! வீணா-திவாகர் நிச்சயதார்த்த செலவுக்கு பணம் அனுப்பியிருக்கிறார் அத்தான்! அடுத்த மாசத்தில நாலு நல்ல நாள் பாத்தும் எழுதி அனுப்பியிருக்கிறார்! உங்க சவுகரியப்படி ஒரு நாளில நிச்சயதார்தத்தை கிராண்டா நடத்தத் தான் இந்தப் பணம்.... அதுக்கப் புறம் பாருங்க...ஆந்திரா ஜமீன் பங்களாவில எப்படி ரொம்ப விமரிசையா கல்யாணம் நடக்கப் போகுதுன்னு!  வீணாவுக்கு தடபுடல் கல்யாணம் மட்டுமல்ல, அவளுக்குப் பொறக்கப்போற குழந்தைக்குதான் எல்லா சொத்தும் சேரப் போகுது!

விசாலம்:  என்னங்க... இனியும் நாம யோசிச்சா, நம்மளை முட்டாள்னு அக்கம்பக்கத்தில கேலி செய்வாங்க!

மூர்த்தி:  நீ சொல்றதும் சரிதான்... எதுக்கும் நம்ம சோசியர்கிட்ட நிச்சய தேதியை சரி பாத்துக்குவோம் 

(வேம்பு நுழைகிறான்)

வேம்பு:  ஹாய் மூர்த்தி அத்தான்... வீணாவோட நிச்சயதார்த்தம் பத்திதான பேசறீங்க?  டாட் சொன்னார்.... அந்த பங்க்ஷனுக்கு என்னோட கிர் கிர் கிரிஜா, அவ அப்பா, அம்மாவோட வரணும்னு ஆசைப் படறா .... ஒகேவா ?

விசாலம்: தாராளமா வந்து விருந்து சாப்பிட்டுட்டு போகட்டும்... ஆனா, செவ்வாய் மனுஷா நம்ம கண்ணுக்கு தெரிய மாட்டங்களே!.... வந்து என்ன பண்ணப் போறாங்க?

வேம்பு:  ஓல்ட் லேடி ... என்னோட வருங்கால மாமனார் கர் கருக்கு பிசினஸ் மைண்டு ... செவ்வாய் கிரகத்தில புகை, தூசு, சாக்கடை, கொசுக் கடி எதுவும் கிடையாது!  நம்ம ஊர் பத்தி என்னோட கிர் கிர் கிரி அப்பா கிட்ட சொன்னாளா.... அவர் ஒரு பெரிய பிசினஸ் ஐடியா பண்ணி இங்க வரப் போறாரு!

மூர்த்தி: என்ன செய்யப் போறார்? ஏதாவது மருந்து கொண்டாந்து பூமியை சுத்தம் செய்யப் போறாரா உன் மாமனார்?

வேம்பு: சுத்தம் எப்படி ஆகப் போகுதுன்னு சத்தம் போடாம கேளுங்க.... மருந்து மாயம் எதுவுமில்ல... நம்ம ஊரு கூவம் ஆறு, குப்பை கூளம், கொசுக்கடி எல்லாம் என்னோட கிர் கிர் கிரிக்கு ரொம்பவே பிடிச்சிப் போச்சு!  இப்ப, கொசுக் கடி, சாக்கடை நாத்தம் இல்லாம அவளால, செவ்வாயில தூங்கவே முடியலையாம்... ரொம்ப கஷ்டப் படரா!

விசாலம்: (வெறுப்புடன்) சரியான நாத்தம் பிடிச்ச பொண்ணா இருக்காளே!  நீ எப்படிடா செவ்வாயில அந்தப் பொண்ணோட குடித்தனம் செய்யப் போறே!

வேம்பு:  இந்த விஷயத்தில்தான் என்னோட மாமனார் கர் கர் ஐடியா வருது!  பூமியில நாத்தம்னு நாம நினைக்கிறதெல்லாம் செவ்வாயில வாசனையா தெரியுது!  அதனால, இங்க நாத்தம் அடிக்கிற ஐட்டங்களை நான் காண்ட்ராக்ட் எடுத்து காசு செலவில்லாம வாங்கிடுவேன்....   அதை என் மாமனார் செவ்வாய்க்கு கொண்டு  போயி கொள்ளை கொள்ளையா சம்பாதிச்சிடுவார்!

மூர்த்தி: நாத்தம் பிடிச்ச பேமலி .. கொள்ளைக்கார பேமலி... பேஷ்... பேஷ்

விசாலம்: எப்படியோ.... அத்தினி வேஸ்ட்டும் பூமியிலேந்து போயிடும்னு சொல்லு!

வேம்பு: ஆமா... நான் யாருன்னு இப்ப புரிஞ்சுதா!

மூர்த்தி:  ரொம்ப பெருமைப் பட்டுக்காதே... இவ  வேஸ்ட்னு  சொன்னது உன்னையும் சேர்த்து தான்!
(வேம்பு அவரை முறைக்கிறான்... அப்போது நாகராஜனின் செல் போன் ஒலிக்க, அவர் அதை காதில் வைத்து மெதுவாகப் பேசுகிறார்)

நாகராஜன்:  (வேம்புவை தனியே அழைத்துப் போய்)  ஏன்டா வேம்பு... மூர்த்தி அத்தானுக்கு ஏதாச்சும் குரியர் வந்திச்சா?  நீதானே வாங்கி வைப்பே?

வேம்பு:  ஆமா டாட் ... அரை மணி முந்தி ஒரு கவர் வந்திச்சு.... அதோ, டேபிள் மேல வச்சிருக்கேன் பாரு
 
நாகராஜன்: (மெதுவாக) நல்ல வேளை ... அத்தான் அதை இன்னும் பிரிக்கலெ  (உரக்க)  அத்தான்... ராகு காலம் வர்றதுக்குள்ள, செக்கை பூஜை ரூமுக்கு கொண்டு போய் வீணா கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்க பெருமாளை வேண்டிக்குங்க.... அண்ணி.... நீங்களும் போங்க... சாமி ஸ்தோத்திரம் சொல்லுங்க
(மூர்த்தியும் விசாலமும் உள்ளே போகிறார்கள்.... நாகராஜன் அவசரமாக மேஜை மீதிருந்த குரியர் கவரை பிரித்துப் பார்க்கிறார்)

வேம்பு:  (ஆச்சயர்த்துடன்)  டாட் .... மூர்த்தி அத்தானுக்கு வந்த கவர்பா! நீ ஏன் பிரிக்கிற?

நாகராஜன்: (தாஜா பண்ணியபடி) அதில்லடா கண்ணா... இது ஜமீன்தார் ஊரிலேந்து வந்திருக்கிற லெட்டர் .... தெலுங்கில எழுதியிருக்குன்னு எனக்கு போன் வந்திச்சு...  அத்தானுக்கு தான் தெலுங்கு தெரியாதே? ம்.... ஒன்னு செய்யிறேன் (மேசையிலிருந்து பேப்பரையும் பேனாவையும் எடுத்து மடமடவென்று எழுதி கவரில் அதை மாற்றி வைத்து ஒட்டி வைக்கிறார்.... மூர்த்தியும் விசாலமும் நுழைகிறார்கள்)

நாகராஜன்:  மூர்த்தி அத்தான்... ஜமீன் ஊரிலேந்து உங்களுக்கு லெட்டர் வந்திருக்கு பாருங்க!

மூர்த்தி: (அதை எடுத்தபடி)  ஜமீன்தார் எதுக்கு லெட்டர் போட்டிருக்கார்?

நாகராஜன்:  ஜமீன்தார் எழுதலே.... அந்தக் கிராமத்து பஞ்சாயத்து பிரெசிடென்ட் ராமையா போட்டிருக்கிறார்.... அவர் பேரு கவர் மேல தெலுங்கில எழுதியிருக்கு!

வேம்பு:  ஆனா, உள்ள இருக்கிறது தெலுங்கு லெட்டர் இல்லே! அது...

நாகராஜன்:  (அவசரமாக இடைமறித்து):  ஆமா... அந்த ராமையா எனக்கு போன் பண்ணி சொன்னார்... உங்களுக்கு தெலுங்கில எழுதினா தெரியாதே... அதான் இங்கிலிஷ்ல இருக்கு!

மூர்த்தி:  (படித்துப் பார்த்துவிட்டு)  நாகராஜா.... அந்த ராமையா, ஜமீன்தாரை ஓஹோன்னு புகழ்ந்து எழுதியிருக்கார்.... உங்க பொண்ணு ஜமீன் மருமகளா வர்ற ரொம்பவே புண்ணியம் செஞ்சிருக்கனும்னு ராமையா எழுதியிருக்கார்!

நாகராஜன்:  அடடே... அப்படியா எழுதியிருக்கு!

வேம்பு: (ஆச்சர்யத்துடன்)  டாட் ... என்ன இப்படி ரியாக்சன் குடுக்கிறீங்க!  நீங்கதான...

நாகராஜன்: (அவன் வாயைப் பொத்தி)  எழுதினதை ராமையா போன்ல சொல்லிட்டாரே... எதுக்கு ஆச்சர்யப் படறீங்கன்னு கேக்கறான்....

விசாலம்:  இனிமேலும் மசமசன்னு நிக்காதீங்க.... மேல ஆக வேண்டியதைப் பாருங்க!

(நாகராஜன் வேம்புவை தள்ளிக்கொண்டு வெளியே போகிறார்)
                                                                            /திரை - மறுபடி விலகும்/

காட்சி 13:


(அதே ஹால்.... மூர்த்தி, விசாலம் இருக்க, வெளியிலிருந்து மீனாட்சி நுழைகிறாள்)

மூர்த்தி:  வாம்மா மீனாட்சி.... நீ கோவிலுக்கு போய் அர்ச்சனை செஞ்சிட்டு வந்த வேளை , சுப சேதியா வர்ரதும்மா!  ஜமீன்தார் இங்க வந்து பதினைஞ்சு நாள் ஆச்சா... இது வரை தப்பா எதுவும் நம்ம காதில விழல.... இப்ப, அடுத்த மாசம் நிச்சயதார்தத்தை நடத்திக்கலாம்னு ஜமீன்தார் பணத்தை அனுப்பியிருக்கிறார் .... அந்த ஊர் பஞ்சாயத்து ப்ரெசிடெண்ட்டும் ஜமீன்தாரை அப்படி தலையில தூக்கி வச்சு எழுதியிருக்கார்!  நல்ல யோக ஜாதகம் நம்ம வீணாவுதுன்னு இப்ப நல்லாவே புரிஞ்சு போச்சு மீனாட்சி!

மீனாட்சி:  அத்தான்... வீணா உசத்தியா வாழப் போறாங்கிறதில எந்த சந்தேகமும் இல்ல...நிச்சயத்துக்கு இன்னும் நாள் இருக்கே.... அவளுக்கு வரப் போகிற புருஷன் ஸ்ரீராமன் மாதிரி ஏக பத்தினி விரதனா தான் இருப்பான்!

விசாலம்: (சந்தோஷத்துடன்) பார்த்தீங்களா, பார்த்தீங்களா... ஜமீன்தார் பிள்ளை திவாகர் உசத்தியானவன்னு மீனாட்சியே சொல்லிட்டா!

மீனாட்சி:  நான் அப்படி சொல்லலே அண்ணி....நிச்சயதார்த்தம் வரை கொண்டு விட்டிருக்கிற பகவான், வீணாவுக்கு போருத்தமானவனைத் தான் தாலி கட்டவைப்பான்னு சொல்றேன்

(கேட்டுக் கொண்டே கோபால் நுழைகிறார்)

கோபால்:  கல்யாணப் பேச்சு காதில விழறதே மூர்த்தி... இங்க சீக்கிரமா மேள சப்தம் கேக்கும்னு சொல்லு!

விசாலம்:  ஆமா... அதோட, விருந்து சாப்பிட்டு நீங்க விடற ஏப்ப சப்தமும் கேக்கும்!

மூர்த்தி: ஏன்டா கோபால்... உன்னை கொஞ்ச நாளா காணலியே?

கோபால்: என் பொண்டாட்டியோட நிலம் விஷயமா ஆந்திரா பக்கம் போகனுமின்னு சொன்னேனே ஞாபகமில்லியா? போனவன், அப்பிடியே ஜமீன்தார் பங்களாவையும் போய் எட்டிப் பாத்திட்டு வந்தேன்!

விசாலம்:  அதான பாத்தேன்.... ஏதாவது கிடைக்குமான்னு கிளறிப் பாக்காம விட மாட்டீங்களே!

கோபால்:  ஹி , ஹி .... நெஜமாவே வந்திருக்கிற சம்பந்தம் ரொம்ப பெரிய எடம்தான் மூர்த்தி.....ஜமீன் பங்களா, தோப்பு தொறவு இதையெல்லாம் பாத்து பிரமிச்சிட்டுப் போயிட்டேன் ... ஜமீன்தார் நடத்திற ரியல் எஸ்டேட் கம்பெனி உள்பட அத்தினி சொத்தும் இனிமே உன் பொண்ணுக்குத் தாண்டா!  அங்க எனக்கு ராஜோபசாரம்தான் போ! தடபுடல் விருந்து, தட்டில தட்சணைன்னு அசத்திட்டார் ஜமீன்தார்!

மூர்த்தி:  (கடன் நோட்டை எடுத்த படிதட்சணையும் வாங்கினியா!... எவ்வளவு பணம் குடுத்தார் சொல்லு.... நோட்ல எழுதிக்கிறேன்... என் பொண்ணுக்கு வர இருந்ததில கம்மியாயிடிச்சில்ல ?

கோபால்:  தாராளமா எழுதிக்க! மொத்த கடனையும் 'ஜமீன்தார் சம்பந்தி வர்றார்... பராக்.. பராக்'னு  குரல் கொடுத்துகிட்டே அடைச்சிடறேன்!

மீனாட்சி: (கோபத்துடன்) ஏன் கோபால் சார்... பொண்ணு வீட்டு சார்பா அவ்வளவு தூரம் போனீங்களே... மூக்கப் பிடிக்க சாப்பிட்டு வந்து நிக்கிறீங்க..அக்கம்பக்கத்தில விசாரிக்கணும்னு தோணலியா?

கோபால்:  என்னம்மா... இந்த கோழி கோபாலை இப்படிக் கேட்டிட்டே?  எதாச்சும் புதுசா விஷயம் கிடைக்குதான்னு துழாவி துழாவி பாத்தேனே!  ஆனா, அது ஒரு குக்கிராமம்...  இருக்கிற கொஞ்சம் பேரும் படிப்பறிவே இல்லாத தெலுங்கு பேசற ஆசாமிங்க... பஞ்சாயத்து ப்ரெசிடெண்ட்டா இருக்கிற ராமையா என்னோட ஏதோ பேசணும்னு டிரை பண்ணார்... அந்த ஆசாமிக்கும் தெலுங்குதான் தெரியும்!  கடைசியா தட்டு தடுமாறி நம்ம விலாசத்தை கேட்ட மாதிரி இருந்திச்சு... எழுதி குடுத்திட்டு வந்தேன்...

மூர்த்தி:  அந்த ராமையா கிட்டேயிருந்து எனக்கு லெட்டர் வந்தாச்சுடா...  ஜமீன்தாரைப் பத்தி ஆஹா ஓஹோன்னு எழுதியிருக்கிறார்

கோபால்:  கேட்டுக்கிட்டியாம்மா மீனாட்சி... இனிமே என்ன விசாரிக்கிறது?  சம்பந்தத்தை முடிச்சிடுப்பா மூர்த்தி....ஆமா... நான் மாப்பிள்ளை திவாகரைப் உடனே பாத்து கை குலுக்கணுமே!

விசாலம்: (அலுத்துக் கொண்டு)  ஆமா... மாப்பிள்ளை மாடியில இருக்கிராருன்னு பேரு... இங்க இருக்கிற நாங்களே அவரைப் பார்த்து ரெண்டு வார்த்தை பேச முடியலை.... யாரோ 'வாம்மா மின்னலு'ன்னு கூப்பிடற மாதிரி கிர்னு வெளியே போறாரு, கிர்னு மேல போயிடறாரு!

மூர்த்தி:  புரிஞ்சுக்கடி விசாலம்.... மாப்பிள்ளை தன்னோட பிசினசை பார்ப்பாரா, நம்மோட பேசிகிட்டு நிப்பாரா ?

(திவாகர், நாகராஜனுடன் நுழைகிறான்)

திவாகர்:  ஹலோ....

மூர்த்தி:  (பணிவுடன்)  வாங்க மாப்பிள்ளை... உக்காருங்க
 
திவாகர்:  இருக்கட்டும்.... நான் இந்த வீட்டு மாடியில குடி வந்து 21 நாள் ஆகுது...  மொதல் நாள் என்னைப் பாத்தீங்க... அப்புறம், இப்பதான் நான் வந்திருக்கேன்..... ... ஏன்னா... பேச எனக்கு கொஞ்சம் விஷயம் இருக்கு....ம்.... பரத்தையும் வரச் சொன்னேன்... எஸ்... வந்தாச்சு!
(பரத் உள்ளே நுழைகிறான் )

பரத்:  ஹலோ திவாகர் சார்... வரச் சொன்னீங்களே?

திவாகர்:  ஆமா .... என்னை திவாகர்னு கூப்பிட்டா போதும் பரத்.... ஒகே?  என்னோட அப்பா ஜமீன்தார் ஜகன்னாதன் போன் பண்ணி, எனக்கும் வீணாவுக்கும் இன்னும் 15 நாளில கல்யாண நிச்சயம் நடக்கப் போகுதுன்னு சொன்னார்... நான் ஏற்கெனவே, அப்பா நிச்சயம் பண்ற பொண்ணை கட்டிக்கிறதா அவர் கிட்ட ஒத்துக்கிட்டிருக்கேன்!

நாகராஜன்:  மூர்த்தி அத்தான்.... சின்ன ஜமீன்தார் தேங்கா ஒடச்ச மாதிரி, வீணாவை கல்யாணம் செஞ்சிக்க தனக்கு சம்மதம்னு பளிச்சினு சொல்லிட்டார் பாருங்க!

மூர்த்தி:  ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை!

திவாகர்:  இருந்தாலும் ஒரு விஷயத்தை நான் யோசிச்சேன்.. அதைப் பத்தி முக்கியமா பேச வந்திருக்கேன்....  நான் இங்க தங்க வந்தது, கொஞ்ச நாளில என் அப்பா கல்யாண சம்பந்தம் பேச வந்தது, இன்னும் 15 நாளில நிச்சயம் நடக்க இருக்கிறது...  இதனால. உங்க வீட்டில யாருக்காவது ஏதாவது குழப்பம் வந்திருக்க வாய்ப்பு இருக்கு... இல்லியா?

கோபால்:  அதாவது, உங்களை மாப்பிள்ளையா ஏத்துக்க இங்க யாரோ தயக்கம் காட்டுறாங்கன்னு நினைக்கிறீங்களா!

திவாகர்::  ஆமா... அப்படித்தான் எனக்குத் தோணுது!

மூர்த்தி:  மாப்பிள்ளை... உங்களோடது பெரிய சம்பந்தம்... இதை நாங்க எதிர்பார்க்கவேயில்ல... உங்களையும்  முன்னே பின்னே பழக்கமில்லியா ... அதான் ஆளாளுக்கு கொஞ்சம் மிரண்டு போய், இப்ப எல்லாம் சரியாயிடிச்சு....

மீனாட்சி:  அத்தான்... எதுக்கு மூடி மறைக்கணும்.... நான் வெளிப்படையாவே சொல்றேன் தம்பி.... உங்க சம்பந்தம் மட்டும் வராம இருந்திருந்தா, வீணாவுக்கும் பரத்துக்கும் தான் நாங்க கல்யாணம் பேசி முடிச்சிருப்போம்!  ஏன்னா சின்ன வயசிலேந்து பரத் எங்க நிழல்ல வளர்ந்தவன்...  வரப் போற மாப்பிள்ளை எப்படி இருப்பாரோ, தீர விசாரிக்கனுமேங்கிற பயமே இல்லே!

நாகராஜன்:  சின்ன ஜமீன்தார்.... மீனாட்சி சொல்றது வாஸ்தவம் தான்... அதே சமயம், ஒன்னை தெளிவா சொல்லிடறேன்....பரத்-வீணா நடுவில காதல் கசமுசான்னு எதுவுமே இல்லே... உண்மையை சொல்லேம்பா பரத்?

பரத்:  ஆமா அங்கிள்.... நீங்க சொன்னது சரி

நாகராஜன்:  பாத்தீங்களா... நூத்துக்கு நூறு இது பெத்தவங்க நிச்சயம் பண்ற சம்பந்தம்...  அந்தஸ்து, பதவி, சவுகரியமான வாழ்க்கை.. இதையெல்லாம் வச்சு வீணாவைப் பெத்தவங்க, நீங்கதான் மாப்பிள்ளைன்னு தீர்மானம் செஞ்சிட்டாங்க... 15 நாளில நிச்சயதார்த்தம்னும் வந்தாச்சு ... இப்ப, பரத் ஒரு பெரிய வேலையில சேரப் போறான்... கூடிய சீக்கிரம் இவனுக்கு நல்ல வரனா நான் முடிச்சுத் தரேன்!  இதனால, யாருக்கும் மனத் தாங்கல் வர சான்ஸே இல்லேன்னேன்!

திவாகர்: நீங்க ஆயிரம் சமாதானம் சொன்னாலும், எனக்கு ஒரு சின்ன நெருடல் இருக்கு... (மீனாட்சியை கை காட்டி)  இவங்க பரத்தை சின்ன குழந்தையிலேருந்தே தெரியும்னு சொன்னாங்க ... அதாவது என்னைப் பத்தி உங்க யாருக்கும் முழுசா தெரியலை!

மூர்த்தி: மாப்பிள்ளை... மீனாட்சி அந்த அர்த்தத்தில சொல்லலே.... நீங்க தப்பா எடுத்துக்காதீங்க
 
திவாகர்:  கட்டாயம் நான் தப்பா எடுத்துக்கல.... ஆனா, இதை நான் ஒரு போட்டியா எடுத்துக்கறேன்!  நான் பிசினஸ் ஆளு ... போட்டியில்லாத பிசினஸ் எதுவுமில்ல.... அதுவுமில்லாம, அடிப்படையில நான் கிரிக்கெட் ஆசாமி...  பரத்துக்கும் கிரிக்கெட் அனுபவம்  இருக்கு...      வெற்றி, தோல்வியெல்லாம்  எதிர்பாராம கிரிக்கெட்ல வரும்... நம்ம வாழ்க்கையும் கிரிக்கெட் மாதிரிதான்

கோபால்:  மாப்பிள்ளை... இதையெல்லாம் எதுக்கு சொல்றீங்க... நீங்க தான் ஜெயிக்கிற அளவுக்கு வந்தீட்டீங்களே!

திவாகர்:  ஆமா.... கிட்டத்தட்ட...  இருந்தாலும், ஒரு பரபரப்போட ஜெயிச்சா அது எனக்கு ரொம்ப பிடிக்கும்!  கிரிக்கெட்டில கடைசி பந்து இருக்கே... அதோட மகிமையே தனி.... யார் ஜெயிப்பா, யார் தோப்பாங்கறது கடைசி பந்து தீர்மானிக்கும்!  நிச்சயதார்த்தத்துக்கு 15 நாள் இருக்கே, இதுதான் கடைப் பந்து!... இதை வீசப் போறது பரத்.... ஆடப் போறது நான்!  ... யார் ஜெயிக்கிராங்கன்னு பார்த்துடலாம்.... இது ஜாலியான போட்டியாவே எடுத்துக்கலாம்... ஆல் பெஸ்ட்  பரத்! (கை குலுக்கிவிட்டு வேகமாக போகிறான் திவாகர்)

நாகராஜன்:  மூர்த்தி அத்தான்.... மாப்பிள்ளையா வலிய வந்து, கல்யாண விஷயத்தில போட்டிக்கு தயார்னு சவால் விடறார்! இதிலேந்தே தெரியலையா, அவர் சொக்க தங்கம்னு?

மீனாட்சி:  தங்கமா இருந்தாலும் லோகத்தில கண்ணை மூடிக்கிட்டு வாங்க மாட்டாங்க! உரசிப் பாத்துதான் வாங்குவாங்க!

பரத்:  மூர்த்தி மாமா... வீணா ஜமீன்தார் வீட்டு மருமகளாப் போறதுதான் உசத்தி....  போட்டி எதுவும் வேணாம்... விளையாட்டுக்குக் கூட நான்  உங்களுக்கு எந்த தர்மசங்கடத்தையும் குடுக்க நான் விரும்பல மாமா

விசாலம்:  எண்டா பரத்... நெருப்புன்னா வாய் வெந்துடுமா என்ன?  மாப்பிள்ளை என்ன சொன்னாரோ அதை செய்....

வீணா:  ஆமாம் பரத்.... அதிர்ஷ்டம் உன் பக்கம் இருந்தாலும் இருக்கும்....  நீயா நானான்னு ஒரு கை பாத்துடு!

பரத்:  அப்படீங்கிற? ஒகே!

                                                       திரை - மறுபடி விலகும்

3 comments:

 1. Dear Mr Varadhan

  Please provide your email id. I need to contact you regarding drama script. Thanks

  ReplyDelete
  Replies
  1. Dear friend,

   My email id: nithyavaradants@rediffmail.com

   Delete
 2. Thank you.. I sent an email. Pls check

  ReplyDelete