9. நடுநிசிப் பரபரப்பு
சியாமளாவுக்கு
எந்தக் குழப்பமும் இல்லை. கோகுலின் ஆசையை
நிறைவேற்றுவதுதான் அவள் வைத்த போட்டியின் நோக்கம். அதற்கான நேரம் நெருங்கிவிட்டது.
கோகுலுக்கு
உளமாற உதவி புரிபவன் வாசு. ஆனால், கோகுலை அலட்சியம் செய்யும் பாஸ்கருக்குத்தானே தெரியாத ஊருக்கு வழி தெரிந்தது!
”சியாமா” - எதிரே, வழக்கமான புன்சிரிப்புடன் வாசு. எப்படிடா நீ எதையும் இயல்பாக எடுத்துக்கறே!
மனதுக்குள் வியந்தாள் சியாமளா.
“சியாமா...உனக்கு
நெறய சந்தோஷமான விஷயங்களை சொல்லப் போறேன்..இப்போ, கோகுலோட கிருஷ்ணாம்பட்டி நம்ம கண்ணதிரே இருக்கிறதை பாஸ்கர் கண்டு
பிடிச்சிட்டான். அடுத்த கட்டம் என்ன?
இன்னும் மூணு மாசத்தில
கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு மஹாபாரதக் கூத்துக்கு பக்காவா பிளான் போடணும். அதனால, கோகுல், மத்த கிராமப் பசங்க, கரோலின், சாரி மாமா, ஜெயம் நகர் கமிட்டி ஆசாமிங்க எல்லோரையும் வச்சு
மீட்டிங் போட்டேன்.. அத்தனை பேருமே இந்த நிகழ்ச்சியை பெரிய அளவில நடத்தணும்னு
ஆசைப் படறாங்க!”
சியாமளா
உற்சாகமானாள் -
“வாசு..நல்ல
யோசனையாதான் இருக்கு ...ஆனா ஏற்பாடுகளுக்கு பணம் நெறய தேவைப் படுமே?”
“அரசாங்கத்தோட
ஒத்துழைப்போட இந்த நிகழ்சியை நடத்த திட்டம் போட்டிருக்கோம் சியாமா...பாரம்பரிய
கலைகளை வளர்க்க அரசாஙகம் நிதி ஒதுக்கி இருக்கு .. அதில்லாம இது பொது காரியம்...
காலையிலிருந்தே கலை நிகழ்ச்சிகளை ஆரம்பிச்சு ராத்திரி கூத்தை முடிக்கப்
போறோம்...பெரிய மனுஷங்க, கம்பெனிங்கன்னு உதவி
கேக்க ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கு. இன்னொரு முக்கியமான விஷயம்..கிருஷ்ணருக்கு
இங்க கோயில் இருந்திருக்கு.. கிருஷ்ணர் சிலை முன்னாடிதான் கூத்து
நடத்தணும்...அதனால சாரி மாமா, சினிமாக்காரங்க உதவியோட
கிருஷ்ணர் சிலையை தயார் பண்ணப் போறார்!”
சியாமளா
வாசுவைப் பெருமையுடன் பார்த்தாள்.
எவ்வள்வு ஆத்மார்த்த அர்ப்பணிப்புடன் செயல்படுகிறான்! கடவுளே..வாசுவே எனக்குக் கணவனாக அமைய வேண்டும்.
“சியாமா...ஒரு
விஷயம் என்னன்னா.. கோகுலுக்கு இன்னும் முழுசா திருப்தி வரல..’கிருஷ்ணாம்பட்டியில என் தாத்தாவோட நெலம் எங்க இருக்குன்னு பத்திரத்தைப் பாத்து
சொல்லுங்க’ன்னு பாஸ்கரை கேட்டிருக்கான்..அவனுக்கு பதில்
கெடைக்கல... ஏன்னா, கிருஷ்ணாம்பட்டியோட
மொத்த விஸ்தீரணத்தையும், எல்லைக் கோடுங்களையும்
மட்டுமே பத்திரத்தில குறிப்பிட்டிருக்காம்!”
வாசு தந்த
விவரத்தினால் சியாமளாவுக்கு ஒன்று புரிந்தது.
கிருஷ்ணாம்பட்டி கண்டுபிடிக்கப்பட்டாலும், கோகுலின் தாத்தா பயிரிட்ட நிலம் எங்கே குறிப்பாக இருக்கிறது என்ற விவரம்
தரப்படவில்லை. அதற்கு என்ன வழி?
வாசு
தொடர்ந்தான் -
“ஆனா..நான்
கோகுலை நம்பிக்கையை கைவிடாம இருக்கச் சொல்லியிருக்கேன் சியாமா.. கிருஷ்ணர் சிலை
முன்னாடிதான் கூத்து நடக்கப் போகுது..அந்த சாமியை மனசில நெனச்சுக்க...அவர் சரியான
வழி காம்பிப்பார்னு கோகுலுக்கு தைரியம் சொல்லியிருக்கேன்”
சியாமளாவும்
கண்ணபிரானை மனதில் வேண்டிக் கொண்டாள்..கோகுலுக்காக மட்டுமல்ல, வாசுவைக் கரம் பிடிக்க வழி காட்டவும்தான்!
* * * *
அன்றைய
முன்னிரவு. கூத்துப் பயிற்சி முடிந்து, உணவு உண்டபின் பவுர்ணமியின் நிலவொளியில் ‘எங்கள் ஊர்
மண்ணில் நடக்கிறோம்’ என்கிற பெருமையுடன்
கோகுல், வெங்கட், கோபால், நவநீத் ஆகியோர் மெதுவாக நடை பயின்று கொண்டிருந்தனர். தூரத்தே, ராபர்ட், பீட்டர் ஆகியோரிடம், ஆங்கிலம் தெரிந்த ராதா
பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தனர். இவர்களைப்
பார்த்ததும், ராதா கையை ஆட்டி வரச்சொன்னான்.
“கண்ணுங்களா..நம்மைத்
தேடி நல்ல சேதிங்க ஒன்னொன்னா போட்டி போட்டுகிட்டு வருது!”
“என்னடா
ராதா...ஜக்கம்மா குறி மாதிரி சொல்றே!” - இது வெங்கட்
“இவன் இங்கிலீசு
புலியாச்சே! அதான் மிசினு ஓட்ட வந்த
வெள்ளக்காரங்களோட கதை பேசி, தண்ணியடிச்சிட்டு
பெனாத்தறான்” - இது கோபால்.
“டேய் மடப்
பசங்களா... இந்த வெள்ளக்காரங்க மண்ணை அள்ளறதோட, நம்ம
பூமியிலேந்து பொன்னையும் அள்ளித் தரப்போறாங்க!”
எல்லோரும் வாயை
பிளக்க, கோகுல் சுறுசுறுப்பானான் -
“இந்த
வெள்ளக்காரங்களுக்கு நம்ம நிலம் எங்க இருக்குன்னு தெரியுமா?”
“ஊரு பேரு
தெரியில இவங்களுக்கு...ஆனா, ஆறு ஓடின எடத்துக்கு
வலக்கைப் பக்கத்தில கிருஷ்ணர் கோயிலு, பயிர் நிலங்க
இருந்துதுன்னு கரெக்டா சொல்றங்க. நம்ம
நாட்டுக்கு சுதந்திரம் கெடைக்கறதுக்கு
பத்து வருஷம் முந்தி இங்க கூத்து நடந்தப்ப, விவசாயிங்க கலவரம் செஞ்சு வெள்ளக்காரங்க நகை நட்டையெல்லாம் கொள்ளையடிச்சு, நெலத்தில பொதச்சிட்டதா கோர்ட்டில கேசு நடந்திருக்காம். கோடிக்கணக்கான மதிப்பான ந்கைங்க இந்த
மண்ணிலதான் பொதஞ்சு கெடக்குன்னு இவங்க சொல்றாங்க”
வெங்கட்
வெகுளித்தனமாகக் கேட்டான் - “அப்ப இவங்க மப்டியில வந்திருக்க
வெள்ளைக்கார போலீசா?”
“அட லூசு..பூமியை
தோண்டி நகைங்கள நைஸா எடுத்துகிட்டுப் போக திட்டம் போடறாங்க!”
“அதை ஏன்
உன்கிட்ட சொன்னாங்க?” இது கோபாலின்
வெகுளித்தனமான கேள்வி.
“நல்ல நேரம்
பாத்து சொல்ல நாம ஐயரு பாரு...அடேய்...ராத்திரியில தோண்டினா கும்பல் கூடாது...கூத்து
போடறதுக்காக நெலம் சரி செய்யறதா ந்ம்மை வச்சுகிட்டு தேடினா, யாருக்கும் சந்தேகம் வராது பாரு!
நமக்கும் கணிசமா பங்கு தாரேங்கறாங்க”
எல்லோரும்
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
சிறிது இடைவெளி விட்டு, ராதா தயக்கத்துடன்
கேட்டான் -
“நம்ம ஊர்
நெலத்திலேந்து சொத்து வந்தா, ஏன் விடணும்? சரின்னு சொல்லிடலாமில்ல?”
மற்றவர்கள்
சிறிது தயக்கத்துடன் மெதுவாகத் தலையாட்டி சம்மதம் தெரிவிக்க, கோகுல் யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
ராதா சிறிது
இடைவெளி விட்டுக் கேட்டான் -
“ஏன்
கோகுல்...இது தப்புன்னு நெனைக்கிறியா?”
அவசரமாக
மறுத்தான் கோகுல் -
“மத்தவங்க
செய்யிறதை தப்பா ரைட்டான்னு சொல்ல நானு யாரு?
ஆனா, இந்த
வெள்ளைக்காரங்க நம்ம பூமியை தோண்டிப் பாக்கிறது எனக்குத் தேவை தான்! ஏன்னா, நானும் புதையல்
எடுக்கத்தான் இங்க வந்திருக்கேன்”
நால்வரும் அவனை
வியப்புடன் பார்த்தனர். கோபால் கேட்டான் -
அப்போ, உன்னோட தாத்தா, ந்கைப் புதையிலப் பத்தி
உன் கிட்ட சொல்லியிருக்காரு! அதை நீ ரகசியமா வச்சிருந்தே...இப்ப
எங்களுக்கும் தெரிந்சு போச்சு...கரெக்டு தானே?”
கோகுல் பதிலொன்றும்
பேசவில்லை!
(குறிப்பு: வாசகர்களே... முகவுரை எழுதிய ’மகரிஷி நாரதர்’ சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கதையைப் படித்து பதில் தாருங்களேன்.)
...தொடரும்
No comments:
Post a Comment