Monday, June 11, 2012

மூன்றாம் புறம் - பகுதி 8



 8. இணையதளச் செய்தி

அமைச்சர் செல்லமுத்து தனது வீட்டுச் சன்னல் வழியே எட்டிப் பார்த்தார்.  அவரைச் சந்தித்த பாஸ்கரும் காஞ்சனாவும் கேட்டருகே நின்றிருந்த காரில் ஏறிக் கிளம்புவது தெரிந்தது.

இரண்டு போட்டிக் கம்பெனிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக வந்து தன்னைச் சந்தித்தன் பின்னணி அமைச்சருக்குப் புரியவில்லை.  அதைவிட, தான் மிக ரகசியமாக வைத்திருந்த நிலங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் விவரங்களை பாஸ்கர் எப்படியோ தெரிந்துகொண்டது அவரது மனதை நெருடியது.  ஆவணங்களின் நகலுக்கு பாஸ்கர் விண்ணப்பித்தால், அரசாங்க அலுவலகம் அதைத் தந்தாகவேண்டுமே?

பாஸ்கர், ஒரு திட்டத்தை அமைச்சரின் பார்வைக்கு வைத்துவிட்டுத்தான் சென்றான்.  சாமந்தி கம்பெனியும், பட்டேல் கம்பெனியும் அந்த நிலப்பரப்பில் வீடுகள் கட்ட quotation தருவார்கள்.  அரசாங்கம், பட்டேல் கம்பெனிக்கு வீடுகள் கட்ட அனுமதி தர வேண்டும்.  அதில் பத்து சதவிகிதம் அமைச்சருக்குக் கமிஷனாகக் கிடைக்கும்.

பாஸ்கரின் கார் வெளியேறிய திசையை சிறிது நேரம் பார்த்த செல்லமுத்து வேறுவிதமாக யோசித்தார். அவரது ஆளும் கட்சி மக்களின் வெறுப்பை வெகுவாகச் சம்பாதித்த நிலையில் உள்ளது.  எப்போழுது ஆட்சி கவிழுமோவென அவருக்கு உள்ளூர பயம்!

பாஸ்கரின் யோசனையை அமல் படுத்தினால், கமிஷன் என்ற பெயரில் அவருக்குப் பெரிதாக ஏதும் வரப் போவதில்லை.  அதை விட, மொத்தப் பரப்பளவிலும் மென்பொருள் பூங்காவொன்றை அமைத்தால், ஜெர்மன் தொழிற்சாலைக்கு வந்தது போல எதிர்ப்பு ஏதும் கிளம்பாது.  அதே சமயம் பெரிய தொகையை அள்ளலாம்.  ஏன்..ஜெர்மன் ஆசாமிக்கே ஆர்டர் கொடுத்து, தொழிற்சாலைக்காக அவரிடம் வாங்கிய கறுப்புப் பணத்தை அப்படியே வைத்துக் கொள்ளலாம். அதோடு மட்டுமில்ல, வரபோகும் மென்பொருள் பூங்காவுக்காக, பூமியைச் சமன் செய்ய இறக்குமதி செய்யப் பட்ட ராட்சத இயந்திரங்களையும், அதை இயக்க வந்த ராபர்ட், பீட்டர் ஆகிய இரு ஆங்கிலேயர்களையும் திருப்பியனுப்பாமல் வைத்துக் கொள்ளலாம்!

ஆனால், ராபர்ட்டும், பீட்டரும் நிலத்தைச் சமன் செய்யமட்டும் வரவில்லை, அங்கு பெரும் புதையலை எடுக்கும் குறிக்கோளைத் தங்கள் மனதில் உள்ளடக்கியுள்ளனரென்று அமைச்சர் செல்லமுத்துவுக்குத் தெரியாது!

ஜெர்மன் தொழிற்சாலையின் கிளைகள் எங்கு துவங்கினாலும், அக்கம்பெனியின் ஊழியர்கள் ராபர்ட்டும், பீட்டரும் முதலில் நிலத்தை சமன்படுத்த அனுப்பப் படுவார்கள்.  இருவருக்குமே நாடு நாடாகச் சுற்றுவதில் ஆர்வம் அதிகம்.  காரணம், பல்லாண்டு காலமாகப் பயன்படுத்தப் படாத பூமியைக் கிளறினால், செல்வங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் நம்பினர்!

ஜெயம் நகர்வாசிகளின் போராட்டங்களினால் தொழிற்சாலையை ஆரம்பிப்பதில் தடங்கல் காரணமாக, இயந்திரங்களை இயக்க முடியாமல் வெறுமனே பொழுதைக் கழித்துவிட்டு, லட்டு மாதிரி மாத சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ராபர்ட், பீட்டர் ஆகியோருக்கு, மிகப் பெரிய ரெண்டாவது லட்டுதின்னும் ஆசை, ராபர்ட்டின் போன் வழித் தகவலால் வந்தது!

அது இண்டர்நெட்டில் கிடைத்த தகவல்.  இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சி முடிவு பெறுவதற்குப் பத்து ஆண்டுகள் முன்பு, மதராசப் பட்டணம் அருகே கோல்ஃப் மைதானத்தை ஒட்டிய பகுதியில் வசித்த விவசாயிகள், ஆங்கிலேய அதிகாரிகளுடன் கலவரத்தில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்து, அவைகளைத் தங்களின் நிலங்களில் புதைத்துவிட்டதாக அவர்களின் மீது போடப் பட்ட வழக்கின் விவரங்கள் அவை!

வழக்கில் குறிப்பிட்ட நிலம் சந்தேகமேயில்லாமல் தாங்கள் சமன்படுத்தப் போகும் இடம்தான் என்று ராபர்ட்டுக்கும், பீட்டருக்கும் புரிந்து போயிற்று.  ஆனால் இயந்திரங்களை இயக்க அவர்களுக்கு உடனடியாக உத்திரவு கிடைக்க வழியிருப்பதாகத் தெரியவில்லை!

அவர்களுக்கு நம்பிக்கையூட்ட, இரண்டு செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன.  தொழிற்சாலையை அமைப்பது சாத்தியமில்லையென்று தெரிந்துவிட்டாலும், அமைச்சர் செல்லமுத்துவின் வேண்டுகோளின்படி இன்னும் சிறிது காலம் அவர்கள் அங்கேயே தங்க ஜெர்மன் கம்பெனி உத்தரவிட்டது.  தொடர்ந்து, நார்வே பெண்மணியின் கூத்துப் பட்டறை அங்கு முகாமிட்டு, அந்த நிலப் பரப்பில் கூத்து போடப் போகும் சேதி!
ஜெயம் நகர் சங்க உறுப்பினர்கள் கூத்துப் பட்டறையின் உரிமையாளர் கரோலினை சந்தித்து, பக்கத்திலிருந்த திறந்தவெளியில் கூத்து போடுவதற்குத் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்தனர்.  அதனால், கோகுல் மற்றும் அவனது கிராம இளைஞர்களிடையே புதிய உத்வேகம் பிறந்தது.

சியாமளா வைத்த பேட்டியில் கோகுலுக்கு உதவ பாஸ்கர் எந்த அக்கறையும் காட்டாத நிலையில், வேஷம் மற்றும் வசனங்கள் பேச கோகுலுக்கு பயிற்சி தரும் வகையில் வாசுவே மறுபடியும் முன்னணியில் நிற்பது எல்லோருக்கும் பட்டவர்தனமாகத் தெரிந்தது.  ஆனால், குருட்டு அதிர்ஷ்டக் காற்று திடீரென அடித்து, பாஸ்கரை அலேக்காக முன்னுக்கு கொண்டுவந்து விட்டது!

அது எப்படி நடந்ததென்று கேட்கிறீர்களா? அந்த நிலப் பரப்பின் ஒரு பகுதியாக ஜமீந்தார் வசமிருந்த கிராமங்களின் பத்திரங்களுக்காக பாஸ்கர் விண்ணப்பித்து, அவை அவன் கைக்குக் கிடைக்க, விவரங்களைக் கவனமாகப் படித்தவன் கண்களில் சிக்கியது ஒரு கிராமத்தின் பெயர் - அது தான் கிருஷ்ணாம்பட்டி!

பாஸ்கர் விரைவாகச் செயல் பட்டான்.  ஒரு பொதுக் கூட்டம் போடாத குறையாக, சாமந்தி அலுவலகத்துக்கு சியாமளா, வாசு, சாரி மட்டுமில்லாமல், கோகுல், அவனது ஊர் நண்பர்கள், கரோலின் ஆகியோரையும் வரவழைத்துப் பேசினான் -

அன்னைக்கே என் மனசில தோணிச்சு, கோகுல் இருக்க வேண்டிய இடம் இதுதான்னு.  அதனால தான், கோகுலுக்கு இங்க வீடு கட்டித் தர்றதா சொன்னேன்.  நான் சொன்னது இப்ப நூத்துக்கு நூறு சரியாயிடிச்சு! இந்த வெட்டவெளியில தான் கிருஷ்ணாம்பட்டி இருந்ததுக்கு பத்திரத்தில ஆதாரம் இருக்கு!

பாஸ்கரின் கிருஷ்ணாம்பட்டி கண்டுபிடிப்பு, ஒருவர் விடாமல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதில் எந்த வித சந்தேகமும் இல்லை.  தன்னுடைய சொந்த மண்ணில் தான் நிற்கிறோம் என்கிற நினைப்பு கோகுலுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.  அவன் பாஸ்கரின் கால்களில் விழுந்து கும்பிட்டான்!  தாத்தா...நம்ம ஊருக்கு வந்திட்டேன்என்று கூவியபடி அந்த நிலப் பரப்பைச் சுற்றி சுற்றி ஓடி வந்தான்!

சியாமளாவின் அம்மா நித்யாவுக்கும், வாசுவின் அம்மா அன்னபூர்ணிக்கும் பாஸ்கரின் மூலமாக கிருஷ்ணாம்பட்டி கண்டுபிடிக்கப் பட்டது ஏமாற்றமளித்தாலும், கோகுலுக்காக அதை வரவேற்றனர்.

மகாலிஙகமும் மந்திரமூர்த்தியும் தாங்கள் சம்பந்தியாகப் போவது உறுதியாகிவிட்டதாகப் பெரிதும் மகிழ்ந்தனர்.

வரப்போகும் கிருஷ்ண ஜெயந்தியன்று அந்நிலப் பரப்பில் மஹாபாரதக் கூத்து போடுவதென கூத்துக் குழு தீர்மானித்து விட்டதால், ஜெயம் நகர்வாசிகளிடையே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ராபர்ட்டும் பீட்டரும் தாங்கமுடியாத சந்தோஷத்தில் ஆழ்ந்தனர்.  கூத்து போடும் நாள் முடிவாகி விட்டதால், இயந்திரங்களை அவர்கள் இயக்கி நிலத்தை உடனே சமன் செய்யவேண்டுமென்று எல்லோருமே பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.  திட்டப்படி தாங்கள் புதையலைத் தேட வழி கிடைத்தாயிற்று என அவர்கள் புளங்காகிதம் அடைந்தனர்!

ஜமீந்தார் நிலங்களின் பத்திரஙகளை முழுதும் படித்து முடித்த பாஸ்கருக்கும் காஞ்சனாவுக்கும், மந்திரி செல்லமுத்துவைத் தங்களது வீடு கட்டும் திட்டத்துக்கு பச்சைக் கொடி காட்ட வைக்க ஒரு வழி தெரிந்தது.  கிருஷ்ணாம்பட்டி நிலங்களின் அனுபவ உரிமை அக் கிராமத்து மக்களுக்கு உண்டு என பத்திரத்தில் தெளிவாக எழுதப் பட்டிருக்கிறது.  அதனால், கோகுல் மற்றும் நான்கு கிராம இளைஞர்களிட்மும் தங்களுக்குச் சாதகமாக எழுதி வாங்கி, அதைத் தங்களது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தலாம்.  இதை எவ்வாறு நிறைவேற்றுவது என்கிற தீவிர யோசனையில் இருவரும் மூழ்கினர்.

(குறிப்பு: வாசகர்களே... முகவுரை எழுதிய மகரிஷி நாரதர்சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கதையைப் படித்து பதில் தாருங்களேன்.)
...தொடரும்

No comments:

Post a Comment