Wednesday, June 20, 2012

மூன்றாம் புறம் - சிந்தனைப் பகுதி


முடிந்த கதையைத் தொடர்ந்த சிந்தனைகள்:
என்னுடைய கதையை blogல் தொடராகப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த அதே நேரத்தில், அதைப் புத்தகமாகவும் அச்சிட்டு வெளியிடும் நோக்கத்தில், ஒரு பதிப்பகத்துடன் அதற்கான ஒப்பந்தம் செய்திருந்தேன். புத்தகத்தை அச்சிட்டு வெளியிட இரண்டு மாதங்கள் ஆகுமெனத் தெரிவிக்கப்பட்டது.

ஒரு மாதம் கழிந்திருக்கும்.  கதையின் முடிவுப் பகுதியை blogல் நேற்றுப் பதிவு செய்யும் வேளையில், பதிப்பக உரிமையாளர் வேணு என்னைத் தேடி வந்தார்.  உடன் வந்தவரைத் தன்னுடைய நெருங்கிய நண்பரென எனக்கு அறிமுகம் செய்தார்.
புதியவரின் பெயரைக் கேட்டதும், ஆச்சரியத்தில் நான் உறைந்து போனேன்! மகரிஷி நாரதர்தன்னுடைய முகவுரையில் குறிப்பிட்ட மயில்சாமி!
மயில்சாமி பேசினார் -

நித்யா சார் .. நான் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யிறவன் .. என்னோட நண்பன் வேணு புத்தகங்களை அச்சிடறவன்னா, நான் அதில புழுவா நெளியிறவன்! அதாங்க, புத்தகப் புழு! அச்சுக்கு நீங்க குடுத்த கதையை மொத ஆளா படிச்சிட்டேன்னா பாருங்களேன்

வேடிக்கையாய்ப் பேசியவர், வினாவொன்றை எழுப்பினார் -
நீங்க ஏன் சார் கோகுலை அழ வச்சு அப்படியே விட்டுட்டீங்க?”
நான் திருப்தியடைந்தேன்.  நேர்மையான ஒரு விவசாயி புதையல் எடுத்த கதை, அவரது மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  ஒரு எழுத்தாளனுக்கு வேறு என்ன வேண்டும்?

அவர் தொடர்ந்தார் -
எனக்குப் புரியுது சார்.  கோகுலோட கனவு நிறைவேறினதைச் சொல்லி, நீங்க கதையை முடிச்சிட்டீங்க.  ஆனா, நில அகபரிப்பு முயற்சியினால தன்னோட பாட்டி செத்ததை நெனச்சு கோகுல் விட்ட கண்ணீரை, நிலத்தை விக்கிற தொழில்ல இருக்கிற என்னால அவ்வளவு சுலபமா மறக்க முடியலீங்க

நம்ம நாட்டில, நகர்ப் புறத்தைச் சுத்தி ஜனத்தொகை பெருகி கிட்டே வருது.  வீட்டுக்கும், தொழிற்சாலைக்கும் நிலம் அதிகமா தேவைப் படுது.  அதனால, விவசாயம் பண்ண முடியாம வெறுமெனே கெடக்கிற விவசாய நிலங்க இப்ப குடியிருப்புப் பகுதிகளா மாறிகிட்டு வருது.   இது, காலத்தோட கட்டாயம்

கோகுலோட கதாபாத்திரம், பரம்பரை விவசாய நிலம் இருந்தும் அதில விளைச்சலைப் பாக்க முடியாம தவிக்கிற சின்னச் சின்ன விவசாயிங்களோட நிலமையைப் பிரதிபலிக்குது.  இவங்களுக்கு உதவி செய்ய என் மனதில ஒரு சின்ன திட்டம் பிள்ளையார் சுழி போட்டுகிட்டு உருவாச்சுங்க

நகர்ப் புறத்துக்கும் கிராமப் புறத்துக்கும் இடைப்பட்ட பகுதியில, அதாவது நீங்க தலைப்பு குடுத்த மூண்றாம் புறத்திலதான் என்னைப் போல ஆளுங்க, சாதாரண மக்கள் வாங்கக் கூடிய குடியிருப்பு மனைகளை விக்கிறாங்க.  அப்படி நான் சமீபத்தில ஆரம்பிச்ச திட்டத்தில, ஒரு வீட்டு மனை வாங்கினா, பக்கத்தில மிகக் குறைஞ்ச விலையில விவசாய நிலம் ஒன்னு தர்றதா அறிவிச்சிருக்கேன்! அப்படி விவசாய நிலம் வாங்கறவங்க, தனியாகவோ கூட்டாகவோ அதில உணவு உற்பத்தி செய்ய என்னாலான ஒத்துழைப்பு தர்றதா உறுதி தந்திருக்கேன்! வசிக்க வீடும், புசிக்க வகை செய்யும் நிலமும் பெற எங்கள் கோகுல் நகருக்கு வாங்கன்னு விளம்பரம் செஞ்சிருக்கேன்

என்ன மாதிரி ரியல் எஸ்டேட் தொழில்ல இருக்க மத்தவங்களும் இத மாதிரியான திட்டத்தைச் செயல் படுத்தி, இதற்கு அரசாங்க அனுமதியும், ஆதரவும் இருந்தா, கணிசமான விவசாய நிலங்களைக் காப்பாத்தலாம்னு நான் நினைக்கிறேங்க.  வீடு கட்டற சாதாரண ஜனங்க விவசாயத்தில ஆர்வம் காட்ட இந்தத் திட்டம் வழி வகுக்கும்
மயில்சாமி பேசி முடிக்க, புத்தகப் பதிப்பாளர் வேணு தொடர்ந்தார் -
நித்யா சார் ... கோகுலைப் படைச்சது நீங்க.  அந்தப் பேரில ஆரம்பிச்சிருக்கிற இந்த விவசாய-வீட்டு மனைதிட்டத்தைப் பத்திக் கேட்டா, நீங்க மகிழ்ச்சியடைவீங்கன்னுதான், உங்களைச் சந்திக்க மயில்சாமியைக் கூட்டி கிட்டு வந்தேன்
யான் பெற்ற இன்பம் வாசகர்களும் பெற, இந்த விவரங்களைத் தந்துள்ளேன்.

அன்புடையீர், இந்திய நாடு விவசாய நாடு...வள்ளுவனும் பாரதியும் உழவைப் போற்றியதை நீங்களறிவீர்.  ஆதலின், வீட்டுடன் விளை நிலத்தையும் நாடுவீர்.  நீவீர் எத் தொழில் புரிபவராயினும், பசியகற்றும் ஏரோட்டும் பணியினைப் பேணிக் காத்திடுவீர்.
மேற்படி விளைநில-வீடுகோகுல் நகர் திட்டத்துக்கு உங்களது ஆதரவு இருந்தாலோ, விளைநிலங்களைக் காப்பாற்ற மாற்றுத் திட்டம் தர நீங்கள் விரும்பினாலோ -

NO  WAITING  FOR  COMMENTING !
                                                                 ஆசிரியர்

No comments:

Post a Comment