Friday, June 8, 2012

மூன்றாம் புறம் - பகுதி 7



7. ராணி தேனீ

ஜெர்மன் தொழிற்சாலையை வரவிடாமல் தடுப்பதற்காக ஜெயம் நகர்வாசிகள் போராட்டத்தில் குதித்த நாள் முதல், அந்த நிலப்பரப்பு மீடியா மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி விட்டது!

இவ்வளவு பெரிய காலி இடமா...இதை வளைச்சுப் போட்டாலென்னஎன்று வாயைப் பிளந்தபடி வ்ந்த பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அது அரசாங்க வசம் உள்ள இடம் என்பதைத் தவிர வேறு தகவல்கள் பெறமுடியாமல் பின் வாங்கின!

பாஸ்கர் அப்படி விட்டு விடவில்லை.  சம்பந்தப்பட்ட அரசாங்க ஊழியர்களின் விவரங்களைச் சேகரித்தான்.  வெகு காலமாக அங்கு பணிபுரிந்த ஒருவர் சமீபத்தில் வேறு இடத்துக்கு மாற்றலாகி விட்டதையறிந்து, அவரைக் கண்டுபிடித்துப் பேசியதில், அந்த நிலப்பரப்பில், பாதி ஒரு ஜமீந்தார் வசம் இருந்த பகுதி, அரசாங்கத்தைச் சேராது எங்கிற உண்மையைத் தெரிந்து கொண்டான்!

ஒரு அதிரடித் திட்டம் மனதில் உருவாக, பாஸ்கர் உடனடியாக அமைச்சர் செல்லமுத்துவைச் சந்தித்தான்.  சாமந்தி கம்பெனி உரிமையாளனாகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட அவன், தொழிற்சாலைக்கு எதிர்ப்பு வலுப்பதால், அங்கு குடியிருப்புகளை அமைப்பதே சரியானது எனும் தன் கோரிக்கையை வைத்தான்.  அவரிடமிருந்து விடை பெறும் போது, நிலப்பரப்பில் பாதி ஜமீன் நிலங்கள், அரசாங்கத்துக்குச் சொந்தமானதல்ல என்பது தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியமென்கிற கிடுக்கிப் பிடியைப் போட்டுவிட்டு வந்தான்!

ஆனால் பாவம் பாஸ்கர்...அவனது திட்டத்தை அவனுக்கே தெரியாமல் திருட ஒரு சாகசக்காரி வருவாளென்பது அவனுக்கு அப்போது தெரிய நியாயமில்லை!

இந்தியாவின் வட பகுதிகளில் பலமாக வேரூன்றிய கட்டுமான நிறுவனம் பட்டேல் கம்பெனி.  கம்பெனியின் ஸ்தாபகர் பட்டேல் காலமான் பின், கம்பெனியின் நிர்வாகம் அவரது மகள் காஞ்சனா, மற்றும் அவளது கணவன் சிவராஜ் கைகளில்.

கல்லூரிப் படிப்பு வரை சென்னையிலிருந்த காஞ்சனாவுக்கு அரேபியக் குதிரையைப் போன்ற கம்பீரமான உடல்வாகு.  குணத்தில் அவள் ஒரு ராணி தேனி.  ஆண்களின் உழைப்பைத் தன்னுடைய கம்பெனிக்கும், உடலைத் தன் இச்சைக்கும் பயன்படுத்தும் வக்கிர குணம் கொண்டவள்!  கணவன் சிவராஜ் அவளுக்கு ஒரு கிள்ளுக்கீரை.

ஜெர்மன் தொழிற்சாலை வரவிருந்த காலியிடத்தைப் பற்றிய சேதி தெரிந்ததும், காஞ்சனா அதை அடையப் போட்ட திட்டமே அலாதி.  சுற்றுலா மற்றும் கணவன் சிவராஜின் மருத்துவ பரிசோதனைக்காக வந்தது போல, ஜெயம் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொண்டாள் அவள்.  வந்த சில நாட்களிலேயே, அங்கு வீடு கட்டும் முயற்சியிலிருந்த சாமந்தி கம்பெனி பற்றியும், அதன் உரிமையாளர்கள் பற்றியும் தெரிந்து கொண்டாள்.

ஒரு நாள் பெங்களூர் சென்றிருந்த பாஸ்கர், விமானத்தில் சென்னைக்குத் திரும்பியபோது, பக்கத்து இருக்கையில் காஞ்சனா அமர்ந்திருந்தாள்! தன் கட்டுடல் மேனியைப் பார்த்தவுடன் பாஸ்கர் நிலைகுலைந்து போனதை காஞ்சனா ஓரக் கண்ணால் பார்த்துப் புரிந்துகொண்டாள்.  சரியான ஜொள்ளுப் பார்ட்டிதான்.  எனது வேலை சுலபமாக முடியும்!

வலிய அவனுடைய கையைப் பற்றிக்கொண்டு காஞ்சனா குலுக்கியதில் பாஸ்கர் கிறங்கிப் போனான்.

உங்களை ஜெயம் நகரில பார்த்திருக்கேன்என்றவள், தன்னுடைய அறிமுக அட்டையை அவன் கையில் திணித்தாள்.

 காஞ்சனா...சேர்பர்சன்...பட்டேல் குழுமம்

ஒரு கணம் மூச்சடைத்துப் போனான் பாஸ்கர்.  கோடிக் கணக்கில் பணம் புரளும் கட்டுமானக் கம்பெனி அது என்பதை அவனறிவான்.  அதனுடன் ஒப்பிட்டால் தன்னுடைய சாமந்தி கம்பெனி ஒரு சுண்டக்காய்!

நான் இங்க சொந்த விஷயமா வந்திருக்கேன்.  என்னோட கணவர் சிவராஜுக்கு ஹெல்த் ப்ராப்ளம்.  ஜெயம் நகரிலதான்  தங்கியிருக்கேன்என்றவள் -

நீங்க என்ன பிஸினஸ் பண்றீங்க மிஸ்டர்...?”

தயக்கத்துடன் தனது சாமந்தி கம்பெனியின் அறிமுக அட்டையை அவளிடம் நீட்டியவாறு ஐயாம் பாஸ்கர்..மிஸஸ் காஞ்சனாஎன்றவனை, அணைக்காத குறையாக நெருக்கம் காட்டி, செல்லமாக அவன் தொடையில் தட்டி, சிணுங்கியவாறு பேசினாள் காஞ்சனா -

பாஸ்கர்...நம்ம நடுவில இனிமே நோ மிஸ்டர், மிஸஸ்...டா, டீ தான்!  நீயும் நானும் ஒரே துறையில இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்குடா...நமக்குள்ள பேசறதுக்கு நெறய விஷயம் இருக்கு பாஸ்கர்!

விமான நிலையத்திலிருந்து தன்னுடைய காரிலேயே பாஸ்கரை ஜெயம் நகருக்கு அழைத்துச் சென்றாள் காஞ்சனா.  கணவன் சிவராஜுக்கு குடிப் பழக்கம் உண்டாம்.  வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதவ்னாம்.  எப்படி ஜெயம் நகரில பொழுதைக் கழிக்கிறதுன்னு யோசனையா இருந்தேன்...நீ கெடைச்சிட்டேடா..நேரம் கெடைக்கறப்ப தெனம் நீ வீட்டுக்கு வரணும்..any time’ என்றவளின் கண்களில் போதை பொங்கி வழிந்தது!

பணக்காரப் பெண் குறுக்கு வழியில் அழைப்பு விடுகிறாள்....விடுவானா பாஸ்கர்?  தினமும் காஞ்சனாவைச் சந்தித்தான்..முதலில் வரவேற்பறையில்..பிறகு, படுக்கையறையில்!

இனி, பாஸ்கர் தன்னுடைய வாழ்வின் ஒரு அங்கம் என்று அவனிடம் தீர்மானமாகச் சொல்லி விட்டாள் காஞ்சனா.  பட்டேல் கம்பெனியின் பங்குகளில் ஒரு பகுதியை பாஸ்கரின் பெயரில் சரியான (!) சமயத்தில் அவள் மாற்றுவாளாம்.

இன்னொரு நாள் படுக்கையறைச் சந்திப்பில் பாஸ்கரிடம் சொன்னாள் காஞ்சனா -

பாஸ்கர்..இப்ப நானும் நீயும் ரொம்ப நெருக்கமாயிட்டதினால, பட்டேல் கம்பெனியும் சாமந்தி கம்பெனியும் ஒன்னுன்னுதான் நெனைக்கணும்...சாமந்தி கம்பெனி நடுத்தர மக்களுக்குத் தான் வீடு கட்டற திட்டம் வச்சிருக்கு...பக்கத்து நிலப் பரப்பில, பட்டேல் கம்பெனியோட பிரம்மாண்டமான வீடுங்க திட்டம் வந்தா, கோடி, கோடியா பணம் கொட்டுமே!

காஞ்சனாவின் தலையணை மந்திரத்தால், பாஸ்கரின் மனதில் பேராசைப் பேய் புகுந்து, பட்டேல் கம்பெனியை முதலிடத்தில் வைத்து, சாமந்தி கம்பெனியைப் பின்னுக்குத் தள்ளியது!

(குறிப்பு: வாசகர்களே... முகவுரை எழுதிய மகரிஷி நாரதர்சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கதையைப் படித்து பதில் தாருங்களேன்.)

...தொடரும்

No comments:

Post a Comment