Thursday, June 7, 2012

மூன்றாம் புறம் - பகுதி 5 5. மந்திரி போட்ட கணக்கு

ஒரு நடுநிசியில், நரசிம்மாச்சாரியின் காதுகளில் கூத்து வசனங்கள் ஒலித்த வெட்டவெளியைப் பற்றி வாசகர்களுக்கு நினைவிருக்கும்.  சென்னை அருகே ஜெயம் நகரை ஒட்டிய அந்தப் பகுதியை எவ்வளவு நாட்கள் தான் நம்ம ஆசாமிகள் சும்மா விடுவார்கள்?

இப்போது அங்கே வேளாண்மைத் துறை அமைச்ச்ர் செல்லமுத்து பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற அவர் மனதில் ஏதாவது பசுமைப் புரட்சித் திட்டம் உருவாகியிருக்கிறதா? அஸ்கு புஸ்கு! அவரென்ன அடி முட்டாளா?  உடன் வந்திருக்கும் ஜெர்மானிய முதலாளிக்கு, சுத்திகரிப்புத் தொழிற்சாலையொன்றை அமைக்க அந்த இடத்தைத் தாரை வார்க்கப் போகிறார்!  அதன் மூலம் கோடிக் கணக்கில் அவருக்குக் கறுப்புப் பணம் கிடைக்கும்!

ஒரு காலத்தில் குறுக்கே ஆறு ஓடிய அடையாளம்....அண்டை மாநிலம் அணை கட்டியதால், இப்போது மெலிதான நீர் ஓட்டம் மட்டுமே....ஆற்றங்கரையின் ஒரு பக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோல்ஃப் மைதான்ம் இருந்ததன் அறிகுறி...மறு பக்கம் ஜமீந்தார் ஒருவர் வசம் இருந்த கிராமப் பகுதிகள்.

நிலஙகளைக் கூறு போட்டு, குடியிருப்புப் பகுதிகளாக விற்கும் நிறுவனங்கள் சில, அந்த நிலத்தின் சொந்தம் பற்றிய விவரங்களைப் பெற அரசாங்க அலுவலகத்தில் முயற்சி செய்து ஏமாந்தன!  அவ்வளவு முன் ஜாக்கிரதையாகவும், ரகசியமாகவும் நில விவரங்களை யாருக்கும் தராமல் அமைச்சர் செல்லமுத்து செயல்பட்டு, இப்போது ஜெர்மன் தொழிற்சாலையுடன் ஒப்பந்தம் போட்டு பணம் கறக்கப் போகிறார்!

எந்த ஒரு திட்டமும் பிரம்மாண்டமென்றால், அது சந்திக்கும் பிரச்சினையும் பெரிதாக இருக்கும்.  அதுவும், நரசிம்மாச்சாரி மூலமென்றால் கேட்கவா வேண்டும்?

மும்பாயிலிருந்து மாற்றலாகி ஜெயம் நகருக்குக் குடி வந்த் மாப்பிள்ளையையும் பெண்ணையும் பார்ப்பதற்கு அங்கு வர ஆரம்பித்தார் சாரி.  அருகாமையில் இருந்த நிலப் பரப்பிலிருந்து மஹாபாரதக் கூத்து வசனங்கள் கேட்டது அவருக்கு நினைவு வர, அதைப் பற்றி அக்கம் பக்கம் விசாரிக்க ஆரம்பித்தார்.

கூத்து பற்றிய விவரம் ஏதும் அவருக்குக் கிடைக்கவில்லை.  ஆனால், அங்கு சுத்திகரிப்பு தொழிற்சாலை வரப் போவதை அறிந்து அவர் கோபப் பட்டார்.

வரப் போகும் தொழிற்சாலையில், ஜெயம் நகர்வாசிகளுக்கு வேலையில் முன்னுரிமை தரப்படுமென்கிற அமைச்சர் செல்லமுத்துவின் உறுதிமொழியை, ஜெயம்நகர் குடியிருப்போர் சஙகக் கூட்டத்தில் அதன் செயலாளர் அறிவிக்க, உறுப்பினர்கள் எல்லோரும் கை தட்டி அதை வரவேற்றனர். கூட்டத்துக்கு வந்திருந்த சாரி உடனே எழுந்து பேசினார்-

மந்திரி வாக்கு குடுத்துட்டார்னு பலமா கை தட்டறேள்...பேக்டரி வந்தா, நீங்க இப்ப அனுபவிச்சிண்டிருக்கிற சுத்தமான காத்து, சுத்தமான ஜலம், அமைதியெல்லாம் இருக்குமான்னு சித்த யோசிச்சுப் பார்த்தேளா?”

சுத்திகரிப்புத் தொழிற்சாலையால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை அவர் புள்ளி விவரங்களுடன் விவரிக்க, நிலைமை தலைகீழாயிற்று..தொழிற்சாலையை அமைப்பதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிற்பதென சங்கத்தில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேறியது.  முதல் கட்டமாக, அரசாங்கத்துக்கு அத்திட்டத்தைக் கைவிடுமாறு கோரி மனு தருவதென முடிவாயிற்று.

தனது யோசனைக்கு மதிப்பளித்த ஜெயம் ந்கர்வாசிகளின் நல்வாழ்வுக்கு, பக்கத்தில் தொழிற்சாலை வருவதைத் தடுப்பதோடல்லாமல், அங்கு குடியிருப்புகள் வருவதே ந்ல்லதென சாரிக்குத் தோன்றியது.  உடனே அவரது நினைவில் சாமந்தி கம்பெனி நிழலாடியது.  அது பற்றி சியாமளாவுடன் பேச, தொலைபேசியை எடுத்தார் சாரி. 

*                  *                    *                  *

சில நாட்கள் கழித்து, பெங்களூரில்-

ஏன்னப்பா மந்திரமூர்த்தி....எதுக்கு என்னை வரச் சொன்னே?”

உட்காரு மகாலிங்கம்...ஒரு சந்தோஷமான விஷயம்...சென்னைக்கு பக்கத்தில ஒரு பெரிய கட்டிட ப்ராஜ்க்ட்..ந்ம்ம கம்பெனி தமிழ்நாட்டில மொதன்மொதலா அந்த வேலையைப் பிடிக்க ஏற்பாடு நடக்குதுடா..இடத்தைப் பார்த்து, எப்படி கட்டணும்னு தீர்மானம் செஞ்சு, பக்காவா ப்ளான் போட்டு, அதிகாரிகளோட பேசறது, டெண்டர் அனுப்பறது எல்லாமே என் பையன் பாஸ்கர்தான் முடிவெடுக்கணும்னு சியாமளா எல்லாப் பொறுப்பையும் இவன் கிட்ட ஒப்படைச்சுட்டா!

க்ரேட்...வாழ்த்துக்கள் மாப்பிள்ளை

மகாலிங்கம் கைகுலுக்கியதில்லாமல், மாப்பிள்ளையென்று கூறியதால், பாஸ்கருக்கு வாயெல்லாம் பல்!

டேய் மகா...என் பையந்தான் மருமகன்னு நீ எப்போவோ தீர்மானிச்சிட்டே...அதோட, சியாமளாவுக்கு பாஸ்கர் பேரில வச்சிருக்கிற் நம்பிக்கை இப்ப ஓபனா தெரிஞ்சு போச்சு...அப்புறம் எதுக்குடா கல்யாணத்துக்கு போட்டியும் புடலங்காயும்!

மந்திரா...இன்னும் கொஞ்ச நாள் பொறு...சியாமளாவே போட்டியை கைவிட்டுட்டு எனக்கு பாஸ்கரோட கல்யாணம் பண்ணி வைப்பான்னு தெளிவா சொல்லிடுவா பாரு

*                  *                    *                    *

அதே நேரத்தில், கிருஷ்ணாம்பட்டி பற்றிய புதிய தகவல்களுடன் வாசு, சியாமளாவைச் சந்தித்தான் -

சியாமளா...கிருஷ்ணாம்பட்டி விஷயத்தில நாம கொஞ்சம் முன்னேறியிருக்கோம்

எப்படியென்று பார்வையினால் வினவியவளுக்கு, உடனிருந்த கோகுல் பதில் தந்தான் -

சின்னம்மா...ஓசூர்ல ராமாயணக் கூத்து போடறாங்கன்னு வாசு ஐயா ராத்திரி என்னைக் கூட்டி கிட்டு போனாரு...அம்மாடியோ!  தமிழு மண்ணில மொதமொதலா எஙக பரம்பரை வழக்கத்து கூத்தை நேர்ல பாத்து பூரிச்சுப் போயிட்டேங்க....தருமர் வேஷக் காரரு ஒடம்புக் குள்ளாற என்னோட அனந்தகிருஷ்ணன் தாத்தா பூந்துகிட்டாரு...சந்தேகமேயில்ல!

வாசுவைப் பெருமிதத்துடன் நோக்கினாள் சியாமளா.  நான் செய்ய விரும்பியதையெல்லாம் வாசு செய்கிறான்..என் மன ஓட்டத்துக்கு இவன் ஒத்துப்போகிறான்..இவன்தான் என் கணவனாக வர ஏற்றவன்...அவள் பார்வையில் காதல் கணிசமாகக் கலந்திருந்தது.

வாசுவின் குரல் அவளை நினைவுலகுக்குத் திருப்பியது -

சியாமா...அந்தக் கூத்தை நடத்தினவங்க கரோலின்....நார்வே நாட்டுப் பெண்மணி...நம்ம நாட்டுக் கலாச்சாரத்தை, கூத்துக் கலையை ஆராய்ச்சி செய்ய வந்தவங்க...மஹாபலிபுரத்தில கூத்துப் பட்டறை நடத்தி, நெறய பேருக்கு பயிற்சி குடுக்கறாங்க..அவங்களோட பேசினப்ப, கிருஷ்ணாம்பட்டிக்காரங்க ஒரு காலத்தில கூத்து போட்டு வந்ததை சொன்னேன். அப்ப தெரிஞ்சது, அதே ஊரை சேர்ந்தவங்கன்னு நாலு பேரு கர்நாடகாவில இருக்காங்களாம்..பரம்பரை கூத்தை கத்துக்க ஆசைன்னு கரோலினுக்கு அவங்க லெடர் போட்டிருக்காங்களாம்!

இது முக்கியமான விஷயம் வாசு..அவங்களை சந்திச்சா, கிருஷ்ணாம்பட்டி எங்க இருக்குன்னு தெரிஞ்சுடுமே?”

கரெக்ட்..அதனாலதான் தன்னையும் கூத்துப் பட்டறையில சேத்துக்கச்சொல்லி, கரோலின் கிட்ட கோகுல் கெஞ்ச ஆரம்பிச்சுட்டான்...அவங்களும் சரின்னு மஹாபலிபுரத்துக்கு இவனை வரச் சொல்லிட்டாங்க

ஏம்பா கோகுல்..உனக்கு இஙக என்ன குறை? ஏன் இவ்வளவு சீக்கிரம் எஙகளைப் பிரிஞ்சு போகணும்னு நெனைக்கிற?”
அப்படியெல்லாம் நெனைக்கலே சின்னம்மா...என்னோட தாத்தாவுக்குப் பெறகு இந்த ஏழை பேரில பாசம் காட்டற மகராசியாச்சே நீங்க! கிருஷ்ணர் சாமி அருளாலே, என் ஊர்க்காரங்களைப் பார்க்க வழி கெடச்சிருக்கு.  கரோலின் அம்மா கூட மஹாபலிபுரம் போயி, ஊர் சனங்களை தேடிப் பிடிச்சு, சொந்த கிருஷ்ணாம்பட்டி மண்ணில உருண்டு எழாம,  வேற எந்த வேலையும் எனக்கு ஓடாதீங்க...என்னை ஆசீர்வாதம் செஞ்சு அனுப்பி வையுங்க சின்னம்மா

சரி கோகுல்...போயிட்டு வா....நீ கிருஷ்ணாம்பட்டியில சந்தோஷமா இருக்கிறதுக்கு ஒரே ஒரு கார்டு மட்டும் கட்டாயம் எழுதிப் போடு

என்ன அப்படி சொல்லிட்டீங்க சின்னம்மா...எங்க ஊரு கிருஷ்ண ஜெயந்தி கூத்துக்கு உங்க எல்லோரையும் வரவழைச்சு, வடை பாயசத்தோட விருந்தே வைப்பேங்க!

(குறிப்பு: வாசகர்களே...மகரிஷி நாரதர் உஙகள் commentsக்காகக் காத்திருக்கிறார்!)
...தொடரும்

No comments:

Post a Comment