Wednesday, June 6, 2012

மூன்றாம் புறம் - பகுதி 4


4. தேடல் ஆரம்பம்

வீட்டுத் தோட்டவேலைக்கு வந்திருக்கும் கோகுலை நித்யாவுக்கும், அன்னபூரணிக்கும் மிகவும் பிடித்துப் போயிற்று.  தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருக்கும் அந்த இளம் விவசாயிக்கு உதவும் நோக்கில் சியாமளா போட்டி வைத்ததை அவர்கள் வரவேற்றனர். ஏனெனில் வாசு அதற்கு உதவுவதில் முன்னிலை வகிப்பானென்பதில் அவர்களுக்குச் சந்தேகமில்லை.

வாசுவுக்குப் பாடல்கள், கவிதைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.  அந்த வகையில், உம்மணாம் மூஞ்சி கோகுலுடன் பேச்சுக் கொடுத்து, அவனது பாட்டன் அனந்தகிருஷ்ணன், கோகுலுக்கு சிறு வயதில் பாடிக் காட்டிய மஹாபாரதக் கூத்துப் பாடல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வாசு தெரிந்துகொண்டான்.  பாடல் வரிகளை முறைப் படுத்தி, கோகுலுக்கு அதில் பயிற்சியளிக்க ஆரம்பித்தான்.

                   *         *              *                  *

பாஸ்கர் தன்னுடைய வீட்டில் யோசனையுடன் குறுக்கும் நெடுக்குமாக உலவிக் கொண்டிருந்தான்.  சியாமளா தனக்குத் தான் என்று ஆசைக் கனவில் மிதந்து கொண்டிருந்தவனுக்கு, அவள் அறிவித்த சுயம்வரப் போட்டி எரிச்சலைத் தந்தது.

தெருவில் சுற்றிக் கொண்டிருந்த தரித்திரப் பயல் கோகுலைத் தன் வீட்டுடன் தஙக வைத்துக் கொண்டு, அவனுக்காக என்னமாய் உருகுகிறாள் சியாமளா! வீட்டுத் தோட்டத்தில் கோகுல் இருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு, கூத்து சொல்லித் தரும் பெயரில் வாசு போட்டிக்கான வெற்றிப் பாதையில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறானே?

ஏன்னடா பாஸ்கர்...ஆபீசுக்கு கெளம்பலேஎன்றபடி வந்த அப்பா மந்திரமூர்த்தியைப் பார்த்து எரிமலையாய்க் கக்கினான் பாஸ்கர்-

ஆபீசுக்குப் போகவே பிடிக்கலைப்பா..போனதும், சியாமளாவும் வாசுவும் அந்தப் பிச்சைக்காரப் பயல் கோகுல் புராணத்தை என் கிட்ட பாடி போரடிக்கிறாங்கப்பா

அவங்க பாடினா, நீயும் தாளம் போடு....சியாமளா உனக்குன்னு ஆனப் பறம், அந்த வெறும் பயலை வெரட்டிடலாம்!

இப்படி சுளுவா பேசினா ஆயிடிச்சா?  கிருஷ்ணாம்பட்டி போக கோகுலுக்கு வழி காம்பிக்கிறவனுக்குத் தான் கழுத்தை நீட்டுவேன்னு சியாமளா சொல்லிட்டா...ஆனா, அப்படி ஒரு ஊர் இருக்கிற மாதிரியே தெரியிலப்பா!

அப்புறம் என்னடா பாஸ்கர்...போட்டி பிசுபிசுத்துப் போயிடும்!  ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்க...சியாமளாவோட அப்பா என் பிடியில இருக்காரு...சியாமளா என் மருமகளா வர்றதோட, சாமந்தி கம்பெனியும் முழுசா நம்ம கைக்கு வர்றணும்னு உனக்கு மேல எனக்கு அக்கறை இருக்குடா

பேராசை பிடித்த அப்பாவின் முகத்தில் காறித் துப்புவதாக மனதுக்குள் கற்பனை செய்து கொண்டான் பாஸ்கர்.

கம்பெனியிலிருந்து தன் பங்காக வந்த லாபத்தையெல்லாம், தன்னுடைய சின்ன வீட்டுக்கு கொட்டிக் கொடுத்துவிட்டு இப்போது கடனில் மிதக்கிறவர் மந்திரமூர்த்தி.  அதிலிருந்து மீள, மகாலிங்கத்தைத் தன்னுடைய சம்பந்தியாக்கிக் கொண்டு, அவரது சொத்துக்கள், கம்பெனியில் அவரது பங்குகள் ஆகியவற்றைத் தனதாக்கிக் கொள்வது அவரது நீண்ட நாளையத் திட்டம்!

ஒரு முறை மகாலிங்கத்துடன் வெளியூர் ஹோட்டலொன்றில் தங்க மந்திரமூர்த்தி ஏற்பாடு செய்து, பெண்ணாசை சிறிதுமில்லாத மகாலிங்கத்துக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து தந்து, ஒரு விலைமாதுவுடன் உறவாடுகிற மாதிரி படமெடுத்து, அந்தச் சிக்கலிலிருந்து அவரைக் காப்பாற்றிய மாதிரி நாடகம் போட்டார் மந்திரமூர்த்தி! அதைத் துருப்புச் சீட்டாக வைத்துக் கொண்டு, மகாலிங்கத்தின் மனதில் தன்னை சம்பந்தியாக அவர் ஆக்கிக் கொள்ளும் எண்ணத்தை ஆழமாக விதைத்துவிட்டார்!

பாஸ்கரின் மூளை வேறுவிதமாக வேலை செய்தது.  அப்பாவின் திட்டப்படி சியாமளாவும் சாமந்தி கம்பெனியும் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டுக்குள் வரட்டும்.  பிறகு, இந்த அப்பனை அடக்கி மூலையில் உட்கார வைத்து விடலாம்!

(குறிப்பு: வாசகர்களே...மகரிஷி நாரதர் உஙகள் commentsக்காகக் காத்திருக்கிறார்!)
...தொடரும்

No comments:

Post a Comment