Tuesday, June 19, 2012

மூன்றாம் புறம் - இறுதிப் பகுதி




15. விவசாயிகளின் விழா

எந்தத் தரப்பிலிருந்தும் ஒரு சிறு எதிர்ப்பும் வராமல், நூறு சதவிகித வெற்றியுடன் நடந்த நிகழ்ச்சியென்றால், அது கிருஷ்ணாம்பட்டியில் கிருஷ்ண ஜயெந்தியன்று நடந்த மாபெரும் கூத்துக் கலைவிழா தான்!
சாதாரணமாக, ஓரு புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்தால், முந்தைய பதவிக் காலத்தில் அனுமதிக்கப் பட்டவையெல்லாம், இப்பொழுது அரை வேக்காடாக நின்று போகும்.  ஆனால், பரந்த மனம் படைத்த புதிய
முதலமைச்சர், பல்லாண்டுகளாய் ந்டந்த கிருஷ்ணாம்பட்டி விவசாயக் குடும்பங்களின் பாரம்பரியக் கலையைப் புதுப்பிக்கும் முயற்சிக்கு முழு ஆதரவு தெரிவித்தார்!

பிற்கென்ன... பெரிய மனிதர்களின் ஆதரவும் சேர்ந்து, பத்திரிக்கை, டீவி, சுவரொட்டிகள் போன்றவை மூலம், பிரமிக்கத்தக்க விளம்பரம் பெற்று, த்மிழ் பாரம்பரியத்தில் அக்கறை கொண்டோரை உலகின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் ஈர்த்து, கிருஷ்ணாம்பட்டி மைதானத்தை மனித வெள்ளத்தால் நிரப்ப வைத்தது கூத்து விழாக் குழு!

அந்த நிலப் பரப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும்,தாத்தா பாட்டி போன்ற முந்தைய தலைமுறையினரின் வாய் வழிச் செய்திகளைக் கேட்டறிந்து, அந்த விவரங்களை விழாக் குழு மலராக வெளியிட,  மிகத் தொன்மை வாய்ந்த பாரம்பரிய நிகழ்ச்சி அந்த மண்ணில் அரங்கேறி வந்தது தெளிவாகியது.

விழா நாயகன், பாகவதத்தில் விவசாயியை அன்ன தாதாவெனப் புகழ்ந்த கிருஷ்ண பகவான் தான் என்பதில் யாருக்காவது ஐயமிருக்குமா என்ன?  இங்கிலாந்திலிருந்து சினிமா உதவி இயக்குநர் ராமு குழுவினருடன், சிலை சரியான நேரத்தில் கிருஷ்ணாம்பட்டிக்கு வந்து சேர்ந்ததுமே, அந்த இடம் பக்திப் பரவசத்தில் மூழ்கியது.  மேட்லி துரை வைத்திருந்த வரைபடத்தின் உதவியுடன், முன்பு கோயில் அமைந்திருந்த இடம் கண்டறியப்பட்டு, கலை நிபுணர்களின் கைவண்ணத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட உயரமான பீடம் அமைக்கப் பட்டு, அதில் ஸ்ரீகிருஷ்ணர் சிலை வேதங்கள் முழங்க பிரதிஷ்டை செய்யப் பட்டது.

தெய்வீக மணம் சூழ்ந்த நிலையைக் கவனத்தில் கொண்டு, காலை முதல் இரவு கூத்து ஆரம்பிக்கும் வரை நடைபெறவிருந்த வேறு கலை நிகழ்சிகளைக் கவனமாகவும் ரசனையாகவும் வடிவமைத்திருந்தனர் விழாக் குழுவினர்.  உணவகங்கள், தங்குமிடங்கள், கடைகள் என பல்வேறு வசதிகள் குறைவில்லாமல் இருந்தன.

உற்சாகத்தின் உச்சத்தை மனதில் நிரப்பிக் கொண்டு, அந்த மைதானத்தை வலம் வந்துகொண்டிருந்தான் ராமு.  கிருஷ்ணாம்பட்டி கிருஷ்ணர் சிலை இடம் பெற்ற படப் பாடலை இயக்கியவன் என்று அவனுக்கு எக்கச்சக்கமான விளம்பரம் மீடியா தயவால் கிடைத்திருக்கிறது.  நூறு ஆண்டு இடைவெளிக்குப் பின் கண்ணபிரான் இச்சிலை வடிவில் தனக்குத் தான் முதல் தரிசனம் தந்தார் என்கிற பெருமை வேறு அவனுக்கு!

யாருமே எதிர்பார்க்கவில்லை, இங்கிலாந்திலிருந்து மேட்லி துரையின் பேரன் ஆல்பர்ட் அந்த விழாவுக்கு வருவானென்று!  அவன் தன்னுடைய வருகையை யாருக்கும் தெரிவிக்காமல், கூட்டத்தில் ஒருவனாகச் சுற்றிவந்தான்.  தன்னுடைய தாத்தா, முல்லை பெரியாறு அணை புகழ் பென்னிகுயிக் அளவுக்குத் தமிழ்நாட்டில் பிரபலமாக இல்லாவிடினும் பரவாயில்லை... கிருஷ்ணாம்பட்டி விவசாயிகளைக் கொடுமைப்படுத்தியல்லவா பிரபலமடைந்தார்?  அவரது பெயரைச் சொல்லி தன்னை அங்கு பிறரிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள அவன் வெட்கப்பட்டான்.  அதே சமயம், சிறு வயது முதல் தன் வீட்டுத் தோட்டத்தில் தான் சுற்றிச் சுற்றி விளையாடிய கிருஷ்ணர் சிலை, இன்று மக்கள் வெள்ளத்தினிடையே கம்பீரமாக நிற்பதை, மதம் கடந்த தோழமைப் பாசத்துடன் பார்த்துப் பரவசமடைந்தான் ஆல்பர்ட்!

ராமுவின் பார்வையில் எப்படியோ ஆல்பர்ட் பட்டுவிட, சிலைக்கும் ஆல்பர்ட் குடும்பத்தினருக்கும் இருந்த உறவு செய்தியாளர்களிடையே காட்டுத் தீ போலப் பரவியது.  தாத்தா மேட்லி துரை பற்றிய நிருபர்களின் கேள்விகளுக்குத் தனக்குத் தெரிந்தவைகளை மறைக்காமல் கூறி, தாத்தா சார்பில் கிருஷ்ணாம்பட்டி விவசாயக் குடும்பங்களிடம் தான் மன்னிப்பு கோருவதாக பகிரங்கமாக அறிவித்தான் ஆல்பர்ட்.
வண்ண மயமான வாணவேடிக்கைகளின் முடிவில். மஹாபாரதக் கூத்து இரவு எட்டு மணிக்குத் தொடங்கியது.  இன்றைய அவசர உலகை மனதில் கொண்டு, கூத்து நான்கே மணிகளில் பழமை மணம் மாறாமல் முடியுமாறு அமைக்கப் பட்டிருந்தது.  நேர்த்தியான ஒளி ஒலியமைப்புடன், பல்லாயிரக்கணக்கானோர் வட்ட வடிவில் அமர்ந்து பார்க்கும் வசதியுடன் மேடையமைப்பு...ஆஙகாங்கே மின்திரை....

தருமர் வேடத்தை கோகுல் ஏற்க, நவநீத், வெங்கட், ராதா, கோபால் ஆகியோர் மற்ற பாண்டவர் சகோதர்களாகத் தோன்ற, நார்வே பெண்மணி கரோலினின் இயக்கத்தில், மஹாபாரதக் கூத்து சிறப்பாக நடந்தது.
கூத்தின் முடிவில், கண்ணபிரான் பவனி வர,அவரவர் நிலங்களில் விவசாயிகள் நின்றுகொண்டு, வயலில் விளைந்ததை சாமிக்குப் படைப்பது மரபு. மேட்லி துரை வசமிருந்த வரைபடத்தின் உதவியால் துல்லியமாகக் குறியீடு செய்யப்பட்ட தன் பாட்டன் நிலத்தில் தருமராக வேடமிட்ட கோகுல், திரொளபதி வேடதாரியுடன் படையலுடன் நின்றிருந்தான்.

ஒற்றை உறவாக இருந்த பாட்டனின் பிறந்த மண் ஏக்கத்தைத் தன் வாழ்நாளின் ஒரே குறிக்கோளாக ஏற்று, அதே மண்ணில் இப்போது நிற்கிறான் கோகுல்!  பெருமைப் படவேண்டிய தருணமல்லவா இது!  ஆனாலும், அவன் முகத்தில் ஏன் இனம் புரியாத சோகம்?

அப்போது -

ஆங்கில சிப்பாய்கள் வேடமணிந்த சிலர் துப்பாக்கியுடன் வந்து, பாண்டவர், கவுரவர் வேடமணிந்தோரைச் சூழ்ந்து கொண்டனர்!  தலைமைச் சிப்பாய் உரக்கக் கூவினான் -

இந்த இடத்தில் கூத்து நடத்தக் கூடாது என்று அரசாங்கம் சார்பாக ஏற்கெனவே மேட்லி துரை அவர்கள் உத்திரவு போட்டுள்ளார். அரசு ஆணையை மீறுவது குற்றம்... உடனடியாக, எல்லோரும் கலைந்து போய்விடுங்கள்

தருமராக வேடமணிந்த கோகுல், ஆவேசமாகக் குரல் கொடுத்தான் -

இது எங்கள் விளைநிலம்...ஆண்டுக்கு ஒரு முறை நாங்கள் கூத்து விழா நடத்துவது பரம்பரை பரம்பரையாக நடக்கிறது.  அருகில் நீங்கள் ஏற்படுத்தியுள்ள கோல்ஃப் விளையாட்டு மைதானத்துக்கு வரும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எங்கள் விழா இடைஞ்சலாக இருப்பதாக துரை அவர்கள் தடையுத்திரவு போட்டது நியாயமற்றது

அதிகாரியின் குரலில் கோபம் கொப்பளித்தது -

நீ விதண்டாவாதம் பேசுகிறாய்.  அரசாங்க உத்திரவை மீற உங்களுக்கு அனுமதியில்லை.  நான் பத்து எண்ணுவதற்குள் எல்லோரும் கலைந்து போய்விடுங்கள்.  இல்லாவிடில், சுட்டுத் தள்ளுவோம்

வேடதாரிகள் ஒவ்வொருவராக பீதியுடன் வெளியேற ஆரம்பிக்க, ‘தருமர்கோகுல், திரொளபதி வேடதாரியுடன் ஏர் கலப்பை சகிதம் தன்னுடைய நிலத்தை விட்டு அசையாது நின்று, மற்றவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தான் -

தயவு செய்து யாரும் விலகாதீர்கள்.  இது நம்முடைய தன்மானப் பிரச்சினை

ஆயினும் பலனில்லை... அவர்கள் இருவரைத் தவிர அங்கு யாருமில்லை!

சிப்பாய்த் தலைவன் பத்து வரை எண்ணி முடித்து, Fire என்று உத்திரவிட, துப்பாக்கி சீறும் சப்தத்தைத் தொடர்ந்து, கோகுலை மறைத்து நின்ற திரொளபதி வேடதாரி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மண்ணில் சாய்கிறார்!
ஒளி வெள்ளம் கோகுலின் மீது வட்ட வடிவமாகப் பாய, அவன் தழுதழுத்த குரலில் பேசினான் –

இத்தினி பெரிய மனுசங்க, படிச்சவங்க எல்லோரும் இப்ப கடோசியா பாத்த காட்சி, நெசமா நான் நின்னுகிட்டிருக்கிற இதே மண்ணுல ந்டந்த கொடுமைங்க.  வெள்ளக்கார சிப்பாயி துப்பாக்கியால சுட்டதில செத்துப் போனது, திரொளபதி வேசம் கட்டின என்னோட கண்ணம்மா பாட்டி...
வயத்துப் பொழப்புக்காக, மாட்டோட மாடா சேர்ந்து வேர்க்க விறுவிறுக்க ஏர் ஓட்டிப் பொழச்சவங்க இந்த கிருஷ்ணாம்பட்டி விவசாயிங்க.  அவங்க போதாத காலம், வெள்ளக்காரங்க கோல்ஃப் குச்சி வெளையாட்டு மைதானம் அருகாமையில வந்திச்சு. வெள்ளக்கார அதிகாரிங்க அங்க வந்து போக, எங்க வெவசாய நெலங்க தடையா இருந்திச்சாம்; அதனால எங்களை வெரட்ட மேட்லி தொரை திட்டம் போட்டாரு.  வருசத்துக்கு ஒரு தரம் பாரம்பரிய பழக்கத்தை விடாம, விவசாயிங்க ஒன்னா சேர்ந்து கூத்து போட்டு சாமிக்கு படைக்கிறதை, வெள்ளைக்காரங்களுக்கு தொந்திரவு கொடுக்கிறதா தப்பு கண்டுபிடிச்சாரு தொரை.  இந்த நிலத்தில கலப்பையோட தைரியமா நின்ன என்னோட அனந்தகிருஷ்ண தாத்தாவுக்கு வச்ச தோட்டா குறி, குறுக்க புகுந்த பாட்டி கண்ணம்மாவை காவு வாங்கிடுச்சுங்கய்யா..(அழுகிறான்)
இதே எடத்தில தாங்க,  தாத்தா கண்ணெதிரியே பாட்டியை அவக குழி தோண்டிப் பொதச்சாங்க.  அதிகாரிங்களோட நகைங்களை கொள்ளையடிச்சதா பொய் கேசு போட்டு, மொத்த கிராமத்து விவசாயிங்க்களையும் கண்காணத தூரத்தில கொண்டு விட்டுட்டாங்க சாமி

ஐயா... நாங்க கையாலாகாத ஏழைங்கன்னாலும், பாசம், பந்தம், சொந்த மண்ணு பேரில பிரியம்னு எங்களுக்கும் இருக்கே... சியாமளா சின்னம்மா, பெரியவரு சாரி, வாசு சார் மாதிரி ந்ல்லவங்களோட விடாமுயற்சியால, நான் இங்க வந்து சேர்ந்திட்டேன்.  இந்த மண்ணுக்கு சொந்தம் கொண்டாட நான் வரலீங்க.  என்னோட தாத்தா கடோசி ஆசைப்படி, கொஞச நேரம் இங்க ஏர் ஓட்டணும்.. அப்புறம் ... உள்ளுக்குள்ள பொதஞ்சு கெடக்கிற என் பாட்டி கண்ணம்மாவோட மிச்சத்தை வெளிய எடுத்து ஈமக் கிரியை 
செய்யணும்... இதை செய்ய விடுங்கய்யா

கோகுல் குலுங்க குலுங்க அழ ஆரம்பிக்க, அங்கு கூடியிருந்தோர் மனங்கள் ஒரு சேர பச்சாதாபத்தால் நிரம்பின.

(வாசகர்களே.. கதையை மேலே தொடர மனமில்லாமல் இங்கே முடித்திருக்கிறேன்.  ஆனாலும், கதை சம்பந்தமாக இன்று நடந்த ஒரு முக்கிய நிகழ்வினை, உங்களுடன் நாளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் - ஆசிரியர்)

 photo courtesy: ngm.nationalgeographic.com

No comments:

Post a Comment