6. நினைத்ததும் நடந்ததும்
அவரவர்
நினைத்தபடியே எல்லாம் நடந்துவிடுமா என்ன?
நார்வே
பெண்மணீயின் கூத்துக் குழுவினருடன் கோகுல் மஹாபலிபுரத்துக்குச் சென்றவுடனே, கிருஷ்ணாம்பட்டி இருக்குமிடம் தெரிந்து விடவில்லை. அந்த ஊரிலிருந்து வெகு
காலம் முன்பே கர்நாடகாவில் குடியேறியவர்களின் இன்றைய இளம் வாரிசுகளான நவநீத், கோபால், வெங்கட், ராதா ஆகியோர், கூத்தில் பயிற்சி பெற ஆர்வம் தெரிவித்து கரோலினுக்கு எழுதிய கடிதங்களில்
அவர்களது கர்நாடகா முகவரிகள் இருந்ததே ஒழிய, கிருஷ்ணாம்பட்டி
பற்றிய விவரம் ஏதுமில்லை!
கோகுல் அதனால்
சோர்ந்து விடாமல், போனில் வாசுவைத்
தொடர்பு கொண்டான். வாசு மற்றும்
நரசிம்மாச்சாரியின் உதவியுடன் அந்த நால்வரையும் கர்நாடக விலாசங்களில் தேடிப்
பிடித்து, மஹாபலிபுரத்திலுள்ள கூத்துப்பட்டறைக்கு அழைத்து
வந்தான். அவர்களுடன், தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கூத்து நடத்தி, அப்படியே கிருஷ்ணாம்பட்டியைத் தேட கரோலின் முடிவெடுத்தார்.
கோகுலைப் போலவே, மந்திரி செல்லமுத்துவின் ஜெர்மன் தொழிற்சாலை கனவும் நிறைவேறவில்லை. மந்திரியின் பேச்சை நம்பி, ஜெர்மன் கம்பெனி, நிலத்தைச் சமன்படுத்தும் ராட்சத எந்திரங்களை வரவழைத்து
விட்டது. ஆனால், சாரியின் வழிகாட்டுதலுடன் ஜெயம் நகர்வாசிகளின் போராட்டம் மேலும் சூடு பிடித்து, அதற்கு மீடியா தயவில் ஆதரவு பெருக ஆரம்பித்தது. எரிச்சலடைந்த செல்லமுத்து, ரவுடிகளை ஏவி ஜெயம் நகர் குடியிருப்புகளில்
ரகளை நடத்த், அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்கள்
குவிந்தன! ஏற்கெனவே மக்களின் மனக்
கசப்பால் அரசு ஆட்டம் கண்ட நிலைக்கு வந்திருப்பதால் வருத்தப் பட்டிருந்த
முதலமைச்சர், செல்லமுத்துவைப் பலமாகக் கண்டித்ததாகச் செய்திகள்
பத்திரிகைகளில் வெளியாயின!
தொழிற்சாலை வரும்
சாத்தியக் கூறு இல்லாத நிலை வந்துவிட்டதால், அந்த நிலப்
பரப்பில் வீடு கட்டும் திட்டத்துக்கு முயற்சி செய்ய இதுவே நல்ல தருணம் என முடிவு
கட்டினர் சாமந்தி கம்பெனி நிர்வாகிகள்.
அதன் முதல் கட்டமாக, கம்பெனியின் கிளையொன்றை
ஜெயம் நகரில் உருவாக்கி, அங்கு பாஸ்கர், சியாமளா, வாசு மூவரும் செயல்படத் தொடங்கினர். அதற்கான ஆரம்பப் பணிகளுக்கு சாரியின்
ஒத்துழைப்பு இருந்தது என்பதைச் சொல்ல தேவையில்லை!
ஜெயம்வாசிகளுக்கு
சாமந்தி கம்பெனியின் வருகையால் பெரும் மகிழ்ச்சி.
ஆளுக்கொரு வீடு வாங்கும் ஆசை மட்டுமில்லாமல், உறவினர், தெரிந்தவர் என்று கூட்டு சேர்ந்து கொண்டு, கம்பெனியின் திட்டத்துக்காக ஆவலுடன் எதிர்பார்த்தனர்!.
கிருஷ்ணாம்பட்டி
பற்றிய பேச்சு அடங்கிப் போன இப்போதைய நிலையில், தானே முன்னிலையில் நிற்பதாக பாஸ்கர்
உள்ளுக்குள் பெருமைப் பட்டுக்கொண்டான்.
சியாமளா தனக்கு மனைவியாகக் கிடைக்க தடையேதும் இல்லை.
ஆனால், பாஸ்கரின் அந்த நம்பிக்கைக்கு கோகுல் வடிவில் பின்னடைவு வந்தது. ஆம், சாமந்தி கம்பெனியின் ஜெயம் நகர்
கிளையில் எல்லோரையும் கோகுல் சந்தித்தான்.
“எல்லோரும் நல்லா இருக்கறீங்களா?”
அவனைக் கண்டதில்
சியாமளா, வாசு, சாரி ஆகியோர் ஆனந்தப்பட, பாஸ்கரின் முகம் இறுகியது. சாரி கேட்டார் -
“என்னப்பா கோகுல்...ஆசைப் பட்டபடி, கிருஷ்ணாம்பட்டியை கண்டுபிடிச்சியா?”
“இன்னும் இல்ல சாமி”
“என்னப்பா இது?
உங்க ஊர் பசங்க நாலு பேரையும்
கஷ்டப்பட்டு தேடிப் பிடிச்சு மஹாபலிபுரத்துக்கு கூட்டிண்டு போனே...ஒருத்தனுக்குக்
கூடவா சொந்த ஊர் பத்தின விவரம் தெரியலே?”
“என்ன செய்யிறது சாமி...என்னோட
தாத்தா மட்டும்தான் கடோசி காலம் வரை பொறந்த மண்ணை நெனச்சு பெனாத்தி கிட்டு உசிரை
விட்டாரு..மத்தவங்க பழசை கெட்ட கனவா மறந்துட்டு, கர்நாடகாவில வாழ
கத்துகிட்டாங்க..அவங்க வழி இளவட்டங்க கூட, பரம்பரை கூத்தில டிரெயினிங்
எடுத்துகிட்டு, கர்நாடகத்துக்குத் திரும்பிப் போகத்தான் குறியா இருக்கறாங்க...கிருஷ்ணாம்பட்டி
பேரில அவக பெரிசா ஆசை எதையும் வளர்த்துக்கல...நான்தாங்கய்யா ‘கிருஷ்ண ஜெயந்தி வரைக்குமாவது என்னோட இருங்கப்பா, எப்படியும் ஊர் மண்ணை அதுக்குள்ளாற் கண்டுபிடிச்சு, கூத்து போட்டுடலாம்னு அவங்க கால்ல விழாத கொறயா கேட்டுக்கிட்டிருக்கேன்”
“கோகுல் உன்னோட ஊர்ப் பாசத்த நான்
பாராட்டறேன்...உறுதியா இரு...நீ நெனச்சது கட்டாயம் நடக்கும்”
சியாமளாவின்
பேச்சை இடைமறித்தான் பாஸ்கர். போட்டியை
ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டுமென்ற அவசரம் அவனுக்கு!
“சியாமளா...கிராமத்து ஆசாமிங்களே
எதுவும் தெரியாதுன்னு கைவிரிச்சுட்டாங்க...இன்னும் எதுக்கு கோகுல் வீணான ஆசையை
மனசில வளர்த்துககணும்? இத பாரு
கோகுல்...உனக்கு எங்க கம்பெனியில இங்கியே வேலை போட்டுத் தறேன்..உன்னாட சம்பளத்தை
சேர்த்து வைச்சு, இந்த ஜெயம் நகர் பக்கத்தில நாங்க கட்டப் போற இடத்தில உனக்கு அடக்கமா ஒரு வீடு
கட்டித் தறேன்! வீட்டோட பேரை
கிருஷ்ணாம்பட்டி பவனம்னு வச்சுக்க..சரியா?”
பிரச்சினையைத்
தனக்குச் சாதகமாக மாற்றியதாக மனதுக்குள் பாஸ்கர் சாக்பீஸால் நூத்துக்கு நூறு
போட்டுக் கொண்டதை கோகுலின் பதில் சுத்தமாக அழித்துவிட்டது!
’பாஸ்கர்
ஐயா..நான் ஊர் மண்ணு பேரில பிரியம் வச்சிருக்கிறது, அது எனக்கே சொந்தம்னு
உரிமை கொண்டாட இல்லீங்க...அந்த மண்ணில ஒரு விவசாயியா கொஞச நேரமாவது ஏர்
ஓட்டணும்....அம்புட்டுதாங்க”
இப்போது வாசு
கேட்டான் -
“சரி கோகுல்...இன்னும் நாலே மாசத்தில
கிருஷ்ண ஜெயந்தி வருதே...என்ன பண்ணலாம்?”
வெங்கட்டோட
பாட்டி, கிருஷ்ணாம்பட்டி மெட்றாஸ் பக்கத்தில இருக்கிறதா ஞாபகம்னு சொல்றாங்களாம்..அதனால, சென்னையை சுத்தி இருக்கிற கிராமங்களில கூத்து நடத்திக்கிட்டு
விசாரிக்கிறோமுங்க..இப்ப,
இந்த வெட்டவெளியில கூடாரம் போட்டுகிட்டு வந்திருக்கோம்..உங்க
கம்பெனி வந்திருக்கிறதா கேள்விப் பட்டுதாங்க எல்லோரையும் பாக்க வந்தேன்”
நீ பக்கத்திலியே
வந்திருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு கோகுல்..நீ கூத்தில எப்படி நடிக்கப்
போறேன்னு பாக்க ஆசையா இருக்கு”
சியாமளாவின் பேச்சு
பாஸ்கருக்கு எட்டிக்காயாகக் கசந்தது...சனி விட்டதென்று நினைத்தால், மறுபடி கோகுலா?
(குறிப்பு: வாசகர்களே... முகவுரை எழுதிய ’மகரிஷி நாரதர்’ சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கதையைப் படித்து பதில் தாருங்களேன்.)
...தொடரும்
No comments:
Post a Comment